You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் கடையடைப்பு
வடமாகாண சபையில் ஏற்பட்டுள்ள குழப்பகரமான நிலைமை தொடர்வதனால், வடபகுதியில் அரசியல் ரீதியான பரபரப்பான நிலைமை ஒன்று உருவாகியுள்ளது.
முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் முழுமையான கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
முன்னதாக முதலமைச்சருக்கு ஆதரவாக இன்று வெள்ளிக்கிழமை வடபகுதியில் கடையடைப்பை மேற்கொள்ளுமாறு தமிழ் மக்கள் பேரவை வேண்டுகோள் விடுத்திருந்தது.
ஆயினும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களில் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் பொதுமக்கள் கூடி ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருக்கின்றனர்.
அதேவேளை, மன்னார் நகரம் அமைதியாகக் காணப்படுவதுடன் அங்கு வழமை நிலைமை காணப்படுகின்றது
வடமாகாண முதலமைச்சர் தனது அமைச்சரவையைச் சேர்ந்த நான்கு அமைச்சர்களுக்கும் எதிராக முன்வைக்கப்பட்ட ஊழல் தொடர்பான விசாரணைகளின் பின்னர், விசாரணை குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைவாக குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்த இரண்டு அமைச்சர்களையும் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என கோரியிருந்தார்.
அதேவேளை, குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய சாட்சியங்கள் அளிக்கப்படாத காரணத்தினால் ஏனைய இரண்டு அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விலக்கிக் கொள்வதாகவும், அவர்கள் குற்றமற்றவர்கள் என்றும் விசாரணைக் குழு தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.
தொடர்புடைய கட்டுரைகள்:
ஆனால், இந்த இரண்டு அமைச்சர்களுக்கும் எதிரான புதிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்த முதலமைச்சர் விக்னேஸ்வரன், அவர்கள் இருவரும் விசாரணைகள் முடியும் வரையில் தமது அமைச்சு பொறுப்புக்களில் இருந்து விலகி விடுமுறையில் இருக்க வேண்டும் என கூறியிருந்தார்.
முதலமைச்சரின் இந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள மறுத்த தமிழரசுக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் 15 பேர் முதலமைச்சர் மீது நம்பிக்கை இல்லை என தெரிவிக்கும் தீர்மானம் அடங்கிய கடிதத்தை வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயிடம் நேரடியாகக் கையளித்து, அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கோரியிருந்தனர்.
இந்தக் கோரிக்கைக்கு தமிழரசுக்கட்சியின் தலைமையும் முழு ஆதரவை வழங்கியிருந்தது.
இதனையடுத்து வடமாகாண சபையின் ஆளும் கட்சியைச் சேர்ந்த வேறு 15 உறுப்பினர்கள் ஒன்றிணைந்து முதலமைச்சருக்குத் தமது ஆதரவைத் தெரிவிக்கும் கடிதத்தை ஆளுனரிடம் வியாழன்று கையளித்திருந்தனர்.
இந்த நிலையில் முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும், இரண்டு அணிகளாக வடமாகாண சபையின் உறுப்பினர்கள் பிரிந்திருக்கின்றனர்.
வடமாகாண சபையின் குழப்பகரமான நிலைமைக்கு முடிவு காண்பதற்காகத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றிபெறவில்லை என கூட்டமைப்பைச்சேர்ந்த முக்கியஸ்தர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியில் ஒன்றாகிய டெலோவின் தலைமைக்குழு கூடி நிலைமைகளை ஆராய்ந்து, முதலமைச்சருக்குத் தனது ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளது.
அதேநேரம் முதலமைச்சர் மீது நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்ட கடிதத்தை ஆளுனரிடம் தெரிவித்த விடயத்தில் தமிழரசுக்கட்சி தன்னிச்சையாக நடந்து கொண்டிருப்பதாக டெலோ கட்சியின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்