You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை கிரிக்கெட் வீரரின் தந்தை சுட்டுக் கொலை; குறிவைக்கப்பட்டது யார்?
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தெஹிவளை, கல்கிஸ்ஸ மாநகர சபை உறுப்பினருமான கே.ரஞ்சன் சில்வா (62 வயது) சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
கொழும்பு, இரத்மலானை, ஞானாந்த பகுதியில் நேற்றிரவு (மே 24) 8.30 அளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அவர்களது வீட்டிற்கு முன்பாக உள்ள ரயில் கடவைக்கு அருகில் நடந்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். இவர்கள் கொழும்பு - களுபோவில மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு இன்று (25) அதிகாலை புறப்பட்ட தயாராக இருந்த சந்தர்ப்பத்தில் நேற்றிரவு இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
சம்வத்தை அடுத்து மேற்கிந்தியத் தீவுகளுக்கான கிரிக்கெட் சுற்றுப் பயணத்தை தனஞ்சய டி சில்வா தவிர்த்துக் கொண்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை எனவும், புலன் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறுவதாகவும் கல்கிஸ்ஸ பொலிசார் தெரிவித்தனர்.
போதைப் பொருள் வர்த்தகத்திற்கு எதிராக செய்யப்பட்ட முறைப்பாடே இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு காரணம் என கிரிக்கெட் வீரர் தனஞ்சயவின் சகோதரன் சாவித்திர டி சில்வா பி.பி.சி. தமிழிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவரிடம் பேசினோம்.
''வீட்டிற்கு வெளியே நேற்றிரவு 8.30 அளவில் நானும் தந்தையும் இன்னும் சிலரும் நின்று பேசிக் கொண்டிருந்தோம். நான் கடைக்குச் சென்றுவருவதாக கூறிவிட்டு நகர்ந்தேன். நான் அந்த இடத்தில் இருந்து சென்ற சில நிமிடங்களில் அங்குவந்த மர்ம நபர்கள் அப்பா மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.'' என்று அவர் குறிப்பிட்டார்.
இதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று கேட்டோம்.
''இந்த மாத முற்பகுதியில் இந்தப் பிரதேசத்தில் போதைப் பொருள் விற்பனை செய்யும் பாதாள உலகக் குழுவினர் குறித்து போலீசாருக்கு முறையிட்டோம். இவர்கள் யார் என்பது எமக்கு நன்றாக தெரியும். இவர்கள் மோசமானவர்கள் என்பதால் யாரும் இவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்ய முன்வரவில்லை. ஆனால் நாம் இதனை செய்தோம். முறைப்பாடு செய்ய சென்றபோதுகூட இவர்கள் ஆபத்தானவர்கள் என போலீசார் எம்மை எச்சரித்தனர். இருந்தாலும் நாம் முறையிட்டோம். இதன் பின்னர் அந்தக் கும்பல் ஒரு சந்தர்ப்பத்தில் என்னுடன் மோதலில் ஈடுபட்டது. இதன் பின்னரே நேற்றிரவு இந்தச் சம்பவம் நடந்துள்ளது.''
தந்தையைத் தான் இலக்குவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதா என்று கேள்வியெழுப்பினோம்.
''நானும் தந்தையும் தான் இவர்களுக்கு எதிராக செயற்பட்டோம். நான் தான் இவர்களுக்கு எதிராக கடுமையாக செயல்பட்டிருந்தேன். இதற்கு முன்னர் எனக்கு நேரடியாக அச்சுறுத்தல் விடுத்திருந்தனர். என்னை இலக்குவைத்தே இவர்கள் வந்திருக்க வேண்டும். ஆனால் சில நொடிகள் மாறிப்போக அப்பா அந்த துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியாகினார்'' என்று அவர் தெரிவித்தார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனஞ்சய டி சில்வாவின் சகோதரன், சாவித்திர டி சில்வா தெஹிவளை, கல்கிஸ்ஸ மாநரக சபையின் முன்னாள் உறுப்பினர் என்பதுடன், அவரது தந்தை கே.ரஞ்சன் சில்வா (62) ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தெஹிவளை, கல்கிஸ்ஸ மாநகர சபை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்