You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வேதாந்தாவுக்கு ஹைட்ரோ கார்பன்: தமிழகத்தில் 3 இடங்களில் எடுக்க ஒப்பந்தம்
முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
இந்து தமிழ்: 'தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஒப்பந்தம்'
தமிழகத்தின் 3 இடங்கள் உட்பட நாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஒப்பந்தம் மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் டெல்லியில் நேற்று கையெழுத் தானது. தமிழகத்தின் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்க மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.
"நில ஆய்வு செய்யப்படாத 59,282 சதுர கி.மீ. பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க, கடந்த ஜனவரியில் 'ஹெல்ப்' எனும் தளர்த்தப்பட்ட ஹைட்ரோகார்பன் ஆய்வு மற் றும் உரிமம் முறையில் டெண்டர் விடப்பட்டது. 13 மாநிலங்களில் மொத்தம் 55 இடங்களுக்கு 9 நிறுவனங்களால் 110 டெண்டர்கள் கோரப்பட்டன.
இந்நிலையில், ஹைட்ரோகார்பன் இயக்குநரகம் (சிஜிஎச்) சார்பில் டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் பல்வேறு பொதுத் துறை மற்றும் தனியார் நிறுவனங் களுடன் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஒப்பந் தங்கள் கையெழுத்தாயின.
இதில், தூத்துக்குடியின் ஸ்டெர் லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனத்துக்கு 41, ஆயில் இந்தியாவுக்கு 9, ஓஎன்ஜிசிக்கு 2, கெயில், பாரத் பெட்ரோ ரிசோர்ஸ், இந்துஸ்தான் ஆயில் எக்ஸ்ப்ளோரேஷன் கம்பெனி ஆகிய பொதுத் துறை நிறுவனங்களுக்கு தலா ஒரு இடங்கள் கிடைத்துள்ளன. மொத்தம் உள்ள 55 இடங்களில் நிலப் பகுதியில் 46, கடல் பகுதியில் 9 இடங்கள் அமைய உள்ளன. இவற்றில் 3 இடங்கள் தமிழகத்தில் உள்ளன.
புதுச்சேரியின் காரைக்காலில் தொடங்கி தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட் டங்களை ஒட்டிய ஆழம் குறைந்த கடல் பகுதிகளில் ஹைட்ரோகார் பன் எடுக்க வேதாந்தாவுக்கு 2 இடங்கள் கிடைத்துள்ளன. இதுதவிர, பொதுத் துறை நிறுவனமான ஓஎன்ஜிசிக்கு சிதம்பரத்தை ஒட் டிய நிலப்பகுதியில் ஓர் இடம் கிடைத்துள்ளது." என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'கருணாஸுக்கு எதிராக நடவடிக்கை'
சட்டமன்ற உறுப்பினர் கருணாஸுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சட்டமன்றத் தலைவர் தனபால் தீவிரமாக யோசித்துவருவதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தினகரனுக்கு ஆதரவளிக்கும் கருணாஸ் மற்றும் மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கலாம் என அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன் மற்றும் சட்டமன்ற செயலர் கே ஸ்ரீனிவாசனுடன் தனபால் திங்கள்கிழமை ஆலோசித்தாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.
தினத்தந்தி: ' என்னை நடுங்க வைத்த பவுலர் இவர்தான்'
இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக், தன்னை நடுங்க வைத்த ஒரே பவுலர் பாகிஸ்தானின் சோயிப் அக்தர் தான் என்று கூறியிருக்கிறார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
"இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஷேவாக். களம் இறங்கி நிலைத்து நின்று விட்டால் எதிரணி பவுலர்களை பஞ்சராக்கி விடுவார். அபாயகரமான பேட்ஸ்மேன் என்று வர்ணிக்கப்பட்ட ஷேவாக் டெஸ்டில் இரண்டு முறை முச்சதம் அடித்து இருக்கிறார். ஒரு நாள் கிரிக்கெட்டில் 15 சதம் உள்பட 8,273 ரன்கள் எடுத்ததோடு, 104.33 ஸ்டிரைக் ரேட் வைத்திருந்தார்.
அவரும், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அப்ரிடியும் இணையதள நிகழ்ச்சி ஒன்றில் கலந்துரையாடினர். அப்போது ஷேவாக்கிடம், கிரிக்கெட்டில் உங்களை அச்சுறுத்திய பவுலர் யாராவது இருக்கிறார்களா? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஷேவாக், 'நான் பயந்த ஒரே பவுலர் யார் என்றால் அது பாகிஸ்தானின் அதிவேக பந்துவீச்சாளர் சோயிப் அக்தர்தான். அவர் எந்த பந்தில் காலை பதம் பார்ப்பார், எந்த பந்தில் தலையை குறிவைப்பார் என்பது உங்களுக்குத் தெரியாது. அவர் வீசிய நிறைய பவுன்சர்கள் எனது ஹெல்மெட்டில் தாக்கியுள்ளன. அவரை கண்டு நான் பயந்தேன். அதே சமயம் அவரது பந்துகளை அடித்தும் மகிழ்ந்துள்ளேன்' என்று அவர் கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.
தினமணி: 'நீரவ் மோதியின் ரூ.637 கோடி மதிப்பு சொத்துகள் முடக்கம்'
பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ.13,000 கோடி மோசடி செய்துவிட்டு தலைமறைவாகிவிட்ட குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான ரூ.637 கோடி மதிப்புடைய சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. இந்த சொத்துகளில், லண்டன், நியூயார்க் நகரங்களில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள், வெளிநாட்டு வங்கி கணக்குகள், தங்கம் மற்றும் வைர நகைகள் ஆகியவையும் அடங்கும் என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.
முடக்கப்பட்ட சொத்துகளில், நியூயார்க் சென்டிரல் பார்க் பகுதியில் உள்ள 2 குடியிருப்புகள் ரூ.216 கோடி மதிப்புடையவை ஆகும். அவை நீரவ் மோதியின் பெயரில் உள்ளன. லண்டனில் மேரிலிபோன் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டின் விலை ரூ.56.97 கோடியாகும். இது நீரவ் மோதி சகோதரி பூர்வி மோதியின் பெயரில் உள்ளது. ஹாங்காங்கில் இருந்து அனுப்பப்பட்ட ரூ.22.69 கோடி மதிப்புடைய வைர நகைகள், சிங்கப்பூர் வங்கி கணக்கில் உள்ள ரூ.44 கோடியும் முடக்கப்பட்டன. இந்த வங்கி கணக்கு, பிரிட்டனின் விர்ஜின் தீவில் உள்ள ஒரு நிறுவனத்தின் பெயரில் தொடங்கப்பட்டது. தெற்கு மும்பையில் பூர்வி மோதியின் பெயரில் இருந்த ரூ.19.5 கோடி மதிப்புடைய வீடும் முடக்கப்பட்டது என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :