காமன்வெல்த் விளையாட்டு 2022: மீராபாய் சானு பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்று சாதனை

பட மூலாதாரம், Clive Brunskill
காமன்வெல்த் போட்டியில் 49 கிலோ எடை பிரிவில் மொத்தம் 201 கிலோ எடையை தூக்கி இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் வென்று கொடுத்துள்ளார் பளு தூக்கும் வீராங்கனை மீராபாய் சானு. ஸ்னாட்ச் சுற்றுக்குப் பிறகு சானு 12 கிலோ எடையை அதிகமாக்கி தமது சாதனையை படைத்தார்.
முதல் முயற்சியிலேயே 84 கிலோ எடையை அவர் தூக்கினார். பிறகு இரண்டாவது முயற்சியில் 88 கிலோ எடையை தூக்கி தனது முந்தைய சாதனையை சமன் செய்தார். அதன் மூலம் தங்க பதக்க நிலையிலேயே அவர் தொடர்ந்தார். அந்த வகையில் இது ஸ்னாட்ச் சாதனையாகவும் கருதப்படுகிறது.
மூன்றாவது முயற்சியில் மீராபாய் 90 கிலோ எடையை தூக்க முயன்றார்.
முன்னதாக, மீராபாய் டோக்யோ ஒலிம்பிக்கில் ஏற்கெனவே தாய்நாட்டுக்கு வெள்ளிப் பதக்கம் வென்று கொடுத்தவர். அப்போதே 49 கிலோ எடைப்பிரிவில் அவர் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், சனிக்கிழமை நடந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் தங்கப்பதக்கக் கணக்கை திறந்து வைத்திருக்கிறார் மீராபாய் சானு.
ஆண்களுக்கான 55 கிலோ எடைப் பிரிவில் பளுதூக்கும் வீரர் சங்கேத் மகாதேவ் சனிக்கிழமை வெள்ளிப் பதக்கம் வென்றார்.

பட மூலாதாரம், Clive Brunskill
குறிப்பிடத்தக்க அம்சமாக, மீரா 2017ஆம் ஆண்டு உலக பளுதூக்கும் சாம்பியன்ஷிப்பில் தனது எடையை விட கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதாவது 194 கிலோ எடையை தூக்கி தங்கம் வென்றிருக்கிறார்.
இதன் மூலம் கடந்த 22 ஆண்டுகளில் இவ்வாறு செய்த முதல் இந்திய பெண் என்ற பெருமையையும் மீராபாய் பெற்றார்.
மீரா தனது 48 கிலோ எடையை பராமரிக்க போட்டி நாளில் உணவு கூட சாப்பிடவில்லை. இந்த நாளுக்கு தயாராவதற்காக, கடந்த ஆண்டு தனது உண்மையான சகோதரியின் திருமணத்தில் கூட மீரா கலந்து கொள்ளவில்லை.
இந்தியாவுக்காக பதக்கம் வென்றவுடன் மீராவின் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தது.
2016 முதல் அவர் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் இன்றைய தினம் சாட்சியாக இருந்ததாக அவரது ரசிகர்கள் கூறுகின்றனர்.
கடந்த 11 வருடங்களில் 15 வயதுக்குட்பட்டோருக்கான சாம்பியனாகவும், 17 வருடங்களில் ஜூனியர் சாம்பியனாகவும் விளங்கினார் மீராபாய்.
குஞ்சுராணியைப் பார்த்து, மீராவுக்கு தாமும் பளு தூக்கும் சாம்பியன் ஆக வேண்டும் என்ற கனவு ஏற்பட்டது. அந்த கனவை துரத்திப் பிடித்ததன் விளைவாக, 2016இல் தமது ஆதர்ச நாயகியின் 12 ஆண்டுகால தேசிய சாதனையை முறியடித்தார் மீரா. அப்போது அவர் தூக்கிய பளுவின் எடை 192 கிலோ.
2016 ரியோ ஒலிம்பிக்கில் மிகவும் மோசமான ஆட்டத்தில் இருந்து டோக்யோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றது வரை சானுவின் பயணம் அபாரமானது.
ஆனால் ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு அவர் சென்றபோது நடந்த கதையே வேறு.
'முடிக்கவில்லை'
ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் நீங்கள் மற்ற வீரர்களை பின்னுக்குத் தள்ளினால் அது ஒரு விஷயம், ஆனால் உங்கள் விளையாட்டை சரியாக முடிக்க முடியவில்லை என்றால் அது எந்தவொரு வீரரின் மன உறுதியையும் குலைக்கும் சம்பவமாக இருக்கலாம்.
2016இல் இந்தியாவின் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானுவுக்கும் அதுவே நடந்தது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
மீரா ஒலிம்பிக்கில் தனது பிரிவில் இரண்டாவது வீராங்கனையாக இருந்தார், அவருடைய பெயர் ஒலிம்பிக்கில் 'கட்டத்தை நிறைவு செய்யவில்லை' என்றே குறிக்கப்பட்டிருந்தது.
அன்றாட பயிற்சியில் மீரா எளிதாகத் தூக்கும் பளுவை, ரியோ ஒலிம்பிக் போட்டி நாளில் தூக்க முற்பட்டபோது அவரது கைகள் பனிபோல் உறைந்தன. அப்போது இந்தியாவில் இரவு நேரம் என்பதால் வெகு சில இந்தியர்களே அந்த காட்சியை பார்த்தனர்.
இந்திய விளையாட்டு ஆர்வலர்கள் காலையில் இந்தச் செய்தியைப் படித்தபோது, இரவோடு இரவாக அவர்களில் பலரது பார்வைக்கு வில்லி ஆக மாறினார் மீராபாய்.
2016க்குப் பிறகு அவர் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளானார், ஒவ்வொரு வாரமும் கவுன்சிலிங் அமர்வுகளை அவர் எதிர்கொண்டார்.
இந்த தோல்விக்குப் பிறகு, மீரா விளையாட்டிலிருந்து விலகும் முடிவை எடுத்தார். ஆனாலும் அவருக்குள் மறைந்திருந்த வெற்றி வேட்கை, மனம் தளராமல் சர்வதேசப் போட்டிகளில் மீண்டும் பலமாகத் திரும்ப அவருக்கு உதவியது.
2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 48 கிலோ பிரிவு பளுதூக்கும் போட்டியில் மீராபாய் சானு தங்கப் பதக்கம் வென்றார்.
மூங்கில் மூலம் பளு தூக்கும் பயிற்சி
1994ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தார் மீராபாய் சானு.
சிறுவயதிலிருந்தே மிகவும் திறமையானவராக அறியப்பட்டார். சிறப்பு வசதிகள் இல்லாத இவரது கிராமம் இம்பாலில் இருந்து 200 கிமீ தொலைவில் இருந்தது.
அந்த காலத்தில் மணிப்பூரைச் சேர்ந்த பெண் பளுதூக்கும் வீராங்கனை குஞ்சுராணி தேவி நட்சத்திரமாக ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் விளையாடச் சென்றார்.
அந்தக் காட்சி மீராவின் மனதில் குடியேறியது. அவரது குடும்பத்தில் ஆறு உடன்பிறப்புகளில் இளையவரான மீராபாய், தமது கனவை எட்ட சரியான நாளுக்காக காத்திருந்தார்.
மீராவின் வற்புறுத்தலுக்கு முன்னால், அவரது எண்ணத்தை நிறைவேற்ற வழிவிடுவதைத்தவிர வேறு தேர்வு அவரது பெற்றோருக்கு இருக்கவில்லை.
2007இல் பயிற்சி செய்ய ஆரம்பித்தபோது முதலில் இரும்புக் கம்பி இல்லாததால் மூங்கில் வைத்து பயிற்சி செய்தார் மீராபாய்.
கிராமத்தில் பயிற்சி மையம் இல்லை என்பதால், 50-60 கிமீ தூரம் சென்று பயிற்சி பெற்றார். அவரது உடல் வலுவை அதிகரிக்க, தினமும் பால் மற்றும் கோழிக்கறி உணவுக்குத் தேவைப்பட்டது, ஆனால் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மீராவுக்கு அது அன்றாடம் சாத்தியமில்லை. ஆனாலும், இந்த தடங்கல், இவரது சாதனை முயற்சிக்கு தடையாக இருக்கவில்லை. அவரது உள்ள உறுதிக்கு முன்னால், எல்லா தடங்கல்களும் உடைந்து இப்போது அவரை இந்தியாவின் சாதனை நட்சத்திரமாக உலகின் முன் நிறுத்தியிருக்கிறது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












