இலங்கை நாடாளுமன்றத்தில் மிளகாய்ப் பொடி தாக்குதல், சபாநாயகர் மீது நாற்காலி வீச்சு

இலங்கை நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் மீது மிளகாய்ப் பொடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது.

மகிந்த ராஜபக்ச தரப்பினர் தங்கள் மீது மிளகாய்ப் பொடி வீசியும், தண்ணீர்ப் பாட்டில்கள் வீசியும் தாக்கியதாக ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் குற்றஞ்சாட்டினார்.

தொடர்ந்து மூன்றாவது நாளாக பரபரப்புக்கு மத்தியில் நாடாளுமன்றம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 அளவில் கூடுவதாக சபாநாயகர் அறிவித்திருந்தார்.

சபை அமர்வுகளைப் பார்வையிடுவதற்காக வெளிநாட்டு இராஜதந்திரிகளும் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்திருந்தனர்.

சபையை ஆரம்பிக்கும் முன்னதாகவே சபாநாயகர் இருக்கையை மகிந்த ராஜபக்ச ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆக்கிரமித்துக் கொண்டனர்.

சபாநாயகர் ஆசனத்தில் மகிந்த ராஜபக்ச ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னாண்டோ பலவந்தமாக அமர்ந்துகொண்டார்.

சபா பீடத்தைச் சுற்றி நின்றுகொண்ட மகிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்புக் கோசங்களை எழுப்ப ஆரம்பித்தனர்.

ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி. ஆகிய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் எதிர்க்கட்சி ஆசன வரிசையில் அமர்ந்து, வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

படைக்கள சேவிதர் செங்கோலை எடுத்துக் கொண்டு பிரதான நுழைவாயில் வழியாக வர முயற்சித்தார். எனினும், அந்த முயற்சியும் தோல்வியடைந்தது.

45 நிமிடங்களின் பின்னர் நாடாளுமன்றத்தில் கடமையில் இருந்த ஏராளமான போலீசார் சூழ, சபாநாயகர் சபைக்குள் வர முயற்சித்தார்.

இதன்போது, மகிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினரான ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நாற்காலியைத் தூக்கி தாக்கினார்.

சபாநாயகர் தனது ஆசனத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. நடுவில் வேறொரு ஆசனத்தில் அமர்ந்த சபாநாயகர் அறிவிப்பொன்றை வெளியிட்டார்.

''நவம்பர் 14ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையின் முதலாவது பத்தி நீக்கப்படுகிறது. மீண்டும் நம்பிக்கையில்லாப் பிரேரணை நடத்தப்படுகிறது. குரல் வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது'' என்று அறிவித்தார்.

ஆதரவாக யார் வாக்களிப்பது என கேட்டபோது ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட தரப்பினர் கைகளை உயர்த்தி வாக்களித்தனர்.

எதிராக வாக்களிப்போர் யார் எனக் கேட்டபோது மகிந்த ராஜபக்ச தரப்பினர் தொடர்ந்து கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து சபை நடவடிக்கைகளை எதிர்வரும் 19ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்து பாதுகாப்புத் தரப்பினருடன் சபாநாயகர் வெளியேறினார்.

இதன்பின்னர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் சபையில் இருந்து அமைதியாக வெளியேறிச் சென்றனர்.

மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட தரப்பினர் தொடர்ந்தும் சபையில் கூடியிருந்தனர்.

மிளகாய்ப் பொடித் தாக்குதல்

நாடாளுமன்ற அமர்வுகளின்போது மகிந்த ராஜபக்ச தரப்பினர் மிளகாய்ப் பொடியை வீசி தாக்கியதாக ஜே.வி.பி. உறுப்பினர்கள் பலர் குற்றஞ்சாட்டினார்.

மிளகாய்ப்பொடி வீசப்பட்டதில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உடைகளில் கறைகள் படிந்திருந்ததைக் காண முடிந்தது.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாததால், இவ்வாறு மிகவும் கீழ்த்தரமாக நடந்துகொள்வதாக அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

மூன்றாவது முறையாக நம்பிக்கை இல்லாத் தீர்மானம்

பெரும்பான்மை இல்லாத மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக மூன்றாவது முறையாக நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

''மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார். அவரது மந்திரி சபையும் கலைக்கப்பட்டுவிட்டது. அதனால் அரசாங்கத்தை முன்னெடுக்க அவர்களுக்கு எந்த அருகதையும் இல்லை'' என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கடுந்தொனியில் குறிப்பிட்டார்.

இதேவேளை, எந்தவொரு காரணத்திற்காகவும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரை இடைநிறுத்தப் போவதில்லை என ஜனாதிபதி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: