You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாகிஸ்தானில் இந்துக்கள் ஏன் சீக்கிய மதத்திற்கு மாறுகிறார்கள்?
- எழுதியவர், ரியாஜ் சோஹைல்
- பதவி, பிபிசி
சீக்கியர்களின் புனித மத நூலான குரு கிரந்த் சாஹிப் ஊர்வலமாக கொண்டு செல்லப்படும்போது மிகுந்த உற்சாகத்துடன் அதில் கலந்துகொள்கிறார் கிருஷ்ணா சிங். அனைவருடனும் இணைந்து 'சத்னாம் வாஹே குரு' என்று முழக்கமிட்டுக்கொண்டே செல்கிறார்.
சீக்கிய மதத்தின் அடையாளமாக, கறுப்புத் தலைப்பாகை அணிந்திருக்கும் கிருஷ்ணா சிங், முன்பு ராம பக்தராக இருந்தவர். சில ஆண்டுகளுக்கு முன்னர் சீக்கிய மதத்தைத் தழுவினார்.
கராச்சியின் புறநகர்ப் பகுதியில் அமைந்திருக்கும் இந்தக் குடியிருப்பில், பெரும்பாலானோர் முன்பு இந்துக்களாக இருந்தவர்கள். ஆனால், இப்போது இங்கு 40 சீக்கிய குடும்பங்கள் இங்கு வசிக்கின்றன. அவர்கள் அனைவரும் இந்து மதத்தில் இருந்து சீக்கிய மதத்திற்கு மாறியவர்கள்.
இங்கு வசிப்பவர்களில் பெரும்பான்மையானோர் மலைவாழ் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள். தர்பூசணி விவசாயத்தில் வல்லுனர்களான இவர்கள், தண்ணீர் பிரச்னை தலையெடுத்து, விவசாயம் பாதிக்கப்பட்டதால், நகரங்களுக்கு இடம்பெயர்ந்துவிட்டார்கள்.
கிருஷ்ணா சிங்கின் நான்கு சகோதரர்கள், இரண்டு மகன்கள், இரு உறவினர்கள் என அனைவரும் குடும்பத்தோடு சீக்கிய மதத்திற்கு மாறிவிட்டார்கள்.
"இந்துவாக இருந்தபோது சாமானியர்களாக இருந்த நாங்கள், சீக்கியர்களாக மாறியதும், சர்தார் (தலைவர்) ஆகிவிட்டோம். ஆம், எங்களை அப்படித் தான் என்று அழைக்கிறார்கள்" என்கிறார் கிருஷ்ணா சிங்.
'எங்களுடன் அமர்ந்து சாப்பிடுங்கள்'
கிருஷ்ணா சிங் கூறுகிறார், "நாங்கள் ஊர்வலமாகச் செல்லும்போது, நகரத்தில் உள்ளவர்களில் கையில் மோரை வைத்துக் கொண்டு நடந்து செல்லும் எங்கள் தாகத்தை தணிப்பார்கள். ஆங்காங்கே பந்தல் அமைத்துத் தண்ணீரும் உணவும் அளித்து மரியாதை செய்வார்கள், அவர்களுக்குச் சமமாக நடத்துவார்கள்."
பாகிஸ்தானில் உள்ள சீக்கிய சமூகத்தினரின் நிதியுதவியுடன் இந்த இந்து குடியிருப்பில் பெரிய குருத்வாரா ஒன்று கட்டப்படுகிறது. ஏற்கனவே இரண்டு இந்து மத ஆலயங்கள் இருக்கும் இந்தப் பகுதியில் 500 பேர் அமரக்கூடிய குருத்வாரா கட்டப்படுகிறது.
இந்த குருத்வாராவின் பாதுகாவலர் துரு சிங் கூறுகிறார், "பெரும் திரளான இந்து சமுதாயத்தினர், சீக்கியர்களின் புனிதத்தலமான நன்கானா சாஹிப்பிற்கு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்."
"லண்டன், பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் பிற நாடுகளிலிருந்து வரும் சீக்கியர்கள் எங்களுடன் இணக்கமாக இருப்பார்கள். அவர்கள் அன்புடன் பழகுவதைப் பார்த்தே இந்து மக்கள் சீக்கிய மதத்தைத் தழுவுகிறார்கள்."
கடந்த காலங்களில், இந்து தெய்வங்களின் சிலைகளை அருகிலுள்ள பிற மதத்தினர் கற்களை வீசி அவமதிப்பார்கள். ஆனால், இப்போது அதுபோன்ற சம்பவங்கள் நடப்பதில்லை.
இதற்குக் காரணம் குருத்வாராதான் என்கிறார் துரு சிங்.
கடந்த சில நாட்களுக்கு முன், குரு கோவிந்த் சிங்கின் ஆண்டுவிழா கொண்டாடப்பட்டபோது, சீக்கிய சமூகத்தினரின் பாதுகாப்புக்காக நான்கு போலீசாரும், வேறு இரு பாதுகாவலர்களும் அனுப்பப்பட்டனர்.
கராச்சி நகரில் மத்தியில் அமைந்திருக்கும் ஆராம்பாக் குருத்வாரா, 24 ஆண்டு கால நீண்ட சட்ட போராட்டங்களுக்கு பிறகு தற்போது திறக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் தனி நாடாக உருவாவதற்கு முன்பே கராச்சி நகரில் ஆறு குருத்வாராக்கள் இருந்தன. ஆனால், பிரிவினைக்குப் பிறகு, அதிகளவிலான சீக்கியர்கள் இந்தியாவுக்குச் சென்றதால் அவை வெறிச்சோடிக்கிடந்தன அல்லது அவை பிறரால் ஆக்கிரமிக்கப்பட்டன. ஆனால், இப்போது நிலைமை மாறி வருகிறது.
பழைய குருத்வாராக்கள் திறக்கப்பட்டு, மதச் சுதந்திரம் கொடுக்கப்பட்டால், சீக்கியர்களின் எண்ணிக்கை பாகிஸ்தானின் விரைவாக அதிகரிக்கும் என்று சில சீக்கியத் தலைவர்கள் கருதுகிறார்கள்.
1100 இந்துக்களை சீக்கியர்களாக மாறியிருப்பதாக பெருமையுடன் சொல்கிறார் பாகிஸ்தான் வழக்கறிஞர் சர்தார் ஹீரா சிங்.
"அவர்களை குருத்வாராவுக்கு வரச்சொல்லி, குரு கிரந்தத்தை படித்து அதன் பொருளைச் சொல்லி விளக்குவேன். குருவின் உபதேசங்கள் அவர்களின் மனதில் பதிந்து, அது உண்மை என்று உணரும்போது, சீக்கியர்களாக மாற விருப்பம் தெரிவிப்பார்கள்"
"இப்படியே என் மூலமாக சுமார் 1100 இந்துக்கள் சீக்கியர்களாக மாறிவிட்டார்கள். ஏழ்மையில் உழலும் இவர்களை யாரும் கண்டுக்கொள்வதில்லை, இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள், இவர்கள் குடிப்பதற்கு ஒரு குவளை நீரைக் கூடக் கொடுக்கமாட்டார்கள்."
சிந்து மாகாணத்தில் இருக்கும் இந்துக்களில் பெரும்பான்மையானவர்கள் குரு நானக்கின் பக்தர்கள். அவர்களை இங்கு 'நானக் பிரிவினர்' என்று அழைப்பார்கள். அவர்களின் ஆலயங்களில் குருகிரந்த புனித நூல் வைக்கப்பட்டிருந்தாலும், வணங்கப்படுவதில்லை.
"உருவ வழிபாடு கூடாது என்பது குரு நானக்கின் உபதேசம். அவர்கள் குருவின் உபதேசத்தைப் பின்பற்றுவதில்லை. இது சீக்கிய மதத்திற்கு எதிரானதாக இருப்பதால் அவர்களை அப்படியே முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை," என்கிறார் சர்தார் ஹீரா சிங்.
அரசியல் காரணங்கள்
இந்த மதமாற்றத்தின் பின்னணியில் அரசியல் காரணங்களும் இருக்கின்றன என்கிறார் பாகிஸ்தான் ஹிந்து கவுன்சிலின் தலைவர் மங்கலா ஷர்மா.
20 அல்லது 25 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு சீக்கியர்களே இல்லை என்று கூறும் அவர், சட்டமன்றத்தில் சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீட்டில் சீக்கியர்களுக்கென ஒதுக்கீடே இல்லை என்கிறார்.
"2000வது ஆண்டில், சில அரசியல்வாதிகள், மதமாற்றத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார்கள். பொருளாதார நிலையில் நலிந்திருக்கும் இந்துக்களைக் குறிவைத்து சீக்கியர்களாக மாற்றி அரசியல் லாபமடையும் முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கினார்கள்" என்கிறார் மங்கலா ஷர்மா.
"பாகிஸ்தானிய இந்துக்களுக்கு பிற நாடுகளின் ஆதரவோ உதவியோ கிடைப்பதில்லை. பாகிஸ்தானுடன் கருத்து வேறுபாடுகளைக் கொண்டுள்ள இந்தியாவிடம் இருந்தும் அவர்கள் எந்த உதவியையும் பெற விரும்பவில்லை".
"இதற்கு மாறாக, சீக்கிய சமூகம் உலகளாவியதாகவும், நிதி நிலைமையில் வலுவாகவும் உள்ளது. அவர்களின் ஒருங்கிணைப்பும், பிறரை அரவணைக்கும் போக்கும் இங்கு வறிய நிலையில் இருக்கும் இந்துக்களை ஈர்ப்பது இயல்பானதே," என்கிறார் மங்கலா சிங்.
உலகளவில் பரவியிருக்கும் சீக்கிய சமுதாயம், பாகிஸ்தானை தங்கள் சமூகத்தினரின் நட்பு நாடாகக் கருதுகிறது. இதனால், பாகிஸ்தானில் சீக்கிய சமூகத்தினரை அரசியல் மற்றும் சமய ரீதியான ஏற்றுக்கொள்ளும் போக்கு நிலவுகிறது. இவையே பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள், சீக்கியர்களாக மாறுவதற்கு காரணம் என்று கருதப்படுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- ட்விட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்