You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
‘அடுத்து நீ தான்’ - பேரழகிக்கு வந்த கொலை மிரட்டல்
கடந்த சில மணி நேரங்களில் நிகழ்ந்த உலக நடப்புகளில் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம்.
கொலை மிரட்டல்
முன்னாள் 'மிஸ் இராக்' ஒருவர் தமக்கு கொலை மிரட்டல் தொடர்ந்து வருவதாக தெரிவித்துள்ளார். இராக் மாடல் தாரா கடந்த வாரம் வியாழக்கிழமை அடையாளம் தெரியாத நபர்களால் பாக்தாத்தில் சுட்டு கொல்லப்பட்டார். அடுத்து உன்னை தான் கொல்லப் போகிறோம் என்று தொடர் கொலை மிரட்டல் வருவதாக மிஸ் இராக் பட்டம் வென்ற சிமா காசிம் ஒரு நேரலை நிகழ்ச்சியில் கூறி உள்ளார்.
இரானில் கள்ளச்சாராய மரணங்கள்
இரானில் கெட்டுப் போன கள்ளச்சாராயத்தை அருந்தியதன் காரணமாக குறைந்தது 42 பேர் பலியானார்கள் என்று இரான் அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. சுகாதாரத் துறை செய்தித் தொடர்பாளர் இராஜ், 16 பேர் பார்வைத் திறனை இழந்ததாகவும், 170 பேர் டையாலிஸ் சிகிச்சை பெறுவதாகவும் தெரிவித்தார். கடந்த மூன்று வாரங்களில், ஐந்து மாகாணங்களில் 19 வயது பெண் ஒருவர் உட்பட 460 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பழிவாங்கல் வேண்டாம்
தாம் நியமித்த உச்சநீதிமன்ற நீதிபதிக்கு எதிராக கூறப்படும் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து எஃப்.பி.ஐ விரிவான விசாரணையை மேற்கொள்ளலாம். ஆனால், 'பழிவாங்கல்' வேண்டாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி உள்ளார். பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான நீதிபதி பிரெட் கவனோவுக்கு எதிரான விசாரணையை வெள்ளை மாளிகை முடக்க பார்க்கிறது என அமெரிக்க ஊடகங்கள் முன்பு தெரிவித்தன.
ஆணாதிக்க அறிவியல் கருத்து
இயற்பியல் ஆண்களால் கண்டுப்பிடிக்கப்பட்டு உருவாக்கப்பட்டது என கருத்து கூறிய மூத்த விஞ்ஞானி ஒருவர் ஐரோப்பிய ஆணு ஆய்வகத்திலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த கருத்தை தெரிவித்தவர் பேராசிரியர் ஆலஸாண்ட்ரோ ஸ்டுருமியா. பிஸா பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் இவர் இவ்வாறான கருத்தை தெரிவித்துள்ளார். இவை பெண்களுக்கு எதிரான ஆணாதிக்க கருத்துகள் என எதிர்ப்பு எழுந்ததை அடுத்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பஹாய்களுக்கு எதிராக
ஏமனில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் பஹாய் நம்பிக்கையை பின்பற்றும் 20 சிறுபான்மையினர்களுக்கு எதிராக மேற்கொண்டிருக்கும் விசாரணை கவலையை ஏற்படுத்தி உள்ளது. உளவுபார்த்தது மற்றும் நம்பிக்கை துரோகம் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் தங்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், ஆனால் அந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்று அம்மக்கள் கூறுகின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :