You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாவ்னா ஜாட்: ரேஸ் வாக்கிங் வீராங்கனையின் ஒலிம்பிக்கை நோக்கிய நம்பிக்கை பயணம்
ராஜஸ்தானில் உள்ள ஒரு சிறிய கிராமத்திலிருந்து வந்த பாவ்னா ஜா, பொருளாதாரத் தடைகள், சரியான உட்கட்டமைப்பு இல்லாத சூழல் மற்றும் அதிக கருத்துகளையும், எதிர்ப்புகளையும் வெளிக்காட்டும் அண்டை வீட்டார் என பல தடைகளைத் தாண்டி, விளையாட்டுத்துறையில் சாதனைகளை படைத்துள்ளார்.
2021ஆம் ஆண்டு டோக்கியோவில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு தேர்வாகியுள்ள பாவ்னா, இந்த விளையாட்டை தேர்வு செய்ததற்குப் பின்னால் ஒரு மிக வித்தியாசமான கதை இருக்கிறது.
ஒருமுறை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் நடந்து செல்வதற்கான போட்டியான வாக்கிங் போட்டியில், ஒரே ஒரு வீரர் விளையாடுவதற்கான இடம் இருந்தது. அந்த இடத்தில் விளையாட தனது பெயரை பதிவு செய்தார் பாவ்னா. அந்த போட்டியிலிருந்து பாவ்னா ஒரு ரேஸ் வாக்கிங் வீராங்கனையாக மாறினார்.
சிறுவயதிலிருந்து, விளையாட்டுத்துறையில் சாதிக்க விரும்பிய பாவ்னாவிற்கு, சரியான பாதையை தேர்வு செய்வதற்கு சற்று கடினமாக இருந்தது.
2009ஆம் ஆண்டு, தேசிய அளவில் விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்பதாக முடிவு செய்தார். ஆனால், மாநில அளவில் விளையாட வேண்டும் என்றால், மாவட்ட அளவில் அவர் பங்கேற்க வேண்டி இருந்தது. அதில் உள்ள தடைகளை தாண்ட வேண்டியிருந்தது.
தடைகளை தகர்த்த பாவ்னா
பாவ்னாவின் தந்தை சங்கர் லால் ஒரு விவசாயி. அவரின் தாயார் நோசர் தேவி ஒரு குடும்பத்தலைவி. ராஜஸ்தானில் உள்ள கப்ரா என்ற கிராமத்தைச் சேர்ந்த இந்த குடும்பம், தங்களிடம் உள்ள இரண்டு ஏக்கர் நிலத்திலிருந்து கிடைக்கும் வருமானத்தைக் கொண்டே வாழ்க்கையை தொடர வேண்டும்.
மகளின் பயிற்சிக்கான தேவைகளை பூர்த்தி செய்ய இந்த குடும்பத்திற்கு கடினமாக இருந்தது. அது மட்டுமில்லாமல், இவர் பயிற்சி எடுக்க வசதியாக உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை. அவருக்கு முறையான ஒரு மைதானம் கூட இல்லாமல் இருந்தது மிகவும் கடினாமான சூழலை உருவாக்கியது.
இருப்பினும், இத்தகைய சூழலால் அவர் சோர்ந்துவிடவில்லை. அதிகாலையில் எழுந்த பாவ்னா, தனது கிராமத்தைச் சுற்றி நடந்து, பயிற்சி எடுக்க ஆரம்பித்தார்.
ஷார்ட்ஸ் அணிந்து பயிற்சி எடுப்பதை கிராமத்தினர் யாராவது பார்த்தால், கருத்து மோதல் ஏற்படும் என்பதால், அவர் அதிகாலையில் எழுந்து தனது பயிற்சியை மேற்கொண்டார்.
சமூகத்திலிருந்து எதிர்ப்புகள் வந்தாலும், குடும்பத்தினரின் நம்பிக்கையும் ஆதரவும் பாவ்னாவிற்கு இருந்தது. உள்ளூர் மற்றும் மாவட்ட அளவில் பல விருதுகளை பெற்ற பாவ்னா இந்திய ரயில்வேயில் வேலையில் இணைந்தார்.
2019ஆம் ஆண்டு நடந்த அனைத்து இந்திய ரயில்வே போட்டிகளில் 20 கி.மீ ரேஸ் வாக்கிங் போட்டியில் தங்கம் வென்ற பாவ்னா, 01:36:17 என்ற நேரக்கணக்கில் 20 கி.மீ தூரத்தை நடந்து இந்த வெற்றியைப் பெற்றார்.
அதேபோல, ராஞ்சியில் கடந்த ஆண்டு நடந்த தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் பதக்கம் வென்ற பாவ்னா, 01:29:54 என்ற மணிக்கணக்கில் போட்டியை முடித்து தேசிய அளவில் சாதனையும் படைத்தார். இதன்மூலம், டோக்கியோவில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு அவர் தகுதி பெற்றார்.
இந்த விளையாட்டுப் பயணத்தில், பாவ்னா சந்தித்த இடையூறுகள், இந்தியாவில் உள்ள அனைத்து வீராங்கனைகளுக்கும் பொதுவானதே.
இந்த வீராங்கனைகள், சர்வதேச அளவில் நடக்கும் மேம்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்கிறார் பாவ்னா.
எந்த ஒரு சர்வதேச போட்டியிலும் பங்கெடுக்காமலேயே ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றதிலேயே பாவ்னாவின் திறன் வெளிப்படுகிறது.
ஒலிம்பிக்ஸில் பங்கேற்பது ஒரு புதிய சவாலாக இருக்கும் என்றாலும், இந்தியாவிற்கான ஒரு பதக்கத்தை கண்டிப்பாக வெல்வேன் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் பாவ்னா. இதுவரை நடந்த 20 கி.மீ ரேஸ் வாக்கிங் போட்டிகளை அவர் முடித்துள்ள நேரக்கணக்கை மனதில் கொண்டு அவர் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்.
(பிபிசி பாவ்னா ஜாட்டிற்கு அனுப்பிய கேள்விகளுக்கு கிடைத்த பதில்களில் அடிப்படையில் இந்த கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.)
பிற செய்திகள்:
- 18 மாதங்களுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் மீண்டும் 4G இணைய சேவை
- ஐந்தில் ஒரு இந்தியருக்கு கொரோனா தொற்று பாதிப்பு: ஐசிஎம்ஆர் ஆய்வு
- விவசாயக் கடன்கள் ரூ.12,110 கோடி தள்ளுபடி - முதல்வர் உத்தரவு கூட்டுறவு சங்கங்களுக்கு பாதகமா?
- இளவேனில் வாலறிவன்: துப்பாக்கி சுடுதலில் உலகின் முதலிடம்; ஒலிம்பிக் கனவில் இந்திய வீராங்கனை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: