You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை இறுதிப்போர்: சாட்சியமளிப்பாரா அதிபர் சிறிசேன?
இலங்கையில் இடம்பெற்ற இறுதி கட்ட போர் தொடர்பான உண்மைகள் தமக்கு தான் தெரியும் என ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தெரிவித்துள்ள நிலையில், அவ்வாறாயின் உண்மை கண்டறியப்பட வேண்டிய பொறிமுறையில் முதலாவதாக ஜனாதிபதியே சாட்சியமளிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் தொடர்பாக உண்மை கண்டறியப்படல் மற்றும் பொறுப்பு கூறல் என்பன அத்தியாவசியமாகவுள்ளது. எனவே உண்மை கண்டறியப்பட்ட பின்னர் வேண்டுமானால் இருதரப்புக்கும் பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பாக பேசலாம் எனவும் அதனைவிடுத்து அரசியல் கைதிகளையும் இராணுவ வீரர்களையும் சமமாக வைத்து பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பாக ஜனாதிபதி பேசினால் அதனை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அரசியல் கைதிகளையும் இராணுவ வீரர்களையும் சமாமாக கணித்து பொது மன்னிப்பு வழங்குகின்ற யோசனையை ஜனாதிபதி முன்வைத்தால் அதனை கூட்டமைப்பு நிராகரிக்கும். அதற்கு வலுவான காரணங்கள் உள்ளது.
கடந்த ஒன்பது ஆண்டுகளாக பொது மன்னிப்பு என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம் என நான் கூறிவந்தது இதற்காகவே. ஆனால் அதனை பொருட்படுத்தாமல் அரசியல் தலமைகளும் சில ஊடகங்களும் பொது மன்னிப்பு என்ற வார்த்தையை பயன்படுத்தி வந்துள்ளார்கள்.
பொது மன்னிப்பு என்பது விசாரணை இன்றி அனைவரையும் விடுவிப்பது. ஆனால் நாம் அதனை கோரவில்லை. நாம் கேட்டது, நீண்ட கால அரசியல் கைதிகளுக்கு மன்னிப்பு என்பதையேயாகும்.
இங்கே பொறுப்புக்கூறல் என்பதும், உண்மை கண்டறியப்பட வேண்டும் என்பதும் அத்தியாவசியமானது. அவ்வாறு உண்மை கண்டறியப்பட்ட பின்னர் இருதரப்பினருக்கும் மன்னிப்பு வழங்குவது தொடர்பாக பேச முடியும்.
மாறாக உண்மை கண்டறியப்படாமல் ஒரு தரப்பினருக்கு மாத்திரம் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு கைது செய்யப்பட்டு நீண்ட காலம் சிறையில் இருக்கின்ற நிலையிலும் மறு பக்கத்தில் யார் எவர் என்று தெரியாமல் என்ன குற்றமிழைத்தார்கள் என்று தெளிவுபடுத்தப்படாமலும் அவர்களுக்கு மன்னிப்பு என்று கூறுவது எந்தவிதத்தில் நியாயமானது ?.
அத்துடன் இச் செயற்பாடு சர்வதேச சட்ட நியமங்களுக்கும் சர்வதேச நாடுகளுடைய எதிர்பார்ப்புக்கும் முரணாகவே அமையும். இவ்வாறான ஒர் திட்டத்தை ஜ.நாவில் ஜனாதிபதி முன்வைக்க போவதாக கூறப்பட்ட நிலையிலேயே இது தொடர்பாக ஜ.நா செயலளாருக்கும் இராஜதந்திரிகளுக்கும் தெரியப்படுத்தியிருந்தோம். அதன் அழுத்தம் காரணமாகவே ஜனாதிபதி அத் திட்டத்தை ஜ.நா வில் முன்வைக்கவில்லை போலும்.
இவ்வாறன நிலையில் இறுதி கட்ட போரில் இடம்பெற்ற உண்மைகள் தமக்கு மாத்திரமே தான் தெரியும் என ஐனாதிபதியே தெரிவித்துள்ள நிலையில் உண்மை கண்டறியப்பட வேண்டும் என்ற பொறிமுறையில் முதலாவது சாட்சியமாக ஜனாதிபதியே சாட்சியமளிக்க வேண்டும்.
இறுதி யுத்தத்தில் இரு தரப்புமே சர்வதேச குற்றங்களை இளைத்ததாக இரண்டு சர்வதேச விசாரணை அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. எனவே இவை தொடர்பாக உண்மை கண்டறியப்பட வேண்டும். நிலைமாறு கால நீதியின் முக்கிய தூணாக இருப்பது உண்மை கண்டறியப்பட வேண்டும் என்பதாகும். அதனை செய்யாமல் வெறுமனே ஒரு தரப்புக்கு மாத்திரம் வெள்ளையடிக்கும் திட்டத்திற்கு நாம் ஆதரவு கொடுக்க மாட்டோம் என்றார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்