You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கடிக்க வந்த மலைப்பாம்பை வறுத்து தின்ற இந்தோனீசிய கிராமம்
ஒரு இந்தோனீசிய கிராமத்தில் ஒரு பிரும்மாண்ட மலைப் பாம்புக்கும் பாதுகாவலர் ஒருவருக்கும் இடையே நடந்த சண்டையில் அந்தப் பாம்பு தோற்று இறந்தது. பிறகு, அந்த மலைப் பாம்பை கிராம மக்கள் வெட்டிச் சாப்பிட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமையன்று சுமத்ராவின் பட்டங் கன்சால் மாவட்டத்தில் உள்ள பாமாயில் தோட்ட சாலையில், இந்த மிகப்பெரிய மலைப்பாம்பை பாதுகாவலர் ராபர்ட் நபாபன் பார்த்துள்ளார்.
26 அடி நீளமுள்ள அந்த பாம்பைப் பிடிக்க நபாபன் முயற்சித்துள்ளார் என தகவல்கள் கூறுகின்றன. பாம்பு அவரைத் தாக்கியுள்ளது. சில கிராம மக்கள் உதவியுடன் நபாபனும் அதைத் திருப்பித் தாக்கினார். கடைசியில் பாம்பு இறந்துவிட்டது.
நபாபேன் கடும் காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார். நபாபன் போல இந்தப் பாம்பு அதிர்ஷ்டசாலியல்ல. கிராம மக்கள், பாம்பைத் துண்டு துண்டாக வெட்டி, வறுத்துச் சாப்பிடுவதற்கு முன்பு பாம்பின் உடல் கிராமத்தில் தொங்கவிடப்பட்டது.
"நான் அதை பிடிக்க முயற்சித்தபோது எனது கையை கடித்தது. அதனிடம் சண்டையிட்டு தப்பித்தேன்"என இந்தோனீசிய செய்தி நிறுவனமான டெடிக்கிடம் நபாபன் கூறியுள்ளார்.
37 வயதான நபாபன், பாம்பை எதற்காகப் பிடிக்க முயற்சித்தார் என்பதற்கான சரியான காரணத்தைக் கூறவில்லை. ஆனால், இந்த பாம்பினால், கிராம மக்களால் சாலையை கடக்க முடியவில்லை என அவர் கூறுகிறார்.
அவர், பயத்தில் இருந்த மக்களைப் பாதுகாக்கவா அல்லது சாலையை சரி செய்யவா, எதற்காக பாம்புடன் சண்டையிட்டார் என்பது குறித்து மாறுபட்டத் தகவல்கள் வருகின்றன.
பாதுகாவலரின் இடது கையை மலைப்பாம்பு தனது பற்களால் கடித்ததாக உள்ளூர் போலீஸார் ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளனர்.
பிறகு அவர் பெக்கன்பரு நகர மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் இன்னும் குணமடைந்து வருவதாக பட்டங் கன்சல் மாவட்ட அரசின் தலைவர் எளினார்யோன் கூறுகிறார்.
நபாபன் கைகள் மோசமாகக் காயமடைந்திருப்பதாகவும், அவரது கையினை மருத்துவர்கள் வெட்ட வேண்டியதிருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
நல்ல சுவை
சுமத்ராவின் தொலைதூர மாவட்டமான இப்பகுதியில் மிகப்பெரிய மலைப்பாம்புகள் இருப்பது சாதாரணமான ஒன்று என அவர் கூறுகிறார். "வறண்டக் காலத்தில் குடிநீரைத் தேடி அவை வெளியே வருகின்றன. அதே போல மழையில் குளிக்கவும் வெளியே வருகின்றன. ஒரு வருடத்திற்குக் குறைந்தது 10 பாம்புகளையாவது இங்குக் காணமுடிவும்" என எளினார்யோன் கூறியுள்ளார்.
"பாமாயில் தோட்டத்தில் வழக்கமாக நிறைய எலிகள் இருக்கும். இந்த எலிகளைத்தான் பாம்புகள் வேட்டையாடுகின்றன" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மிகப்பெரிய மலைப்பாம்பு மக்களால் உண்ணப்பட்டது அவருக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை,"அது மிகவும் சுவையாக இருக்கும் என எனது நண்பர்களிடம் இருந்து கேள்விப்பட்டிருக்கிறேன். 7 மீட்டர் நீளமான இப்பாம்பில், நிறையக் கறி இருந்திருக்கும்!"
"பாம்பும் ரத்தத்திற்கு குணப்படுத்தும் தன்மை இருப்பதாக சிலர் நம்பும் நிலையில், அவற்றை மருத்துவத்திற்குப் பயன்படுத்தலாம்" எனவும் அவர் கூறுகிறார்.
கடந்த மார்ச் மாதம் ஒரு இந்தோனீசிய கிராமவாசி, மலைப்பாம்பின் வயிற்றில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட ஒரு வினோத சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- ட்விட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்