You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை: ஆசிய நாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்ய முடிவு
இலங்கையில் தொடர் வறட்சி காரணமாக நெல் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியையடுத்து ஆசிய நாடுகளிலிருந்து அவசரமாக அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இலங்கையில் வறட்சி காரணமாக நெல் உற்பத்தியில் 40 சத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத்தினால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
நெல் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள இந்த வீழ்ச்சி உள்நாட்டில் 9 லட்சம் பேரின் உணவு பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளதாக ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தினால் ஏற்கனவே கவலை வெளியிடப்பட்டுள்ளது
இந்த வீழ்ச்சி காரணமாக உள்ளுர் சந்தையில் தற்போது அரிசி விலை அதிகரித்துள்ளதோடு எதிர்காலத்தில் அரிசிக்கு பலத்த தட்டுப்பாடு ஏற்படும் என அஞ்சப்படுகிறது.
உள்ளுர் சந்தையில் அரிசி நியாய விலையில் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் பாகிஸ்தான், மியன்மார், வியட்னாம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அரசாங்கம் கூட்டுறவு மொத்த விற்பனை மையம் மூலம் 3 இலட்சம் மெட்ரிக் டன் அரிசியை அவசரமாக இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ள அதேவேளை தனியார் துறை மூலம் 2 இலட்சம் மெட்ரிக் டன் அரிசியை இறக்குமதி செய்வது தொடர்பாகவும் கவனம் செலுத்தி வருகின்றது.
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியின் அதி கூடிய சில்லைறை விலை நிர்ணயம் செய்யப்படும் போது தங்களை பாதிக்காத வகையில் விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என உள்நாட்டு அரிசி உற்பத்தியாளர்கள் எதிர்பார்கின்றார்கள்.
இதனை கருத்தில் கொண்டு இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு கிலோவிற்கு 5 ரூபா என்ற இறக்குமதி வரியிலிருந்து விதிவிலக்கு அளிப்பது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர் சிந்தக்க ஹெட்டிராய்ச்சி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்று மியன்மார் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு சென்று அரிசியின் தரம் , விலை மற்றும் சுவை தொடர்பாக ஆராய்ந்து அந் நாட்டு அரசுகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்திய பின்னர் தற்போது நாடு திரும்பியுள்ளது.
இலங்கையில் வறட்சி காரணமாக நெல் உற்பத்தியில் 40 சத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத்தினால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
அந்நாடுகளினால் முன் வைக்கப்பட்ட அரிசி விலையை விட இலங்கை குழுவினால் முன் வைக்கப்பட்ட விலை குறைவாக இருப்பதால் இது தொடர்பாக அமைச்சரவையில் ஆராய்ந்து முடிவுகளை அறிவிப்பதாக அந் நாடுகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது
இந்த பேச்சவார்த்தையின் பயனாக பாகிஸ்தான் 25 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசியையும் மியன்மார் 30 மெட்ரிக் டன் அரிசியையும் அவசரமாக வழங்க முன் வந்துள்ளதாக வர்த்தக மற்றும் கைத் தொழில் அமைச்சர் ரிஷாத் பதியுதின் கூறுகின்றார்.
''உள்நாட்டு சந்தையில் தரமான அரிசி தட்டுப்பாடின்றி நியாயமான விலையில் மக்களுக்கு கிடைப்பது உறுதி செய்யப்படும்" என்று அவர் நம்பிக்கையும் வெளியிட்டார்.
இதே வேளை மியன்மார் ஏற்கனவே இணக்கம் கண்டுள்ள தொகையை 45 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக அதிகரிப்பது தொடர்பாக அடுத்த ஓரிரு நாட்களில் அறிவிக்கும் என வர்த்தக கைத்தொழில் அமைச்சர் சிந்தக்க ஹெட்டிராய்ச்சி தெரிவிக்கின்றார்.
பாகிஸ்தானிலிருந்து 3 லட்சம் மெட்ரிக் டன் அரிசியை நவம்பர் மாதம் இறக்குமதி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்