டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தான் பாபர் ஆஸம் - 'நானும் ரிஸ்வானும் மோசம்'

பட மூலாதாரம், Getty Images
டி20 உலகக் கோப்பை போட்டியில் தானும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ரிஸ்வானும் சரியாக ஆடவில்லை என்பதை பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
உலகக் கோப்பை தொடரில் பாபர் ஆஸம் சரியாக ஆடவில்லை என்றாலும் அவருக்கு ஆதரவாகவும் நம்பிக்கை தரும் வகையும் ஏராளமானோர் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
பேட்டிங்கில் இந்தியாவின் விராட் கோலியுடன் அவ்வப்போது ஒப்பிடப்படும் பாபர் ஆஸம், விராட் கோலி முன்பிருந்தது போலவே ஒரு மோசமான கட்டத்தை கடந்து வருகிறார் என்று விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள்.
டி20 உலகக் கோப்பை போட்டியில் பலமான தென்னாப்பிரிக்க அணியை பாகிஸ்தான் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்ததால் குரூப்-2 பிரிவில் இருந்து எந்த அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும் என்பது குழப்பமாகி இருக்கிறது.
இந்தப் போட்டியில் டக்வொர்த் லீவிஸ் முறையில் போட்டியின் முடிவு தீர்மானிக்கப்பட்டது. 20 ஓவர்களில் இருந்து 14 ஓவர்களாகக் குறைக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டபோது, குறிப்பிட்ட இலக்கை தென்னாப்பிரிக்க அணியால் எட்ட முடியவில்லை.
எனினும் மழை குறுக்கிட்டு ஓவர்கள் குறைக்கப்பட்டது பற்றியோ, அல்லது ஈரமான மைதானத்தால் பந்துகள் பவுண்டரிக்குச் செல்லாதது குறித்து தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா புவுமா எந்தக் குறையும் சொல்லவில்லை. அதேபோல் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தது குறித்து கவலைப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
ஆனால் "பாகிஸ்தான் வெற்றி பெற்றிருப்பது ஒரு விழிப்புக்கான அழைப்பு" என்று கூறினார் பவுமா.
"பந்துவீச்சிலும் ஃபீல்டிலும் சிறப்பாகச் செயல்படவில்லை" என்று தங்களுடைய குறையை பவுமா ஒப்புக் கொண்டார்.
பாபர் ஆஸம் கவலை
பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்க அணியுடன் உலகக் கோப்பை போட்டிகளில் ஆடிய அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறது. அந்த வரலாறு நேற்றைய போட்டி வரைக்கும் தொடர்ந்திருக்கிறது.
முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகியிருந்த பாகிஸ்தான் அணி அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று தங்களுடைய நம்பிக்கையை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
தென்னாப்பிரிக்காவுடனான போட்டி முடிந்து பிறகு பேசிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம், "கடந்த இரு போட்டிகளிலும் 100 சதவிகித ஆட்டத்தை அணியினர் வெளிப்படுத்தியுள்ளனர்" என்று கூறினார்.
"நானும் ரிஸ்வானும் சரியாக ஆடவில்லை" என்று அவர் ஒப்புக் கொண்டார்.
பாபர் ஆஸம், ரிஸ்வான் எப்படி ஆடியிருக்கிறார்கள்?
பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களும் நம்பிக்கை நட்சத்திரங்களுமான ரிஸ்வானும் பாபர் ஆஸமும் இந்த உலகக் கோப்பைத் தொடரில் சிறப்பாக ஆடவில்லை.
தென்னாப்பிரிக்காவுடனா போட்டியில் பாகிஸ்தான் வென்ற போதும் பாபர் ஆஸம் 15 பந்துகளில் வெறும் 6 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். ரிஸ்வான் 4 ரன்களை மட்டுமே எடுத்தார். ஷதாப்கான், இப்திகார் அகமது உள்ளிட்டோரின் ஆட்டமே பாகிஸ்தான் அணி 185 ரன்களைக் குவிக்க உதவியது.

பட மூலாதாரம், Getty Images
இதற்கு முன்பு நெதர்லாந்துடனான போட்டியிலும் பாபர் ஆஸம் வெறும் 4 ரன்களை மட்டுமே எடுத்து ரன் அவுட் ஆகிவிட்டார். இந்தப் போட்டியில் ரிஸ்வான் ஓரளவு நின்று ஆடி 49 ரன்களைக் குவித்தார்.
ஜிம்பாப்வேயுடனான போட்டியில் பாகிஸ்தான் தோல்வியடைந்தது. அந்தப் போட்டியிலும் பாபர் ஆஸம் 4 ரன்களைத்தான் எடுத்தார். ரிஸ்வான் 14 ரன்களை எடுத்தார்.
இந்தியாவுடனான போட்டியில் பாபர் ஆஸம் ரன் ஏதும் எடுக்காமல் அர்ஷ்தீப் பந்துவீச்சில் எல்பிடபுள்யூ முறையில் ஆட்டமிழந்தார். ரிஸ்வான் அந்தப் போட்டியில் 4 ரன்களை மட்டுமே எடுத்தார். இப்திகார் அகமது ஷான மசூத் ஆகிய இருவரின் ஆட்டம் காரணமாக பாகிஸ்தான் அணி அந்தப் போட்டியில் 159 ரன்களை எடுக்க முடிந்தது.
ஒட்டுமொத்தமாக பாபர் ஆஸம் இந்தத் தொடரில் முறையே 0,4,4,6 ரன்களையும், ரிஸ்வான் 4, 14, 49, 4 ரன்களையும் எடுத்திருக்கிறார்கள்.மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் ஆட்டத்தால் அந்த அணி ஓரளவு ரன்களைக் குவித்து வருகிறது.

பட மூலாதாரம், Getty Images
பாபர் ஆஸம் மீது விமர்சனங்கள் இருந்தாலும் அவருக்கு ஆதரவாகவும், நம்பிக்கை வைத்தும் சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் பதிவிடுகின்றனர்.
பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குச் செல்லுமா?
பாகிஸ்தான் அணி இதுவரை 4 போட்டிகளில் ஆடி 2 போட்டிகளில் வெற்றியும் 2 போட்டிகளிலும் தோல்வியும் அடைந்திருக்கிறது. அதனால் 4 புள்ளிகள் கிடைத்திருக்கின்றன. அந்த அணியின் ரன்ரேட் 1.117. அடுத்ததாக அந்த அணி வங்கதேசத்துடன் மோத இருக்கிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை காலையில் அந்தப் போட்டி நடக்கிறது.
இந்தப் போட்டியில் வெற்றிபெறும்பட்சத்தில் அந்த அணி 6 புள்ளிகளைப் பெறும். எனினும் அடுத்து நடக்கும் இந்தியா-ஜிம்பாப்வே ஆட்டத்துக்காக பாகிஸ்தான் காத்திருக்க வேண்டும். இந்தியா தோல்வியடையும் பட்சத்தில் பாகிஸ்தான் அரையிறுதிக்குச் சென்றுவிடும்.
இந்தியாவுக்கு என்ன சிக்கல்?
இந்தியா இதுவரை 4 போட்டிகளில் ஆடி மூன்று போட்டிகளில் வென்று 6 புள்ளிகளைப் பெற்றிருக்கிறது. இப்போதைக்கு பட்டியலில் முதலிடத்தில் இருந்தாலும், பாகிஸ்தானும் தென்னாப்பிரிக்காவும் அடுத்த போட்டிகளில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்தியாவை முந்திவிடும் நிலை ஏற்படும்.
அடுத்த ஆட்டத்தில் இந்தியா குறைந்தபட்சம் ஒரு புள்ளியையாவது பெற வேண்டும். அதாவது மழையாவது பெய்ய வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
ஏனென்றால் இந்தியாஅதனால் இந்தியா அரையிறுதிக்குத் தகுதி பெற வேண்டுமானால் ஜிம்பாப்வே அணியுடன் வெற்றி பெற்றாக வேண்டும். இல்லையென்றால் அரையிறுதிக்குச் செல்ல முடியாது.
ஜிம்பாப்வேயுடனான போட்டி ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் நடக்க இருக்கிறது.
தென்னாப்பிரிக்கா அரையிறுதிக்குச் சென்றுவிட்டதா?
தென்னாப்பிரிக்க அணி 4 போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வென்றும் ஒரு போட்டியில் மழையால் பாதிக்கப்பட்டும் 5 புள்ளிகளைப் பெற்றிருக்கிறது. அந்த அணியின் ரன் ரேட் 1.441. அடுத்ததாக நெதர்லாந்து அணியுடன் மோதுவதால் அந்த அணிக்கு அரையிறுதிக்குச் செல்வதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவே கருதலாம்.
வங்கதேசத்துக்கு வாய்ப்பிருக்கிறதா?
வங்கதேச அணி இப்போது 4 போட்டிகளில் 2 போட்டிகளில் வென்று 4 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி அடுத்தாக பாகிஸ்தானுடன் ஆடவுள்ளது. அந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் அந்த அணிக்கு அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கான சிறு வாய்ப்புக் கிடைக்கும். எனினும் தற்போது அந்த அணியின் ரன் ரேட் குறைவாக இருப்பதால், அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டியிருக்கும்.
மற்ற அணிகளுக்கு என்ன வாய்ப்பு?
இந்தியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் தவிர பிரிவு-2 இல் உள்ள ஜிம்பாப்வே, நெதர்லாந்து ஆகிய அணிகள் இனி அரையிறுதிக்குத் தகுதி பெறுவதற்கான வாய்ப்பு இல்லை.
அரையிறுதிக்குத் தகுதிபெறப் போவது யார் என்பதைத் தெரிந்து கொள்ள வரும் ஞாயிற்றுக்கிழமை வரை காத்திருக்க வேண்டும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













