டோக்யோ ஒலிம்பிக்: 'ஐ ஆம் சாரி' என பவானி தேவியின் உருக்கமான பதிவால் நெகிழ்ந்த நெட்டிசன்கள்

பவானி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரான்ஸ் வீராங்கனையுடன் மோதும் பவானி தேவி

வாள்வீச்சு போட்டியில் தோல்வியடைந்த பவானி தேவி, தனது தோல்வி குறித்து ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

என்னால் முடிந்த அளவுக்கு ஆடினேன். ஆனால் வெற்றிபெற இயலவில்லை. மன்னித்து விடுங்கள் என அவர் கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒவ்வொரு முடிவும் ஒரு தொடக்கத்தை கொண்டிருக்கும். அடுத்த ஒலிம்பிக்கில் பதக்கத்தை பெறும் வகையில் கடுமையாகப் பயிற்சி செய்வேன் நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன் என தனது ட்விட்டர் பதிவில் பவானி தேவி கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோதி, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு பவானி தேவி நன்றி தெரிவித்துள்ளார்.

இந்தியா சார்பில் வாள்வீச்சு போட்டியில் முதல் முறையாகப் பங்கேற்ற நபர் என்ற பெருமையைப் பெற்ற தமிழ்நாட்டைச் பவானி தேவி, முதல் சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்றார். 15-3 என்ற புள்ளிகள் கணக்கில் துனிசிய வீராங்கனை நாடியா பென் அஸிஸியை அவர் வீழ்த்தினார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

ஆனால் இரண்டாம் சுற்றில்,பிரான்ஸைச் சேர்ந்த ப்ரூனெட்டிடம், 7-15 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

மீராபாய் சானுவுக்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு

ஒலிம்பிக் இந்திய பளு தூக்கும் வீராங்கனை மீரா பாய்க்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு கிடைத்திருப்பதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

மீராபாய் பங்கேற்ற பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்ற சீன வீராங்கனை ஸீ ஹூ ஊக்க மருந்து உட்கொண்டதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து அவர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளார்.

அதில் முடிவுகள் அவருக்கு பாதகமாக வந்தால், அவர் பெற்ற தங்கப்பதக்கம் பறிக்கப்பட்டு அடுத்த நிலையில் உள்ள மீரா பாய் சானுவுக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளது என ஏஎன்ஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

மீராபாய்

பட மூலாதாரம், MIRABHAI CHANU

படக்குறிப்பு, மீராபாய் சானு

இதற்கு முன் பல தருணங்களில் ஊக்க மருந்து உட்கொண்ட போட்டியாளர்களிடம் இருந்து பதக்கங்கள் பறிக்கப்பட்டுள்ளன.

சரத் கமல் முன்னேற்றம்

டோக்கியோ ஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் போட்டியில், இந்தியாவின் சரத் கமல் மூன்றாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இரண்டாம் சுற்றில், போர்ச்சுக்கல் வீரர் தியாகோ அப்போலினியாவை 4-2 என்ற கணக்கில் சரத் கமல் வீழ்த்தினார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த சரத் கமல் நாளை நடக்கும் மூன்றாவது சுற்று ஆட்டத்தில் சீனாவின் மா லாங்கை எதிர்கொள்கிறார்.

இந்திய வீரர்கள் அடுத்தடுத்து தோல்வி

இந்திய வீரர்கள் இன்று ஒலிம்பிக்கில் அடுத்தடுத்து தோல்வியடைந்து போட்டிகளில் இருந்து வெளியேறி ஏமாற்றமளித்தனர்.

ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் மணிகா பத்ரா தோல்வியடைந்தார். இந்தப் போட்டியில் ஆஸ்திரியாவின் பொல்கனோவா 4-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். ஏற்கெனவே கலப்பு இரட்டையர் போட்டியிலும் அவர் தோல்வியடைந்திருக்கிறார்.

மணிகா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மணிகா பத்ரா

இதேபோல டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சுதிர்தா முகர்ஜி தோல்வியடைந்தார். 23 நிமிடங்கள் மட்டுமே நடந்த இந்தப் போட்டியில் போர்சுகல் நாட்டின் ஃபூ 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். முதல் சுற்றுப் போட்டியில் சிறப்பாக ஆடிய சுதிர்தா இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே தடுமாறினார்.

டென்னிஸில் சுமித் நாகல் தோல்வி

ஒலிம்பிக் ஆண்கள் டென்னிஸ் ஒற்றையர் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சுமித் நாகல் தோல்வியடைந்தார். உலகின் இரண்டாம் நிலை வீரரான ரஷ்யாவின் மெத்தேவை நாகல் எதிர்கொண்டார். அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய மெத்வதேவ் 6-3, 6-1 என நேர் செட்களில் வெற்றிபெற்றார். முதல் சுற்றுப் போட்டியில் உஸ்பெகிஸ்தான் வீரரை வென்று இரண்டாவது சுற்றுக்கு நாகல் முன்னேறியிருந்தார்.

பேட்மிண்டன் இரட்டையர் போட்டியிலும் இந்தியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்தியாவின் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி, இந்தோனீசிய இணையிடம் தோல்வியடைந்தது.

வில்வித்தையில் இந்திய ஆண்கள் அணி வெளியேற்றம்

டோக்யோ ஒலிம்பிக் வில்வித்தை குழுப் போட்டியில் இந்திய ஆண்கள் அணி உலகின் முதல்நிலை அணியான தென் கொரியாவிடம் தோல்வியடைந்தது.

அடானு தாஸ், தருண்தீப் ராய், பிரவீண் ஜாதவ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி, இன்று நடந்த போட்டியில் கஜகஸ்தான் நாட்டு அணியை வென்று காலிறுதிக்குத் தகுதி பெற்றிருந்தது.

ஆசிஷ்குமார்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குத்துச் சண்டை மத்திய எடைப் பிரிவில் ஆசிஷ்குமார் தோல்வியடைந்தார்

அதன் பிறகு நடந்த காலிறுதிப் போட்டியில் தென் கொரிய அணியுடன் இந்திய அணி மோதியது. இதில் தொடக்கம் முதலே தென் கொரிய அணி ஆதிக்கம் செலுத்தி வந்தது. இறுதியில் 6-0 என்ற புள்ளிகள் கணக்கில் தென்கொரியா வெற்றி பெற்றது.

துப்பாக்கி சுடுதல் ஸ்கீட் தகுதிச் சுற்றில் இந்திய வீரர்களான அங்கத் சிங் பாஜ்வா 18-ஆவது இடத்தையும் அகமது கான் 25-ஆவது இடத்தையும் பிடித்தனர். அதனால் அவர்களுக்கு அடுத்த சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

பாய்மரப் படகுப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நேத்ரா குமணன் நான்கு பந்தயங்கள் முடிந்த நிலையில் 28-ஆவது இடத்தில் இருக்கிறார். நாளை தொடர்ந்து போட்டிகள் நடக்க இருக்கின்றன.

குத்துச் சண்டை மத்திய எடைப் பிரிவு தொடக்க நிலைப் போட்டியில் இந்தியாவின் ஆஷிக் குமார் சீன வீரரிடம் தோல்வியடைந்தார்.

200 மீட்டர் பட்டர்பிளை நீச்சலில் இந்தியாவின் சஜ்ஜன் பிரகாஷ் 24-ஆவது இடத்தைப் பிடித்து வெளியேறினார். வரும் 29-ஆம் தேதி அவர் 100 மீட்டர் பட்டர்பிளை போட்டியில் பங்கேற்கிறார்.

அமெரிக்க நீச்சல் வீராங்கனைக்கு "ஷாக்"

ப்ரீஸ்டைல் நீச்சலில் உலகின் அதிவேக வீராங்கனையாகக் கருதப்படும் அமெரிக்காவின் கேத்தி லெடிக்கி இன்று தங்கப்பதக்கத்தை தவறவிட்டார்.

400 மீட்டர் ப்ரீஸ்டைல் போட்டியில் ஆஸ்திரேலியாவின் டிட்மஸ், லெடிக்கைய முந்தி முதலாவதாக வந்து தங்கப் பதக்கத்தை வென்றார்.

தங்கப் பதக்கம் வென்ற 13 வயதுச் சிறுமி

பெண்களுக்கான ஸ்கேட்போர்டிங் போட்டியில் 13 வயதே நிரம்பிய ஜப்பானின் மோமோஜி நிஷியா தங்கப் பதக்கத்தை வென்றார். கண்ணீருடன் பதக்கத்தைப் பெற்றுக் கொண்ட அந்தச் சிறுமி, ஜப்பானின் இளம் வயது தங்கப் பெண் என்ற பெருமையைப் பெற்றுக் கொண்டார்.

இ்ந்தப் போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்ற வீராங்கனைகளும் முறைய 13 மற்றும் 16 வயதுடையவர்களே.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :