You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பங்குச் சந்தையில் ஒரே நாளில் 9200 கோடி ரூபாய் இழந்த இன்ஃபிபீம்
- எழுதியவர், பிபிசி ஹிந்தி சேவை
- பதவி, டெல்லி
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று இந்திய பங்குச் சந்தையில் மற்றொருமுறை வீசிய சூறாவளியில் சுமார் 9200 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
இந்திய பங்குச்சந்தையில் முதன்முறையாக பட்டியலிடப்பட்ட இணைய வழி வர்த்தக நிறுவனம் இன்ஃபிபீம். வெள்ளியன்று மதியம் சுமார் மூன்றரை மணிக்கு பங்குச் சந்தை வர்த்தகம் முடிந்தபோது, நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தவர்களுக்கு சுமார் 9,200 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
2009ஆம் ஆண்டு சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு ஒரே நாளில் குறைந்ததற்கு பிறகு, தற்போது இன்ஃபிபீம் நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஒரே நாளில் அதிரடியாக சரிந்துள்ளது. தோராயமாக 73 சதவிகித சரிவை சந்தித்துள்ளது.
சத்யம் நிறுவனம் பங்குச் சந்தையில் இழப்பை சந்தித்தபோது அதன் பங்கு மதிப்பு ஒரே நாளில் 83 சதவிகித அளவு குறைந்துபோனது.
சனிக்கிழமையன்று இன்ஃபிபீம் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெறவிருந்தது. வியாழனன்று 197 ரூபாயாக இருந்த பங்கு மதிப்பு அடுத்த நாள் 59 ரூபாயாக வீழ்ச்சியடைந்தது.
வியாழனன்று, 13,105 கோடியாக இருந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் 24 மணி நேரத்திற்குள் மட்டுமே 3,900 கோடி ரூபாய் என்ற நிலைக்கு குறைந்துவிட்டது.
வாட்ஸ்அப் செயலி மூலம் பரவிய வதந்தியால் இந்த சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ப்ரோக்கரேஜ் ஃபார்ம் இண்டியா இஃபோலைன் என்ற நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு அதிகாரி, தனது பெயரை வெளியிட வேண்டாம் என்ற கோரிக்கையுடன் நம்மிடம் சில தகவல்களை தெரிவித்தார்.
வியாழக்கிழமை மாலை, வாட்ஸ்அப்பில் பகிரப்பட்ட செய்தி ஒன்று, இன்ஃபிபீம் நிறுவனத்தின் நிர்வாகம் தொடர்பான சில கடுமையான பிரச்சனைகளைப் பற்றி தெரிவித்ததாக அந்த அதிகாரி கூறினார்.
இருப்பினும், இன்ஃபிபீம் நிறுவனம் பிறகு வெளியிட்ட ஒரு அறிக்கையில், என்.எஸ்.ஐ இன்ஃபிபீம் க்ளோபல் (NSI Infibeam Global) என்ற தங்களது துணை நிறுவனத்துக்கு, வட்டி இல்லாத கடன்களை வழங்கியுள்ளது என்றும், ஆனால் அது குறுகிய கால கடன் என்றும் கூறியிருக்கிறது. இந்த கடன் தொகை, அதன் வணிக நடவடிக்கைகளுக்கு மட்டுமே செலவிடப்படும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
மேலும், என்.எஸ்.ஐ இன்ஃபிபீம் க்ளோபல் நிறுவனத்திற்கு, இன்ஃபிபீம் 2018 மார்ச் 31 வரை 135 கோடி ரூபாய் கடன் அளித்திருக்கும் தகவலையும் மும்பை பங்குச் சந்தைக்கு தெரிவித்து விட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது முதல் சரிவல்ல…
இன்ஃபிபீம் நிறுவன பங்குகளில் இத்தகைய வீழ்ச்சி ஏற்படுவது முதல் தடவையல்ல. டெல்லியில் உள்ள ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வாளர் ஆசிஃப் இக்பால் என்பவரிடம் பேசியபோது, "2016ஆம் ஆண்டு இன்ஃபிபீம் நிறுவனம் மும்பை பங்குச் சந்தையில் அறிமுகப்படுத்தப்போது, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் இணைய வழி வர்த்தக நிறுவனம் என்ற பெருமையை அது பெற்றது. அதன் பிறகு, ஐ.பி.ஓ மூலம் 450 கோடி ரூபாய் திரட்டியது. ஆனால் முதலீட்டாளர்களிடம் அதிக வரவேற்பு பெறாத இன்ஃபிபீம், 110% வரை மட்டுமே முதலீடு முடிந்தது."
2016 நவம்பர் ஒன்பதாம் தேதி மும்பை பங்குச்சந்தையின் தரவரிசைப்படி, நிறுவனத்தின் பங்கு மதிப்பு 17.5% சரிந்தது, ஆனால் வர்த்தக முடிவில் சரிவு 2.5 சதவிகிதமாக குறைந்துவிட்டது. 2017 மார்ச் 27ஆம் தேதி 20% வீழ்ச்சியடைந்தது. அதற்கு நான்கு நாட்களுக்குப் பிறகு, மார்ச் 31ஆம் தேதியன்று பங்குச் சந்தையில் மீண்டும் 20% சரிவு ஏற்பட்டது.
செப்டம்பர் 25ஆம் தேதி, 119 ரூபாயாக இருந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு திடீரென 39.5 சதவிகிதம் சரிவை சந்தித்தது. அதே ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதியன்று இன்ஃபிபீம் நிறுவனத்தின் பங்கு மீண்டும் 40% வீழ்ச்சியடைந்தது, 2018 செப்டம்பர் 21ஆம் அன்று பங்கு மதிப்பு 41 சதவிகிதம் வரை குறைந்தது.
பொதுவாக, பங்குகளின் மதிப்பு ஒரேயடியாக வீழ்ச்சியடையாமல் தவிர்ப்பதற்காக ஒரு வரம்பு நிர்ணயிக்கப்படும். அது 5%, 10% மற்றும் அதிகபட்சம் 20% வரை இருக்கலாம். ஆனால், இன்ஃபிபீம் நிறுவனத்திற்கு 'முன்கணிப்பு வர்த்தகம்' (Forward trading) செய்ய அனுமதி இருந்ததால், அதற்கு வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை.
"நல்ல தரமுள்ள பங்குகளையே டெரிவேடிவ் (Derivative) என அதாவது முன்கணிப்பு வர்த்தகத்திற்கு அனுமதிக்கவேண்டும் என்பதில் பங்குச் சந்தைகள் கவனம் செலுத்தவேண்டும். இல்லாவிட்டால், தவறான தகவல்கள் வதந்திகளால், நேரடியாக பாதிக்கப்படுவது முதலீட்டாளர்கள்தான்" என்கிறார் ஆசிஃப் இக்பால்.
இன்ஃபிபீம் நிறுவனம், மென்பொருள் மேம்பாட்டு சேவைகள், பராமரிப்பு, வலைதள மேம்பாடு, இணைய வழி வர்த்தகம், போன்ற வர்த்தகங்களில் ஈடுபட்டுள்ளது. நிறுவனத்தின் முக்கிய வணிகம், தனது தயாரிப்புகளை விற்பனை செய்வதுதான். மென்பொருள் மற்றும் ஆன்லைன் தயாரிப்புகளை விற்பனை செய்யும் தொழிலை பிரதானமான செய்யும் இன்ஃபிபீம் நிறுவனம், டொமைனில் பெயர் பதிவு செய்யும் பணிகளிlum ஈடுபட்டுள்ளது.
அஹமதாபாதில் இருக்கும் இந்த நிறுவனம், இந்த ஆண்டு ஜுன் மாதம், ஒரே நாளில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பெயர்களை டொமைனில் பதிவு செய்ததாக தெரிவித்தது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :