You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு - காரணமும் தீர்வும்
அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, மிக கடுமையான அளவு வீழ்ச்சியடைந்திருக்கிறது. இலங்கையின் வரலாற்றில், இதற்கு முன்னர் இந்தளவுக்கு அதன் நாணயப் பெறுமதி வீழ்ச்சியடைந்ததில்லை என்று கூறப்படுகிறது.
தற்போதைய அரசாங்கம் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 09ஆம் தேதி, ஆட்சியமைத்த போது, அமெரிக்க டாலர் ஒன்றின் இலங்கைப் பெறுமதி 131 ரூபாய் 25 சதமாக இருந்தது. ஆனால், இன்றைய தினத்தில் (03 ஆம் தேதி) அமெரிக்க டாலர் ஒன்றின் பெறுமதி 170 ரூபாய் 75 சதமாக உள்ளது.
இதன் காரணமாக, நாட்டில் எரிபொருளுக்கான விலை சடுதியாக அதிகரித்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் 117 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோலின் தற்போதைய விலை, 149 ரூபாயாகும். இதன் காரணமாக, உள்நாட்டில் பெரும்பாலான பொருட்களின் விலைகளில் சடுதியான அதிகரிப்பும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் தன்னிச்சையான செயற்பாடுகள் காரணமாகவே, இலங்கையின் நாணயப் பெறுமதி இவ்வாறு வீழ்ச்சியடைந்துள்ளதாக, முன்னாள் ஜனாதிபதி சந்ரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றம்சாட்டியிருக்கின்றார்.
எவ்வாறாயினும் ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கை ரூபாயின் மதிப்பிறக்கம் குறைந்த மட்டத்திலேயே உள்ளதாக, நிதி மற்றும் ஊடக அமைச்சகம் கூறியுள்ளது.
மே மாதத்துக்குப் பின்னர் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 06 சதவீதத்தால் குறைந்துள்ள நிலையில், இந்திய பணப் பெறுமதி 11 சத வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதி ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
எது எவ்வாறாயினும், இது தற்காலிகமானதொரு பிரச்சனையாகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க சில நாட்களுக்கு முன்னர் கூறியிருந்தமை இங்கு நினைவு கொள்ளத்தக்கது.
இலங்கையின் நாணயப் பெறுமதியின் வீழ்ச்சி குறித்து, மேற்கண்டவாறான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், இது தொடர்பான தெளிவினையும், விளக்கத்தினையும் பெற்றுக் கொள்ளும் பொருட்டு, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிதியியல் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி முனைவர் ஏ.எல். அப்துல் ரஊப் அவர்களை பிபிசி தமிழ் சந்தித்துப் பேசியது.
"அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனது நாட்டின் நலனை முன்னிறுத்தி எடுத்த சில தீர்மானங்களின் காரணமாகத்தான், டாலருக்கு நிகரான இலங்கையின் நாணயப் பெறுமதி வீழ்ச்சி கண்டுள்ளது என, இதன்போது கலாநிதி ரஊப் கூறினார்.
"அமெரிக்காவுக்கும் நிதி நெருக்கடி உள்ளது. அதனால், அங்கும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், பொருளாதார ரீதியிலான சிந்தனையுள்ளவர். அடிப்படையில் அவர் ஒரு வியாபார பிரமுகராவார். எனவே, அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சிக்கான காரணம் என்ன என்பதை, அவர் விளங்கிக்கொண்டு, அதனைச் சரி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்".
"சர்வதேச பொருளாதாரமானது அமெரிக்க டாலருடன் பின்னிப் பிணைந்துள்ளதால், உள்நாட்டில் டிரம்ப் மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள், ஏனைய பல நாடுகளுக்கு மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்தியிருக்கின்றன".
"உதாரணமாக, அமெரிக்காவின் மத்திய வங்கியானது திடீரென தனது வட்டி வீதத்தினை அண்மையில் அதிகரித்தது. இதனால், பிற நாடுகளில் டாலரில் முதலீடு செய்திருந்தோர், அவற்றினை மீளப்பெற்று, அமெரிக்காவில் முதலீடு செய்யத் தொடங்கினார்கள். இலங்கையில் முதலீடு செய்தவர்களும் இவ்வாறு, அமெரிக்காவை நோக்கிச் சென்றனர். இலங்கையின் நாணயப் பெறுமதி வீழ்வதற்கு இதுதான் பிரதான காரணமாகும்".என, பிபிசி தமிழிடம் கலாநிதி ரஊப் தெரிவித்தார்.
"மேலும், வெளிநாட்டுப் பொருள்களுக்கான இறக்குமதி வரியையும் அமெரிக்கா அதிகரித்துள்ளது. குறிப்பாக, சீனப் பொருட்களுக்கு, அதிக வரியினை விதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. உலக சந்தையில் சீனாதான் அமெரிக்காவுக்கு சவாலாக உள்ளது. அதனால்தான் சீனப் பொருட்களுக்கான இறக்குமதி வரியினை அமெரிக்கா அதிகரித்துள்ளது. இலங்கையின் நாணய மதிப்பிறக்கத்துக்கு இந்த நடவடிக்கையும் ஒரு காரணமாகும்" என்றும் அவர் கூறினார்.
"அமெரிக்காவின் இவ்வாறான நடவடிக்கைகளால் இலங்கை நாணயத்தில் ஏற்பட்டுள்ள மதிப்பிறக்கத்தினை, இலங்கை அரசாங்கத்தின் ஸ்திரமற்ற தன்மை, இங்கு நிலவும் மோசமான காலநிலை மாற்றங்கள் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் போன்றவை மேலும் தீவிரமடையச் செய்துள்ளன".
"இருந்தபோதும், இவ்வாறான நிலையினை தடுப்பதற்குரிய சிறந்த உபாயங்கள் இலங்கையிடம் இல்லை. இன்னொருபுறமாக, இலங்கைக்கு வருமானம் பெற்றுத் தரக்கூடிய பெரும்பாலான துறைகள் தற்போது வீழ்ச்சியடைந்துள்ளன. மேலும், வெளிநாடுகளிடம் இலங்கை பெற்றுள்ள கடன்களையும், அதற்கான வட்டியினையும் டாலரில்தான் மீளச் செலுத்த வேண்டியுள்ளது. இவையும் நாணய மதிப்பிறக்கத்தின் சுமையினை இலங்கைக்கு அதிகரித்துள்ளது" எனவும், அவர் விவரித்தார்.
"இந்த நிலவரத்திலிருந்து தப்பிக்க வேண்டுமானால், இலங்கையின் உள்நாட்டு உற்பத்தியினை அதிகரிப்பதோடு, ஏற்றுமதி பொருட்களின் அளவினைவும் உயர்த்த வேண்டும். மேலும், இலங்கைக்குள் டாலரை கொண்டு வந்து செலவு செய்வதற்கான வழி வகைகளும் உருவாக்கப்பட வேண்டும். அதன்பொருட்டு இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் தொகையை அதிகரிக்க முடியும். சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதன் மூலமாக இதனைச் சாதிக்கலாம்".
"வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் மூலம், முன்னர் இலங்கைக்கு கிடைத்து வந்த வருமானத்தில் தற்போது வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. வேலை வாய்ப்புக்களை வழங்குவதில் மத்திய கிழக்கு நாடுகளில் கொண்டுவரப்பட்டுள்ள கட்டுப்பாடுகளும், இலங்கையிலிருந்து பெண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை நாடிச் செல்வதில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியும் இதற்கான முக்கிய காரணங்களாகும். இவை போன்ற பல்வேறு காரணங்களால், இலங்கையின் நாணயப் பெறுமதியின் வீழ்ச்சியை தடுக்க முடியாமல் உள்ளது.
வெளிநாட்டுப் பொருட்களை இலங்கையர்கள் அதிகமாக கொள்வனவு செய்கின்றனர். அதேவேளை, இலங்கைப் பொருட்கள் வெளிநாடுகளுக்கு குறைந்த மட்டத்திலேயே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த நிலைவரம் நாணயப் பெறுமதியின் வீழ்ச்சியை மேலும் அதிகப்படுத்துகிறது" எனவும் அவர் தெரிவித்தார்."
"1997ஆம் ஆண்டு மலேசியாவை இலங்கு வைத்து அமெரிக்கா மேற்கொண்ட பொருளாதார நெருக்கடியினை, இதன்போது கலாநிதி ரஊப் நினைவுபடுத்தினார். "அப்போது மலேசியாவின் பிரதமராக டாக்டர் மகாதீர் மொஹமத் பதவி வகித்தார். மலேசியாவின் பொருளாதாரம் அப்போது வீறுநடை கொண்டு, முன்னோக்கிச் சென்று கொண்டிருந்தது. இதனைக் கண்டு மேற்குலகம் அச்சமடைந்தது. இதன் காரணமாக, முன்னறிவித்தல் எவையுமின்றி, மலேசியாவில் அமெரிக்கா செய்திருந்த அனைத்து முதலீடுகளையும், அந்த நாடு மீளப் பெற்றுக் கொண்டது.
இதனால், மலேசியா பெரும் நெருக்கடிக்குள்ளானது. இந்த நிலையில், மகாதீர் மொஹமத் தீர்மானமொன்றினை மேற்கொண்டார். தனது நாட்டு மக்களிடம் சத்திய வாக்கொன்றினை அவர் கேட்டார். 'எமது சொந்தக் காலில் நிற்பதற்கு நீங்கள் உடன்படுகிறீர்களா? அவ்வாறெனில், ஆறு வருடங்களுக்கு நீங்கள் தியாகமொன்றினைச் செய்ய வேண்டும். அது என்னவென்றால், வெளிநாட்டுப் பொருட்களில் நீங்கள் மோகம் கொள்ளக் கூடாது. உள்நாட்டுப் பொருட்களையே நீங்கள் நுகர வேண்டும்' என்பதே அந்த சத்திய வாக்காகும்".
"டாக்டர் மஹாதீருக்கு மக்கள் வாக்குறுதியளித்தனர். அப்போது, பொருளாதார ரீதியில் இலங்கையை விடவும் பின்தங்கிய நிலையில்தான் மலேசியா இருந்தது. ஆனால், அந்த நாட்டு மக்கள் உள்நாட்டு உற்பத்தியில் காட்டிய அதீத அக்கறையும், வெளிநாட்டு பொருட்களை கொள்வனவு செய்வதில் விலகி நின்றமையும். தற்போது அவர்களை உலகளவில் உயரச் செய்துள்ளது. இப்போது, மலேசியப் பொருட்களை வெளிநாடுகள் அதிகளவில் கொள்வனவு செய்யும் நிலவரத்தை அந்த மக்கள் உருவாக்கினர்".
"அதே காலப்பகுதியில் கல்வித்துறையினையும் மகாதீர் மொஹமத் வளர்த்தெடுத்தார். அதற்காக, நாட்டில் பல்கலைக்கழகங்களை உருவாக்கினார். மேலும், உள்நாட்டில் சிறப்பான முறையில் பட்டங்களைப் பெற்றவர்கள், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு மேற்படிப்புக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு மேற்படிப்பை முடித்துக் கொண்டவர்கள் மீண்டும் நாட்டுக்கு வரவழைக்கப்பட்டு, கல்வித்துறை வளர்ச்சிக்காக பயன்படுத்தப்பட்டார்கள்".
"இதன் காரணமாக, இப்போது கல்வித்துறையிலும் உளகளவில் மலேசியா முன்னேறியுள்ளது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு மேற்படிப்புக்காகச் செல்வதைப் போன்று, வெளிநாடுகளிலிருந்து மேற்படிப்பை மேற்கொள்வதற்காக இப்போது மலேசியாவுக்கும் மாணவர்கள் வந்து கொண்டிருக்கின்றனர்" என்று, மலேசியாவின் மீளெழுச்சி பற்றி, கலாநிதி ரஊப் விளக்கமளித்தார்.
"எனவே, இலங்கையின் பொருளாதாரத்தில் கொள்கை ரீதியிலானதொரு மாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டும். அதேவேளை, மக்களும் கொள்கை ரீதியாக மாற வேண்டும். ஆனால், கட்டுப்பாடு ரீதியாக அரசாங்கம் கொள்கைகளை அமலாக்க கூடாது. உள்நாட்டுப் பொருட்களை கொள்வனவு செய்யுமாறு மக்களை அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும்".
"இந்த இடத்தில் வெட்கப்பட வேண்டிதொரு விடயத்தையும் சொல்ல வேண்டியுள்ளது. நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட நாட்டில் இருந்து கொண்டு, நாம் டின் மீன்களை இறக்குமதி செய்து கொண்டிருக்கின்றோம். அண்மையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட டின் மீன்கள் பழுதடைந்திருந்ததாகவும், அதனை திருப்பியனுப்ப வேண்டுமென்றும், அரசாங்கம் கூறிக் கொண்டிருந்தது. கடல் வளமும், மீன் வளமும் உள்ள நாட்டுக்குள் டின் மீன்களை இறக்குமதி செய்வதே தவறாகும். இலங்கையில் பிடிக்கப்படும் மீன்களை டின்களில் நாமே அடைக்க முடியும். ஆனால், அதனை இதுவரை செய்யாமல், எமது மீன்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம்."
"அங்கு அந்த மீன்களை டின்களில் அடைக்கிறார். அவற்றினை நாம் இறக்குமதி செய்து கொண்டிருக்கிறோம். இப்படியிருந்தால், எப்படி நாம் உள்நாட்டு உற்பத்தியில் முன்னேறுவது?" என்கிற கேள்வியினையும் கலாநிதி ரஊப் முன்வைத்தார்.
"பொருளாதார ரீதியாக இலங்கையிடம் திட்டவட்டமானதொரு கொள்கை இல்லை. ஒவ்வொரு அரசாங்கமும் ஆட்சிக்கு வரும் போது, தத்தமது அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கிணங்க, பொருளாதார துறையினைக் கையாள்கிறது. இலங்கையின் நாணய மதிப்பிறக்கத்தை எதிர்கொள்ள முடியாமல் போயுள்ளமைக்கு, இதுவும் மிக முக்கிய காரணமாகும்" என்றும் கலாநிதி ரஊப் கூறினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :