You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை: மலையக பெருந்தோட்ட தொழிலாளர் சம்பள உயர்வில் தொடரும் இழுபறி
இலங்கையில் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரிக்கை விவகாரத்தில் தொழில் அமைச்சு மற்றும் பெருந் தோட்டத்துறை அமைச்சு தலையீட்டும் உரிமையாளர்கள் சம்மேளனத்துடன் இணக்கப்பாட்டிற்கு வர முடியாதிருப்பதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.
கடந்த 17 மாதங்களாக இழுபறி நிலையில் காணப்படும் இந்தப் பிரச்சினைக்கு நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற 9வது சுற்று பேச்சுவார்த்தையின் போது இணக்கம் ஏற்படும் என்று எதிர்பர்கப்பட்டிருந்த போதிலும் அது ஏமாற்றமாகி விட்டதாக பிரதான தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கூறுகின்றது.
தொழில் அமைச்சில் தொழில் அமைச்சர் ஜோன் செனவிரட்ன முன்னிலையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் ஆளும் தரப்பு தொழிற்சங்கமான இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் கலந்து கொள்ளவில்லை.
ஏனைய கூட்டு ஓப்பந்த தொழிற்சங்கங்களான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த பேச்சுவார்த்தையின் போது அடிப்படை சம்பளம் ரூபாய் 500 . பணியாற்றும் நாளொன்றுக்கு ரூபாய் 140 மற்றும் ஊக்குவிப்பு படி ரூபாய் 30 என நாள்தோறும் சம்பளம் கிடைக்க வேண்டும் என தொழிற்சங்கங்களினால் முன் வைக்கப்பட்ட கோரிக்கை தோட்ட நிர்வாகங்கள் ஆரம்பத்திலே மறுத்துவிட்டதாக கூறுகின்றார் இ.தொ. கா தலைவர்களில் ஒருவரான முத்து சிவலிங்கம்.
1972ம் ஆண்டு முதல் நடைமுறையிலுள்ள பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள முறையை மாற்றியமைக்கும் வகையில் உரிமையாளர்கள் சம்மேளனத்தினால் மாற்று யோசனையொன்று முதலாளிமார் சம்மேளனத்தினால் முன் வைக்கப்பட்டிருந்தது.
நாளாந்த அடிப்படை சம்பளம் ரூபா 500 , 11 கிலோவிற்கு மேல் பறிக்கப்படும் தேயிலை கொழுந்துவுக்கு கிலோவிற்கு ரூபாய் 25, வாரத்தில் நான்கு நாட்களுக்கு மட்டும் வேலை. ஏனைய நாட்களில் பறிக்கப்படும் கொழுந்தின் நிறைக்கேற்ப கொடுப்பணவு என அந்த யோசனையில் கூறப்பட்டுள்ளது.
'' இந்த யோசனை நடைமுறைக்கு சாத்தியம் அற்றது '' என தொழிற்சங்கங்களினால் நிராகரிக்கப்பட்டு விட்டதாக முத்து சிவலிங்கம் கூறுகின்றார்.
நாளாந்தம் பறிக்கப்படும் கொழுந்தின் நிறை தோட்ட்த்திற்கு தோட்டம் மாறுபட்டது. கால நிலையை பொறுத்தும் அது மாறுபடுகின்றது என்றும் அவர் சுட்டிக் காட்டுகின்றார்
தேயிலை தோட்டங்கள் நஷ்டத்தில் இயங்குவதால் தற்போது வழங்கப்படும் கொடுப்பணவை விட ஒரு சதத்தை கூட அதிகரிப்பாக வழங்க முடியாது என தோட்ட நிர்வாகங்களை உள்ளடக்கிய முதலாளிமார் சம்மேளனம் தமது பக்க நியாயத்தை ஏற்கனவே முன் வைத்துள்ளது
இது தொடர்பாக பிபிசி தமிழோசையிடம் பேசிய இ. தொ. கா தலைவர்களில் ஒருவரான முத்து சிவலிங்கம், ''இதே காரணத்தையே 17 மாதங்களாக தோட்ட நிர்வாகங்கள் கூறி வருகின்றன " என்றார்
''தோட்டங்கள் நஷ்டத்தில் இயங்குவதென்றால் 1972க்கு முன்பு இருந்தது போன்று அரச தோட்டங்களை அரசிடம் கையளிக்க வேண்டும் . அதற்கும் அவர்கள் தயார் இல்லை'' என்றும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
செயலிழந்துள்ள கூட்டு ஓப்பந்தம்
தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை உட்பட நலன் சார்ந்த விடயங்களை கொண்ட இரு தரப்பு கூட்டு ஒப்பந்தம் இரு வருடங்களுக்கொரு தடவை செய்து கொள்ளப்படுகின்றது.
இறுதியாக 2013ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்தது.
தொழிற்சங்கங்களினால் முன் வைக்கப்பட்ட சம்பள அதிகரிப்பு கோரிக்கை தொடர்பாக இரு தரப்பினருக்குமிடையில் தொடரும் இழுபறி காரணமாக அந்த ஒப்பந்தத்தை புதுப்பிப்பதில் தடைகளும் தாமதங்களும் 17 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து நீடிக்கின்றன.
சம்பள அதிகரிப்பு விவகாரத்திற்கு இரு மாத காலத்திற்குள் தீர்வை காண முடியும் என்ற எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கை காரணமாக அரசினால் இடைக் கால கொடுப்பணவாக ரூபாய் 2500 அறிவிக்கப்பட்டிருந்தது. அக் கொடுப்பணவு ஜுன், ஜுலை மாதங்கள் மட்டுமே தொழிலாளர்களுக்கு கிடைத்தது.
தற்போது நாள்தோறும் அடிப்படை சம்பளம் ரூபாய் 450 ஆகும். தினசரி ஊக்குவிப்பு கொடுப்பணவாக ரூபாய் 30. வேலை நாட்களில் ஆகக் குறைந்தது 75 சத வீதம் சமூகமளித்திருந்தால் ரூபாய் 120 சமூகமளித்த நாட்களுக்கு கிடைக்கும் அதாவது நாளொன்றுக்கு ரூபாய் 620 ஆகும்.
75 சத வீதத்திற்கு குறைவாக சமூகமளித்தால் ரூபாய் 120 கொடுப்பணவு ஒரு நாள் கூட கிடைக்காது.