ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய பெரு அதிபர் தஞ்சம் கோருகிறார்

கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.

அடைக்கலம் கோரும் அதிபர்

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி உள்ள பெரு முன்னாள் அதிபர் ஏலன் கார்ஸியா, உருகுவே தூதரகத்தில் அடைக்கலம் கோரி உள்ளார். பிரேசில் கட்டுமான பெரும் நிறுவனம் ஒன்றுக்கு ஒப்பந்தம் அளிக்க ஊழல் பெற்றதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டை மறுக்கிறார் கார்ஸியா.

இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்கிறார் அவர். நாட்டைவிட்டு கார்ஸியா வெளியேற தடை செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் தூதரகத்தில் அடைக்கலம் கோரி உள்ளார்.

தேர்தல் வேண்டாம்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு முன்னதாக தேர்தல் நடத்தப்படுவதை எச்சரித்துள்ளார். அவரது அரசில் கூட்டணி குழப்பங்கள் தொடர்கின்றன. ஞாயிற்றுக்கிழமை நேரலையில் பேசிய அவர், இப்போது நிலவும் பாதுகாப்பற்ற சூழலில், தேர்தலை முன்னதாக நடத்துவது பொறுப்பின்மை ஆகும் என்று கூறி உள்ளார். காஸா கிளர்ச்சியாளர்களுடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதுகாப்பு அமைச்சர் தம் பதவியை ராஜிநாமா செய்தார். அப்போதிலிருந்து அரசியல் குழப்பம் அங்கு நிலவுகிறது.

ஏமன் போர்

ஐ.நா அமைப்பு கேட்டுக் கொண்டதை அடுத்து, தாங்கள் செளதி தலைமையிலான படைக்கு எதிரான வான்வழி மற்றும் ஏவுகணை தாக்குதலை நிறுத்துவதாக ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் கூறி உள்ளனர். சர்வதேச அளவில் மிக மோசமான மனிதநேய நெருக்கடியாக கருதப்படும் இந்த போர் கடந்த மூன்றாண்டாக நடந்து வருகிறது. இந்த போரின் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர். கோடிக்கணக்கணக்கான மக்கள் பசியில் வாடி வருகின்றனர்.

பிரான்ஸ் போராட்டம்

பிரான்ஸில் உயர்ந்துவரும் எரிபொருள் விலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பங்கேற்றவர்களில் 400 பேர் காயமடைந்துள்ளனர். 300 போராட்டக்காரர்களை விசாரித்து வருவதாகவும், 157 பேரை காவல் துறை கட்டுப்பாட்டில் எடுத்துள்ளதாகவும் பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் கூறுகிறது. ஏறத்தாழ 288,000 பேர் கலந்து கொண்ட இந்த போராட்டம் பல இடங்களில் அமைதியாக நடைபெற்றாலும், சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. 'மஞ்சள் பனியன்' என்று அழைக்கப்படும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சாலை மறியல்களில் ஈடுபட்டு போராடி வருகிறார்கள்.

துயர் தோய்ந்த ஒன்று

செளதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை தொடர்பான ஆடியோ பதிவு குறித்து தனக்கு விவரிக்கப்பட்டதாகவும் ஆனால் தான் அதை கேட்கப்போவதில்லை என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்."அது ஒருத்தரின் துயரை சொல்லும் டேப், கொடூரமான ஒன்று" என ஃபாக்ஸ் நியூஸில் தெரிவித்தார் அவர்.சிஐஏ ஜமால் கஷோக்ஜியின் கொலை செளதியின் பட்டத்து இளவரசரால் ஆணையிடப்பட்டது என்று தெரிவித்தது. ஆனால் வெள்ளை மாளிகை அதனை இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை.ஆனால் இந்த குற்றச்சாட்டை செளதி மறுத்துள்ளது இதில் பட்டத்து இளவரசருக்கு எந்தவித தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :