You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குற்றம் காணப்பட்ட அமைச்சர்களைப் பாதுகாக்க விக்னேஸ்வரன் முயற்சி - சுமந்திரன்
இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த வட மகாண சபை உறுப்பினர்கள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக அளித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை ''ஊழல், பண மோசடி மற்றும் லஞ்சத்துக்கு எதிரான தீவிரமான செயற்பாடே ஆகும்'', என்று தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கூறியிருக்கிறார்.
வட மாகாண சபையில் , தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசில் நிலவும் நெருக்கடி தொடர்பாக சுமந்திரன் விடுத்துள்ள அறிக்கையில், முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஊழலுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளை தாங்கள் தடுக்க முயல்கிறோம் என்ற குற்றச்சாட்டு, ``ஆதாரமற்றதும், உண்மையான நிலைமைக்கு நேர் எதிரானதுமாகும்`` என்று கூறியிருக்கிறார்.
ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான வடமாகாண அமைச்சர் ஐங்கரநேசனுக்கு எதிராக தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் குரல் கொடுத்தபோது, முதல்வர் விக்னேஸ்வரன் ``தனக்கு நெருக்கமானவரான`` ஐங்கரநேசனுக்கு எதிராக எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் விட்டார் என்று சுமந்திரன் குற்றஞ்சாட்டினார்.
''அறிக்கை மறைப்பு''
அதன் பிறகு அவையில் இவ்விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வற்புறுத்தி, ஏகமனதாக தீர்மானம் கொண்டுவரப்பட்டதற்கும் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களே காரணமாக இருந்தார்கள் என்று கூறும் சுமந்திரன், அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு அடுத்த நாளே, ஐங்கரநேசன் குற்றமற்றவர் என்றும், ``அவர் பனங்காட்டு நரி, இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சமாட்டார்`` என்றும் முதல்வர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டதை சுட்டிக்காட்டினார்.
குற்றச்சாட்டுகள் ஐங்கரநேசனுக்கு எதிராகவே இருந்த அந்த நிலையில், எல்லா அமைச்சர்களுக்கு எதிராகவும் விசாரணை நடத்தப்பட்டது என்று கூறிய சுமந்திரன், இது ஐங்கரநேசனை பாதுகாக்குமுகமாகத்தான் என்று குற்றம் சாட்டினார்.
தொடர்புடைய செய்திகள்:
விசாரணைக் குழுவினரை முதல்வர்தான் நியமித்தார் என்று கூறிய சுமந்திரன், இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் ஆரம்பத்திலிருந்தே கொண்டிருந்த நிலைப்பாடு இக்குழுவின் அறிக்கை மூலம் உறுதியானது என்றார்.
மே 19ம் தேதியே முதல்வரிடம் இவ்வறிக்கை கையளிக்கப்பட்டிருந்தபோதும், ``குற்றவாளிகளாகக் காணப்பட்ட இரண்டு அமைச்சர்களையும் பாதுகாக்கும் முகமாக`` அதை முதல்வர் ``மறைத்து வைத்திருந்தார்` என்று கூறிய சுமந்திரன், பத்திரிகைகள் அதை வெளிப்படுத்திய பின்னர்தான் அதை மாகாண சபையில் சமர்ப்பித்தார் என்றார்.
குழுவால் குற்றம் சாட்டப்பட்ட இரு அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்காத முதல்வர், நான்கு அமைச்சர்களையும் பதவி நீக்கம் செய்யும் யோசனையை முன்வைத்தார் என்றார் சுமந்திரன்.
``குற்றவாளிகளைக் காப்பாற்றும் முயற்சி``
``குற்றவாளிகளையும், குற்றங்களிலிருந்து விடுவிக்கப்பட்டிருப்பவர்களையும் ஒன்றாக பதவி நீக்கம் செய்தென்பது குற்றங்களை நீர்த்துப்போகப்பண்ணி, குற்றவாளிகளை காப்பாற்றும் ஒரு நடவடிக்கையே ஆகும்``, என்றார் சுமந்திரன்.
இந்த யோசனையை, தமிழரசுக் கட்சித் தலைவரைத் தவிர மற்ற எல்லாக் கட்சிகளின் தலைவர்களுக்கும் விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார் என்று கூறும் சுமந்திரன், த.தே.கூ தலைவர் இது குறித்து கேட்ட பின்னர்தான் காலம் தாழ்த்தி மாவை சேனாதிராஜாவுடன் அவர் பேசினார் என்றார்.
ஊழலுக்கு எதிராக நடவடிக்க வேண்டும் என்று தமிழரசுக் கட்சித் தலைவர் முதல்வரிடம் கூறியிருந்தார் , அதையேதான் த.தே.கூ தலைவர் இரா.சம்பந்தனும் கூறியிருந்தார் என்று கூறும் சுமந்திரன், ஆனால், இந்தக் கருத்துகளுக்கு பதிலளித்த முதல்வர், மறுநாள் மாகாண சபையில் உறுப்பினர்களுடைய கருத்துகளை அறிந்த பின் பதிலளிப்பேன் என்று கூறிவிட்டு, அப்படி செய்யாமல், அடுத்த நாள் சபையில் தன்னுடைய தீர்ப்பை வழங்கினார் என்றார்.
``நால்வரும் குற்றவாளிகள் என்ற பொய்யான பிம்பத்தைத் தோற்றுவித்து உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்றும் முயற்சியே இது`` என்று கூறிய சுமந்திரன், அதனால்தான் தமது கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர் என்றார்.
முதல்வரின் செயல்பாட்டால், அவர் மீது தமிழரசுக் கட்சியின் வட மாகாண சபை உறுப்பினர்கள் நம்பிக்கை இழந்திருக்கின்றனர், என்றார் அவர்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்