You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கையில் தொடரும் அரசியல் குழப்பம்: இணக்கமின்றி முடிந்த அனைத்து கட்சி கூட்டம்
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற அனைத்து கட்சித் தலைவர்களுடனான சந்திப்பு இணக்கப்பாடின்றி நிறைவு பெற்றுள்ளது.
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை 5 மணிக்கு ஆரம்பமாகியது.
சுமார் இரண்டு மணி நேரம் இடம்பெற்ற இந்த சந்திப்பு இணக்கப்பாடின்றி நிறைவு பெற்றுள்ளதாக ஆளும் தரப்பினர் தெரிவித்திருந்தனர்.
இன்றைய சந்திப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
எனினும், சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், அதனை சபாநாயகர் கரு ஜயசூரிய நிராகரித்திருந்தார்.
அத்துடன், மக்கள் விடுதலை முன்னணியும் ஜனாதிபதியுடனான இன்றைய சந்திப்பை புறக்கணித்திருந்தது.
அத்துடன், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி அந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகளும் இன்று கலந்து கொண்டிருந்தனர்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை, நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட தரப்பினரிடம் தெரிவித்திருந்ததாக அமைச்சர் விமல் வீரவங்ச கூறியுள்ளார்.
அவ்வாறு நிலையியற் கட்டளையின் பிரகாரம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்படுமாயின், அதற்கு ஒத்துழைப்பு வழங்க தாம் தயார் எனவும் இந்த சந்திப்பின் போது மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் தரப்பினர் கூறியதாக விமல் வீரவங்க குறிப்பிட்டிருந்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி சார்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனே கருத்துகளை பெருமளவில் முன்வைத்திருந்ததாகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை அவர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாகவும் அமைச்சர் விமல் வீரவங்ச இதன்போது குற்றஞ்சுமத்தியிருந்தார்.
இதேவேளை, 113 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், அவர்களின் ஆதரவுக் கடிதங்களையும் எடுத்துக்கொண்டு, தாம் நாளை காலை ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைத் தந்து, தமது பெரும்பான்மையை உறுதிப்படுத்துவதாக ஐக்கிய தேசியக் கட்சி இந்த சந்திப்பின்போது ஜனாதிபதியிடம் கூறியுள்ளது.
ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு பின்னர், ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்துரைத்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான அஜித் பீ பெரேரா மற்றும் லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோர் இதனைக் குறிப்பிட்டிருந்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சியினால் இவ்வாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய பதிலை இன்றைய சந்திப்பில் வழங்கவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
எனினும், இந்த கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை காலை 10 மணிக்கு முன்னர் பதிலொன்றை வழங்குவார் என்ற எதிர்பார்ப்பு தமக்குள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான அஜித் பீ பெரேரா கூறியிருந்தார்.
இந்த நிலையில், நாடாளுமன்றம் மீண்டும் நாளை பிற்பகல் 1 மணிக்கு கூடவுள்ளதுடன், நாளைய தினம் அமைதியான முறையில் நாடாளுமன்ற அமர்வுகளை நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது அனைத்து கட்சித் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: