You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'கஜ புயல் நான்கு தலைமுறையாக சேர்த்த சொத்துகளை அழித்துவிட்டது'
காவிரி டெல்டா மாவட்டமான தஞ்சை கடற்கரை பகுதியை கஜ புயல் எதிர்பார்த்ததைவிட மிக மோசமாக பாதித்துள்ளது.
நாகபட்டினம் மாவட்டம் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. இதுதவிர இன்னொரு மோசமான பாதிப்புக்குள்ளான மாவட்டம் தஞ்சை மாவட்டம்.
வங்கக்கடலில் உருவாகிய கஜ புயல் தமிழகத்தை மோசமாக பாதித்து இருந்தாலும் தஞ்சை, நாகை, கடலூர் ஆகிய மாவட்டங்களை மிகவும் மூர்க்கமாகவே தாக்கியுள்ளது.
குறிப்பாக அப்பகுதிகளில் உள்ள மீனவர்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பாதிப்பில் இருந்து மீள இன்னும் குறைந்தது ஆறு மாதங்களிலிருந்து ஒரு வருடம் ஆகும் என அப்பகுதி மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தமிழக தென்கடலோர பகுதிகளான எஸ்பி பட்டினம், கோட்டைப்பட்டினம், கதாப்பட்டினம், மல்லிபட்டினம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் அவர்களது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர்.
தற்போது கஜ புயலால் விசைபடகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் மிகவும் சேதமடைந்துள்ளன.
கடந்த 9ம் தேதி முதல் இந்திய வானிலை ஆய்வு மையம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரித்ததையடுத்து, கடந்த 15 தினங்களாக மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த மல்லிபட்டினம் முதல் சோலியாகுடி வரையிலான சுமார் 33 கிலோமீட்டர் தூரம் உள்ள கடற்கரை கிராம மக்கள் தங்களது படகுகளை கடலில் நங்கூரமிட்டு இருந்தனர்.
பதினைந்தாம் தேதி இரவு ஏற்பட்ட கடும் சூறைக் காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக சுமார் 300க்கும் மேற்பட்ட விசைப் படகுகள், 150க்கும் மேற்பட்ட நாட்டுபடகுள் முற்றிலும் சேதமடைந்தன.
இதனால் மீனவர்களுக்கு தலா ஆறு லட்ச ரூபாய் முதல் 20 லட்சம் வரை இழப்பீடு ஏற்பட்டதோடு தங்களது எதிர்கால வாழ்வாதரத்ததை எப்படி நடத்த போகிறோம் என்ற கேள்வியுடன் உள்ளனர்.
கஜ புயலில் மீன்பிடி விசைப் படகை இழந்த உரிமையாளர் விஜயன் பிபிசி தமிழிடம் பேசினார். "எங்க தாத்தா அப்பா என நாலு தலைமுறையாக சேர்த்த சொத்து மூனு விசைப் படகு. ஒவ்வொரு படகும் 25 முதல் 30 லட்சம் ரூபாய். நாங்க 50-55 வருடங்களா சேர்த்த சொத்து இன்னைக்கு மண்ணோட மண்ணா கிடக்குது. இதனால எங்க வாழ்வதாரத்திற்கு மீண்டு வர எத்தன வருஷம் ஆகும்னு தெரியல எங்க விசைப்படகுகள் இல்லாம எங்காளல வாழவே முடியாது."
"எங்களுக்கு சாகுறது தவிர வேற வழியே இல்ல, இப்ப நாம்ம நிக்கிற இடத்துல இருந்து சுமார் நாலு கிலோ மீட்டார் தூரத்திற்கு படகுகள் எல்லாம் முட்டி மோதி ஒன்றோடு ஒன்ன நொறுங்கி கிடக்குது. அடுத்தது நாங்க என்ன செய்யுறதுன்னே தெரியாம நிக்கறோம்," என கண்ணீருடன் தெரிவித்தார்.
"கஜ புயலால பாம்பனுக்கும் கடலூருக்கும்தான் பாதிப்புனு சொன்னாங்க. ஆனா தஞ்சாவூர் மாவட்ட கடல் பகுதி இவ்வளவு பாதிக்கப்படும்ன்னு எங்களுக்கு தெரியல. எனக்கும் நாற்பத்தி ரெண்டு வயசு ஆகுது. இதுவரை நான இப்படி ஒரு புயல பார்த்ததே இல்லை. இவ்வளவு பெரிய பாதிப்புகள் வரும்ன்னு தெரிஞ்சிருந்தா எதையாவது செஞ்சு எங்க சொத்துகள காப்பாற்றி இருப்போம்."
"எங்க வீடுகள அடமானம் வச்சுதான் இந்த படகுகளை வாங்குனோம். ஆனா இப்போ எல்லாமே கடலோட போச்சு இப்ப கடன் கொடுத்தவங்க வந்து வீட்ட எடுத்துட்டு போய்டுவாங்க, நாங்க எங்க மனைவி குழந்தைங்க கூட ரோட்டுலதான் நிக்கணும்."
"இதுவரைக்கும் யாருமே பார்க்கல பல கோடி ரூபாய்க்கான சொத்துக்கள் சேதமாகியிருக்கு. ஆனா இதுவரைக்கும் யாரும் வரல. புயல் வரதுக்கு முன்னாடி எல்லா அதிகாரிகளும் வந்தாங்க, போட்டோ எடுத்தாங்க. செல்ஃபி எடுத்தாங்க. ஆனா, புயல் பாதிப்புக்கு பின்னாடி யாருமே இதுவரை வரல என மிகுந்த வேதனையுடன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்" மீனவர் மகேஷ்.
குறைந்தபட்சமாக தஞ்சை மாவட்ட மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மீட்டு எடுக்க ஆறு மாதத்திலிருந்து ஒரு வருடம் ஆகும்.
இந்த ஆறு மாதத்திலிருந்து ஒரு வருடம் வரைக்கும் அதிகாரிகள் மீனவர்களுக்கு மாற்று தொழில் தந்தால் மட்டுமே மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை நடத்த முடியும் என தஞ்சை மாவட்ட மீனவ சங்க தலைவர் முருகேசன் தெரிவித்தார்.
இதுகுறித்து தஞ்சை மாவட்ட மீன்வளத்துறை ஆய்வாளர் துரைராஜனிடம் கேட்டபோது, "தஞ்சை மாவட்டத்தில் மொத்தமாக 27 மீனவ கிராமங்களில் 1,783 நாட்டு படகுகள் உள்ளன. இவற்றில் 60க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்துள்ளன. மீன் பிடி துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 243 விசைப்படகுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. மேலும் முழுமையான சேத அறிக்கை ஆய்வுக்கு பின்னர் தெரிய வரும். சேதம் குறித்து 16 பேர் கொண்ட மீன் வளத்துறை அதிகாரிகள் குழு கடந்த இரண்டு நாட்களாக ஆய்வு பணியை மேற்கொண்டு வருகின்றார். இந்த ஆய்வு முடிவுகள் தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட விரைவில் மீனவர்களுக்கு உரிய இழப்பீடு பெற்றுக் கொடுக்கப்படும்," என தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :