பஞ்சாபில் அமிர்தசரஸ் அருகே குண்டு வெடிப்பு - 3 பேர் பலி

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே உள்ள அஜ்னலா நகரத்தில் குண்டு வெடித்ததில் மூன்று பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை பிரசங்கத்திற்காக பல பக்தர்கள் கூடியிருந்த நிரன்காரி பவனில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது என துணை ஆணையர் கே.எஸ்.சங்கா பிபிசியிடம் தெரிவித்தார்.

குண்டுவெடிப்புக்கு காரணமாணர்கள் குறித்து இதுவரை தகவல் எதுவும் தெளிவாகத் தெரியவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

கூடியிருந்த நிரன்காரிகள் மீது இரு சக்கர வாகனத்தில் வந்த சந்தேக நபர்கள் கிரனேடுகளை வீசிவிட்டு தப்பியதாக, எல்லை சரக காவல்துறை மண்டலத் தலைவர் சுரீந்தர் பால் கூறியுள்ளார்.

இதேபோல ஒரு தாக்குதல், ஜலந்தரில் உள்ள காவல் சோதனைச் சாவடி மீது சில வாரங்களுக்கு முன்பு நடந்தது.

ஜெய்ஷ்-ஈ-முகமத் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் பஞ்சாப் மாநிலத்துக்குள் நுழைந்துள்ளதாக கடந்த வாரமே உளவுத் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. அந்த அமைப்பைச் சேர்ந்த 5-6 பேர் பெரோஸ்பூர் பகுதியில் பதுங்கி இருப்பதாக அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது.

நீண்டகாலமாகத் தொடரும் பதற்றம்

நிரன்காரி எனப்படுவது ஒரு மதப்பிரிவாகும். இவர்களுக்கும் பாரம்பரிய சீக்கியர்களுக்கும் இடையே வெளிப்டையாகத் தெரியாவிட்டாலும், பல ஆண்டுகளாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

அவர்கள் எந்த மதத்துடனும் தங்களைத் தொடர்பு படுத்திக்கொள்ளாமல், ஆன்மிக நம்பிக்கை உள்ளவர்களாக மட்டுமே தங்களை அடையாளப் படுத்திக்கொள்கின்றனர்.

அவர்களுக்கு வழக்கமான சீக்கியர்களைப் போல் அல்லாமல் உயிருடன் இருக்கும் குருக்களின் மீது நம்பிக்கை உள்ளது. அவர்களும் சீக்கியப் புனித நூலான குரு கிராந்த் சாகிப் மீது பெரும் பற்று உள்ளது.

1978ஆம் ஆண்டு நிரன்காரிகளுக்கும் பாரம்பரிய சீக்கியர்களுக்கும் இடையேயான மோதலில் இரு தரப்பிலும் 18 பேர் கொல்லப்பட்டனர். இது பஞ்சாபில் தீவிரவாத ஆயுதப் போராட்டங்களின் தொடக்கம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

ஏப்ரல் 1980இல் நிரன்காரி பிரிவின் அப்போதைய அப்போதைய குருவாக இருந்த குருபச்சன் சிங் என்பவரை, டெல்லியில் வைத்து சீக்கிய நம்பிக்கையை பின்பற்றும் ரஞ்சித் சிங் என்பவர் கொலை செய்தது சிக்கலை அதிகரித்தது. எனினும் சமீப ஆண்டுகளில் இரு தரப்பும் இணக்கத்துடன் உள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: