டி20 உலக கோப்பை: இந்தியா, பாகிஸ்தான் இறுதிப் போட்டியில் மோத எது நடக்க வேண்டும்?

இந்தியா- பாகிஸ்தான்

பட மூலாதாரம், DANIEL POCKETT-ICC,GETTY

    • எழுதியவர், தினேஷ் உப்ரேதி
    • பதவி, பிபிசி செய்தியாளர்

நீங்கள் கிரிக்கெட் பிரியர் என்றால், ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலக கோப்பையின் அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டியில் எந்த அணிகள் மோதும் என்ற குழப்பம் இருந்தால், அதை போக்கிக்கொள்ள இந்தத் தேதியை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

தேதி - நவம்பர்6, 2022 ஞாயிற்றுக்கிழமை

டி20 உலக கோப்பையில் அதிமுக்கியமான போட்டி நாள் இது. இந்த போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவையும் பாகிஸ்தானையும் மீண்டும் ஒரு முறை ரசிகர்கள் பார்ப்பார்களா என்பதை தீர்மானிக்கும் நாள் இது.

ஞாயிற்றுக்கிழமை அடிலெய்டு ஓவல் மைதானத்தில் முதலில் தென்னாப்பிரிக்கா நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. சில மணி நேரங்களுக்குப் பிறகு, பாகிஸ்தான் அணி அதே மைதானத்தில் வங்கதேசத்துடன் மோதும்.

இந்த மைதானத்தில் இருந்து ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மெல்போர்னின் எம்.சி.ஜி. விளையாட்டரங்கில் இந்தியா ஜிம்பாவேயை எதிர்த்து விளையாடும்.

வியாழனன்று சிட்னியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய பாகிஸ்தான், அரையிறுதிக்கு முன்னேறும் நம்பிக்கையை தக்க வைத்துக்கொண்டுள்ளது.

மழை குறுக்கிட்ட இந்த ஆட்டத்தில் டக்வொர்த் லூயிஸ் விதியைப் பயன்படுத்த வேண்டியிருந்தது, அதன் பிறகு பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவை 33 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

சூப்பர் 12 மற்றும் குறிப்பாக குரூப் 2 போட்டிகளில் பரபரப்பும், த்ரில்லும் காணப்படுகின்றன. ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் நாக் அவுட் கட்டத்தை அடையும் அணி பற்றிய வாய்ப்புகள் உருவாகின்றன. அவை கலையவும் செய்கின்றன.

தீர்மானிக்கும் போட்டிகளுக்கு முன், சமன்பாடு மிகவும் சிக்கலாக உள்ளது. இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளில் எதுவேண்டுமானாலும் அரையிறுதிக்கு வரலாம்.

குரூப்-2ல் இருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறினால், குரூப்-1 தரவரிசையில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகளுடன் மோதும். அதாவது நவம்பர் 13ஆம் தேதி மெல்போர்னில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி, இந்தியாவுக்கும் பரம எதிரியான பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற வாய்ப்பு உள்ளது.

இது எப்படி சாத்தியம்? தலா நான்கு போட்டிகளில் விளையாடிய பிறகு, இப்போது அணிகளின் நிலை என்ன என்பதை முதலில் புரிந்து கொள்வோம்.

இந்தியா

இந்திய அணி

பட மூலாதாரம், Getty Images

விளையாடிய போட்டிகள் - 4, புள்ளிகள் - 6, நிகர ரன் விகிதம்: 0.730, மீதமுள்ள ஆட்டம் - ஜிம்பாப்வேக்கு எதிராக.

இந்தியா தற்போது புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தாலும், அரையிறுதிக்கு அதாவது நாக் அவுட் நிலைக்கு செல்வதற்கான உத்தரவாதத்தை இன்னும் பெற முடியவில்லை. தென்னாப்பிரிக்காவுடனான போட்டியில் தோல்வியடைந்த காரணத்தால், இந்திய அணி இந்தப் புதிரை குறைந்தது நவம்பர் 6 வரை கொண்டு சென்றுள்ளது.

இப்போதும் மூன்று சாத்தியங்கள் உள்ளன.

ஜிம்பாப்வேயை இந்தியா வீழ்த்தினால் 8 புள்ளிகளுடன் அரையிறுதியில் தனது இடத்தை உறுதி செய்து கொள்ளும்.

மழையால் ஆட்டம் கைவிடப்பட்டால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி கிடைக்கும். இந்தியா ஏழு புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறும்.

ஜிம்பாப்வேயிடம் இந்தியா தோல்வியை சந்திக்க நேரிட்டால், வங்க தேசத்துக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றி பெற்றால், நிகர ரன் ரேட் அங்கு முக்கிய பங்கு வகிக்கும். (தற்போது நிகர ரன் ரேட் அடிப்படையில் பாகிஸ்தான் முன்னிலையில் உள்ளது)

ஜிம்பாப்வே அணியிடம் தோல்வியடைந்தாலும், கடைசி நான்கு இடத்தை பிடிப்பதற்கான இரண்டு சாத்தியகூறுகள் இந்தியாவுக்கு உள்ளது.

முதலாவதாக, தென்னாப்பிரிக்கா நெதர்லாந்திற்கு எதிரான தனது கடைசி போட்டியில் தோல்வியடைவது. இரண்டாவதாக, வங்கதேசம் பாகிஸ்தானை தோற்கடித்தது, நிகர ரன் விகிதத்தில் இந்தியாவை விட குறைவாக இருப்பது.

ஞாயிற்றுக்கிழமை குரூப் 2வின் கடைசி ஆட்டத்தை இந்தியா விளையாட இருப்பதால், கடைசி நான்கில் வருவதை தீர்மானிக்கும் சமன்பாடுகள் என்ன என்பது போட்டி தொடங்குவதற்கு முன்பே அணிக்கு தெரிந்துவிடும்.

பாகிஸ்தான்

பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

விளையாடிய போட்டிகள்-4, புள்ளிகள்-4, நிகர ரன் விகிதம் - 1.117, மீதமுள்ள போட்டி- வங்கதேசத்திற்கு எதிராக.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அபார வெற்றி பெற்ற போதிலும், பாகிஸ்தானின் அரையிறுதிக்கான பாதை 'இப்படி நடந்தால், அப்படி நடந்தால்' என்பதில் சிக்கியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான், வங்க தேசத்தை வீழ்த்தினால் கூட நாக் அவுட்டை எட்டிப் பிடிக்க முடியாது. இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் தத்தமது போட்டிகளில் வெற்றி பெற்றால், பாகிஸ்தானின் T20 பயணம் முடிந்துவிடும். பாகிஸ்தான் அரையிறுதிக்கு செல்ல, வங்கதேசத்தை வெல்ல வேண்டியது அவசியம்.

தென்னாப்பிரிக்கா நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் தோல்வியடைகிறது அல்லது மழையால் போட்டி ரத்து செய்யப்படுகிறது. என்று வைத்துக்கொண்டால், அத்தகைய சூழ்நிலையில் பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய இரண்டு அணிகளுமே தலா 6 புள்ளிகளைப் பெறும். ஆனால் பாகிஸ்தான் மூன்று வெற்றிகளையும் தென்னாப்பிரிக்கா இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்றிருக்கும் என்பதால், முதலில் வெற்றி பெற்ற போட்டிகளின் எண்ணிக்கை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். பிறகுதான் ரன் விகிதம் பார்க்கப்படும்.

இரண்டாவதாக, ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் இந்தியா தோற்றால், இரு அணிகளும் தலா 6 புள்ளிகளைப் பெற்றிருக்கும், ஆனால் நிகர ரன் ரேட் அடிப்படையில், பாகிஸ்தான் அரையிறுதியை எட்டும்.

தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்கா அணி

பட மூலாதாரம், PAUL KANE

விளையாடிய போட்டிகள் - 4, புள்ளிகள் - 5, நிகர ரன் விகிதம்: 1.441, மீதமுள்ள போட்டி - நெதர்லாந்துக்கு எதிராக.

அரையிறுதிக்கு தென்னாப்பிரிக்கா முன்னேற வேண்டுமானால் நெதர்லாந்தை வீழ்த்த வேண்டும். இந்தப் போட்டியில் மழை வில்லனாக மாறி இரு அணிகளும் புள்ளிகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டால், தென்னாப்பிரிக்கா சிக்கலில் மாட்டிக்கொள்ளக்கூடும்.

ஆனால், ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆட்டங்களில் மழை வில்லனாக மாறுவதற்கான அறிகுறி, வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் இல்லை. எனவே தென்னாப்பிரிக்கா நெதர்லாந்து போட்டி, முழுமையாக நடைபெற்று, அந்த அணி நெதர்லாந்தை வெற்றிகொள்ளும் சூழல் உருவாகக்கூடும்.

வங்கதேசம்

வங்கதேச அணி

பட மூலாதாரம், Getty Images

விளையாடிய போட்டிகள்-4, புள்ளிகள்-4, நிகர ஓட்ட விகிதம்: -1.276, மீதமுள்ள போட்டி - பாகிஸ்தானுக்கு எதிராக.

குரூப் 2வில் அரையிறுதிக்கான சமன்பாடுகள் இப்போதும் தெளிவாக இல்லை.

வங்கதேசம் இந்தப்போட்டியில் முன்னேறிச்செல்வதற்கான வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இதற்குக் காரணம் அவர்களின் மிக மோசமான நிகர ரன் விகிதம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் தன்னால் முன்னேற முடியாமல் போனாலும்கூட மற்ற அணிகளின் ஆட்டத்தை கெடுக்கும் வல்லமை அதன் கையில் இருக்கிறது.

வங்கதேசம் கடைசி நான்கிற்கு வரக்கூடிய ஒரு சாத்தியகூறு மீதமுள்ளது.

முதலில் பாகிஸ்தானுக்கு எதிரான தனது போட்டியில் வெற்றி பெறவேண்டும். பின்னர் ஜிம்பாப்வே இந்தியாவை தோற்கடிக்க பிரார்த்தனை செய்ய வேண்டும். கூடவே, நிகர ரன் விகிதத்தில் இந்தியாவைத் தாண்டும் அளவிற்கு அபாரமான ரன் வித்தியாசத்தில் அது வெற்றிபெற வேண்டும் அல்லது இந்தியா அதிக ரன் வித்தியாசத்தில் தோற்கவேண்டும்.

இரண்டாவதாக, நெதர்லாந்துக்கு எதிராக தென்னாப்பிரிக்க அணி, ஒரு புள்ளிக்கு மேல் பெறக்கூடாது.

ஜிம்பாப்வே

ஜிம்பாப்வே அணி

பட மூலாதாரம், Getty Images

விளையாடிய போட்டிகள்-4, புள்ளிகள்-3, நிகர ரன் விகிதம்: -0.313, மீதமுள்ள போட்டி - இந்தியாவுக்கு எதிராக.

ஜிம்பாப்வே இந்தியாவை வீழ்த்தினாலும், அது மொத்தமாக 5 புள்ளிகள் மட்டுமே பெற முடியும்.

பாகிஸ்தான் - வங்கதேசத்திற்கு இடையிலான போட்டி மழையால் பாதிக்கப்பட்டால், அத்தகைய சூழ்நிலையில் மூன்று அணிகளின் புள்ளிகளும் சமமாக இருக்கும். ஆனால் நிகர ரன் விகிதத்தில் ஜிம்பாப்வே மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. இந்தியாவை 50 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தினாலும், அதே அளவு வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை நெதர்லாந்து வீழ்த்த வேண்டும் என்று அது பிரார்த்தனை செய்ய வேண்டும்.

இதன் காரணமாக நாக் அவுட் நிலையை எட்டும் அதன் வாய்ப்பு மிகவும் பலவீனமாக உள்ளது.

இறுதிப் போட்டியில் மோதிய இந்தியா, பாகிஸ்தான் அணிகள்

டி20 உலக கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஒரே ஒரு முறைமட்டுமே இறுதி ஆட்டத்தில் மோதியுள்ளன. அந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றிபெற்றது.

அந்த போட்டி 2007ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி ஜோஹேன்னஸ்பர்க்கில் (தென்னாப்பிரிக்கா) நடந்தது.

2007 டி20 வென்ற இந்திய அணி

பட மூலாதாரம், SAEED KHAN,GETTY

படக்குறிப்பு, 2007 டி20 வென்ற இந்திய அணி

நடுத்தர வேகப்பந்து வீச்சாளர் ஜோகிந்தர் ஷர்மாவின் அந்த பந்தில், மிஸ்பா உல் ஹக் சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் பந்தை காற்றில் விளாசிய தருணம் மற்றும் ஸ்ரீசாந்த் அதை கேட்ச் பிடித்த தருணம், இந்தியர்களின் இதயங்களில் இன்னும் சிறை வைக்கப்பட்டுள்ளது. அதே நேரம் அவை பாகிஸ்தான் இதயங்களில் அம்புபோல குத்துகின்றன.

முதல் டி20 உலகக் கோப்பை 2007ஆம் ஆண்டு விளையாடப்பட்டது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பெரும்பாலான அணிகளை வீழ்த்தி பட்டத்திற்காக மோதியது. மகேந்திர சிங் தோனி புதிய கேப்டனாகி இருந்தார். இந்திய அணியில் அனுபவத்தைக்காட்டிலும் இளமை, கோலோச்சியது. முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவரில் 157 ரன்கள் எடுத்தது.

தொடக்க ஆட்டக்காரர் கெளதம் கம்பீர் 54 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து அபாரமான இன்னிங்ஸை விளையாடினார். கடைசி ஓவரில், தற்போதைய கேப்டனும் அந்த சகாப்தத்தின் இளம் பேட்ஸ்மேனுமான ரோஹித் ஷர்மா ரன் ரேட்டை அதிகரிக்கும் விதமாக 30 ரன்கள் எடுத்தார்.

இந்தியா தொடக்கம் முதலே பிரமாதமாக பந்துவீசியதால், பாகிஸ்தான் அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்த வண்ணம் இருந்தன. ஆனால் மிஸ்பா உல் ஹக் கடைசி ஓவர் வரை நம்பிக்கையை கைவிடவில்லை. அவர் எடுத்த 43 ரன்கள் இந்திய அணியின் வயிற்றில் புளியைக் கரைத்தது. ஆனால் கடைசி ஓவரை ஜோகிந்தர் ஷர்மாவுக்குக் கொடுக்க தோனி எடுத்த முடிவு மேஜிக் போல வேலை செய்தது. இதுவரை செய்து வந்த அற்புதத்தை அந்த கடைசி ஷாட்டில் மிஸ்பாவால் செய்ய முடியவில்லை.

இதன் காரணமாக டி20 உலகக் கோப்பை வெறும் 5 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடமிருந்து கை நழுவிப்போனது.

காணொளிக் குறிப்பு, விராட் கோலியின் 'போலி ஃபீல்டிங்' வங்கதேச ரசிகர்களைக் கடுப்பாக்கியது ஏன்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: