You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மல்லையா, அம்பானியிடம் உள்ள மோசடி பணம் பறிமுதல்" - ராகுல் காந்தி
இன்று முக்கிய தமிழ் நாளேடுகளில் வெளியான செய்திகள் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம்.
தினமணி : மல்லையா, அம்பானியிடம் உள்ள மோசடி பணம் பறிமுதல் - ராகுல் காந்தி
காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, அனில் அம்பானி, நீரவ் மோடி, மெஹூல் சோக்ஸி ஆகியோரிடம் இருக்கும் மோசடி பணம் பறிமுதல் செய்யப்படும்; அந்த பணத்தை கொண்டு, விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதியளித்துள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை 2ஆம் கட்டத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து, கோரியா மாவட்டத்தில் ராகுல் காந்தி சனிக்கிழமை பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், "பிரதமர் நரேந்திர மோதி தனக்கு வேண்டப்பட்ட தொழிலதிபர்களின் ரூ.3.5 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளார். ஆனால் ஏழை விவசாயிகளின் கடனை அவர் தள்ளுபடி செய்யவில்லை.
சத்தீஸ்கர் மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் வென்று, மாநிலத்தில் ஆட்சியமைத்ததும், விவசாயிகள் அனைவரின் கடனையும் 10 நாள்களில் காங்கிரஸ் தள்ளுபடி செய்யும். சத்தீஸ்கரில் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வதற்கான நிதி, விஜய் மல்லையா, நீரவ் மோடி, அனில் அம்பானி போன்ற தொழிலதிபர்களிடம் இருந்து வரும். அவர்களிடம் இருக்கும் பணத்தை எடுத்து, விவசாயிகள் கடனை நாங்கள் தள்ளுபடி செய்வோம்" என்று கூறியதாக அந்நாளிதழ் செய்தி மேலும் விவரிக்கிறது.
தினமலர் : இரட்டை இலை சின்ன விவகாரம்
அ.தி.மு.க.,வின் இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், சசிகலாவின் அக்கா மகன், தினகரன் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய, டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
வழக்கில் இருந்து, தினகரனைவிடுவிக்க மறுத்த நீதிமன்றம், குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதற்காக, வரும், டிசம்பர், 4ல் நேரில் ஆஜராகும்படி, தினகரனுக்கு உத்தரவிட்டுள்ளது.
அ.தி.மு.கவில் ஏற்பட்ட குழப்பத்தில், அதன் தேர்தல் சின்னமான இரட்டை இலை சின்னத்தை, தேர்தல் கமிஷன் முடக்கியது. இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து, தேர்தல் கமிஷன் விசாரித்து வந்தது.சின்னத்தை மீட்பதற்காக, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு, லஞ்சம் கொடுக்க முயன்றதாக, தினகரன் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அதையடுத்து,கடந்தாண்டு ஏப்ரலில், கைது செய்யப்பட்ட, தினகரன், ஜாமினில் விடுவிக்கப் பட்டார்.
இதற்கிடையே, சென்னை, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில், சுயேச்சையாக போட்டியிட்ட தினகரன் வெற்றி பெற்றார்.
தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி, தினகரன் சார்பில், டில்லி பட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் உள்ள, சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற புகாரில், தினகரன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த, போதிய முகாந்திரம் உள்ளது என்று குறிப்பிட்டுள்ள நீதிபதி, குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதற்காக, வரும், டிசம்பர் 4ம் தேதி, தினகரன் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறியதாக விவரிக்கிறது இச்செய்தி.
தினத்தந்தி : வளிமண்டலத்தில் புதிய மேலடுக்கு சுழற்சி
வங்க கடலில் உருவான 'கஜா' புயல், தமிழகத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டு நேற்று முன்தினம் அதிகாலை நாகை-வேதாரண்யம் இடையே கரையை கடந்தது. 'கஜா' புயலால் நாகை, திருவாரூர், தஞ்சை, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல், கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்பட்டன.
இந்தநிலையில் வளிமண்டலத்தில் உருவாகி இருக்கும் புதிய மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை (திங்கட்கிழமை) முதல் 3 நாட்களுக்கு மழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறுகையில், தெற்கு அந்தமான் பகுதி வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை மாலை தெற்கு வங்கக்கடல் பகுதியில் குறிப்பாக மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும்.
இது நாளை மற்றும் நாளை மறுநாளில் மேற்கு திசையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உள்ள தமிழக கடற்கரை பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதனால் 19-ந்தேதி முதல் 21-ந்தேதி வரையிலான 3 நாட்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யக்கூடும் என்கிறது அந்நாளிதழ் செய்தி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: