ரோஹித் குருநாத் சர்மா - இந்திய டி20 அணியின் புதிய கேப்டனின் சாதனைகள் என்ன?

ரோஹித் சர்மா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரோஹித் சர்மா

இந்தியா டி20 உலகக் கோப்பைத் தொடரில் இருந்து வெளியேறிய பின், நியூஸிலாந்துடனான டி20 தொடரில் விளையாடும் அணியை நவம்பர் 9ம் தேதி அறிவித்தது பிசிசிஐ. இந்தியா நியூஸிலாந்துடன் மூன்று டி20 போட்டிகளை விளையாட உள்ளது.

இப்போட்டிகள் வரும் 17ம் தேதி முதல் தொடங்கும். 17ம் தேதி ஜெய்பூர், 19ம் தேதி ராஞ்சி, 21ம் தேதி கொல்கத்தாவில் என மூன்று போட்டிகள் நடக்க உள்ளன.

நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில், இந்திய அணியின் முக்கிய பேட்டராக இருந்த ரோஹித் சர்மா, அணியை தலைமை தாங்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது பிசிசிஐ. பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைவராக செயல்பட்ட கே.எல். ராகுல் துணைத் தலைவராக விளையாட உள்ளார்.

ரோஹித் சர்மாவின் புதிய பொறுப்புக்கு சுனில் கவாஸ்கர் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்திய டி20 அணியின் புதிய தலைவர் யார்? டி20 ஃபார்மெட்டில் என்ன சாதனைகளைப் படைத்திருக்கிறார்? அவர் தலைமை தாங்கிய டி20 சர்வதேச போட்டிகளில் இந்தியாவுக்கு பெற்றுக் கொடுத்த வெற்றிகள் என்ன?

1. இந்திய அணியின் க்ளாஸ் பேட்டர்களுக்கு மத்தியில் விரேந்தர் சேவாக், மகேந்திர சிங் தோனி போன்ற மாஸ் பேட்டர்கள் பந்தை பவுண்டரிக்கு தெறிக்கவிட்டுக் கொண்டிருந்த காலத்தில்தான் ரோஹித் சர்மா என்கிற ஹிட்டரும் இந்திய அணிக்குள் நுழைந்தார். 2014ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ரோஹித் அடித்த 264 ரன்கள்தான் இன்றுவரை ஒருநாள் போட்டிகளில் ஒரு தனிநபர் அடித்த அதிகபட்ச ஸ்கோர். அதே போல ஒருநாள் போட்டிகளில் மூன்று முறை 200-க்கு மேல் ரன்களைக் குவித்த ஒரே வீரரும் அவர்தான்.

2. ஜூன் 2007-ல் ராகுல் டிராவிட் தலைமையில் அயர்லாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் விளையாடியவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. ஜூன் 2007-ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 7ஆவது இடத்தில் களமிறங்கி வெறும் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ரோஹித் சர்மா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரோஹித் சர்மா

3. ஒருநாள் போட்டியில் பெரிதாக சாதிப்பதற்கு முன்பே, ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில், டர்பன் நகரில் தோனி தலைமை தாங்கிய தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் தன் முதல் சர்வதேச அரை சதத்தைப் பதிவு செய்தார்.

4. விராட் கோலி மற்றும் மகேந்திர சிங் தோனி ஆகியோர் முறையே 95 மற்றும் 98 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி உள்ளனர். ஆனால் ரோஹித் சர்மா 116 போட்டிகளில் விளையடியுள்ளார். உலக அளவில் அதிக எண்ணிக்கையில் டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர்கள் பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளார் ரோஹித்.

5. ரோஹித் சர்மா உலகிலேயே டி20 சர்வதேச போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில் 3,038 ரன்களோடு 3ஆவது இடத்தில் உள்ளார்.

6. அதே போல டி20 சர்வதேச போட்டிகளில் நான்கு சதங்களை விளாசிய ஒரே வீரர் ரோஹித் சர்மாதான். அதிக அரை சதங்களை விளாசியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் விராட் கோலியும் (29), 24 அரை சதங்களோடு ரோஹித் சர்மா மற்றும் பாபர் ஆசம் இரண்டாமிடத்திலும் உள்ளனர்.

7. டி20 சர்வதேச போட்டிகளில் அதிக பவுண்டரிகளை விளாசியவர்கள் பட்டியலில் 273 பவுண்டரிகளோடு மூன்றாமிடத்தில் உள்ளார் ரோஹித். சிக்ஸர்கள் பட்டியலில் 140 சிக்ஸர்களோடு இரண்டாமிடத்தில் உள்ளார்.

ரோஹித் சர்மா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரோஹித் சர்மா

8. டி20 ஃபார்மெட்டை இந்தியாவில் பிரபலப்படுத்திய ஐபிஎல் போட்டியை, மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக விளையாடி, ஐந்து முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார். ரோஹித் தலைமையில்தான் 2018ம் ஆண்டு நிதாஸ் கோப்பை மற்றும் ஆசிய கோப்பையை இந்திய அணி வென்றது. எனவே ரோஹித் சர்மாவுக்கு தலைவர் பதவி புதிதல்ல.

9. இதுவரை ரோஹித் சர்மா, இந்தியாவை டி20 சர்வதேச போட்டிகளில் 19 முறை வழிநடத்தியுள்ளார். அதில் 15 முறை இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி தொடரவேண்டும் என்பதே இந்திய ரசிகர்கள் எதிர்பார்ப்பு.

10. மகேந்திர சிங் தோனி, ராகுல் டிராவிட், கெளதம் கம்பீர், விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, சுரேஷ் ரெய்னா, விரேந்தர் சேவாக் என பல தலைவர்களின் கீழ் விளையாடிய அனுபவம் கொண்டவர் என்பதால் அனுபவத்துக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :