You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சந்தியா ரங்கநாதன்: தடைக்கற்களைப் படிக்கற்களாக மாற்றிய தமிழக கால்பந்தாட்ட வீராங்கனை
இந்தியாவின் வளர்ந்துவரும் கால்பந்தாட்ட வீராங்கனையான சந்தியா ரங்கநாதன், நடுத்தர குடும்பத்தில் வளர்ந்தவர். விளையாட்டு என்பது தம்மை மேம்படுத்திக்கொள்ளும் விஷயம் மட்டுமின்றி, ஒருவரின் வாழ்நாள் தேர்வாகவும் இருக்கலாம். தன்னை வெளிப்படுத்தும் ஒரு கருவியாகவும் அது இருக்கலாம்.
தமிழகத்தைச் சேர்ந்த சந்தியா ரங்கநாதன், சாதாரண குழந்தைப்பருவத்தை கொண்டவர். அரசால் நடத்தப்படும் விடுதியில் படித்து முன்னேறிய அவர், மிகவும் இளம் வயதில், கால்பந்தாட்டத்தில் சேர்ந்ததோடு, நாட்டிற்காக பல பதக்கங்களையும் வென்றுள்ளார்.
ஆரம்பம் என்ன?
தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் மே 20ஆம் தேதி, 1998இல் பிறந்தார் சந்தியா. பெற்றோர் இருவரும் பிரிந்துவிட்டதால், அரசால் நடத்தப்படும் விடுதியில், மிகவும் இளம் வயதிலேயே சேர்ந்துவிட்டார்.
அவரின் தந்தையும் இல்லாத சூழலில், தனி ஒருவராக, சந்தியாவின் தேவைகளை தாயாரால் பூர்த்தி செய்ய முடியவில்லை.
அரசினர் விடுதியில், தன்னைவிட பெரியவர்கள் கால்பந்தாட்டம் ஆடுவதைப்பார்த்து வியந்து போனார் சந்தியா. அந்த சீனியர்கள், விளையாட்டிற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வந்தனர்.
அவர்களை பின்பற்ற விரும்பிய சந்தியா, தானும் பல்வேறு இடங்களுக்கு சென்று விளையாடவேண்டும், அந்த இடங்களையெல்லாம் பார்க்க வேண்டும் என்று விரும்பினார்.
ஆறாம் வகுப்பு படித்து வந்த சந்தியாவிற்கு இதுவே ஒரு பெரிய ஊக்க சக்தியாக இருந்தது.
அவரின் விளையாட்டு பயணத்தின் தொடக்க நிலை, மிகவும் கடினமாக இருந்தது, அவருக்கான தேவைகளில் பற்றாக்குறை இருந்தது. கடலூர் மாவட்டத்தில், சிறப்பான முறையில் கால்பந்து விளையாட சமமான மைதானம் இல்லை. ஆனாலும், அவரையும், அவரின் விளையாட்டுத்திறனையும் சேர்த்து பெற்றோர் போல ஊக்குவித்த சிறந்த பயிற்சியாளர்களால், இந்த குறை சந்தியாவிற்கு தெரியவே இல்லை. இதற்காக, ஒரு சராசரி குழந்தைபோல, பெற்றோருடன் சந்தியா வாழவில்லை என்று அர்த்தம் ஆகாது.
அவ்வப்போது, அவரின் தாயார், சந்தியாவை விடுதியில் வந்து பார்த்துவிட்டுப் போவார். ஆனாலும், இது சாதாரணமான தாய்-மகள் உறவாக அமையவில்லை.
உடன் படிக்கும் பலர் அனுபவிக்கும் இயல்பான சில விஷயங்கள் தனக்கு கிடைக்கவில்லையே என்று சந்தியா வருத்தம் கொண்டார். அத்தகைய சூழலில், கால்பந்து மட்டுமே அவருக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாக இருந்தது. மீதம் இருந்த நேரம் முழுவதுமே படிப்பிலேயே சென்றது. பிறகு, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில், வணிகத்தில் முதுகலைப்பட்டம் படிக்க சென்றார்.
தற்போது அவர், கடலூரில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் சமூக சேவையில் முதுகலைபட்டம் பயின்று வருகிறார்.
இலக்கு
தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்த சவால்கள் மற்றும், பெற்றோரின் நேரடியான வளர்ப்பு என்பது இல்லாத போதிலும், விடுதி வாழ்க்கை சந்தியாவிற்கு ஒரு வரமாகவே அமைந்தது. அங்கு எந்த தடையும் இல்லாமல் அவரால் வாழ முடிந்தது. தனது கனவை பின் தொடர, தாய் எப்போதுமே தடையாக இருந்தது இல்லை என்கிறார் சந்தியா.
திருவள்ளுவர் பல்கலைக்கழக பயிற்சியாளர் எஸ். மாரியப்பன் இவருக்கு நல்ல பயிற்சி அளித்து உருவாக்கினார். அதுபோல, கடலூரில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டு அகாடமியும், சந்தியா ஒரு சிறந்த வீராஙகனையாக உருவாக பெரும் பங்கு வகித்தது.
தனது கவனத்தால், பயிற்சியாளர்களின் ஊக்குவிப்பாலும், ஆரம்பம் முதலே சந்தியா, மைதானத்தில் அனைவரின் கவனத்தையும் பெற ஆரம்பித்தார்.
2019ஆம் ஆண்டு இந்திய மகளிர் லீக்கில், மிகவும் திறன்வாய்ந்த வீராங்கனை என்ற பட்டத்தை அவர் பெற்றார். திறமையான விளையாட்டு மற்றும் உடனடியான அங்கீகாரம், அந்த இளம் வீராங்கனையின் தன்னம்பிக்கைக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமைந்தது.
மின்னல்போல விளையாடும் சந்தியா, நேபாளத்தின் தலைநகர் காத்மண்டூவில் நடந்த, எஸ். ஏ. எஃப். எஃப் மகளிர் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவிற்காக விளையாடினார். இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது மட்டுமின்றி, அதிக கோல்கள் எடுத்த வீராங்கனைகள் பட்டியலில் சந்தியாவும் இடம்பெற்றிருந்தார்.
அவருக்கு மிகவும் அதிர்ஷ்டமான இடமாக நேபாளம் மாறியது. 13ஆவது ஆசிய விளையாட்டுப்போட்டிகள் அங்கு நடந்தபோது, இரண்டு கோல்கள் அடித்த சந்தியா, இந்தியா சாம்பியன்ஷிப் பட்டம் வெல்லவும் காரணமாகினார்.
2019ஆம் ஆண்டு வெற்றிக்குப் பின்பு, 2020இல் அடியெடுத்து வைத்த சந்தியா, இந்திய மகளிர் லீக்கில் நான்காம் இடம் வகிக்கும் வீராங்கனை என்ற பெயருடன் ஆண்டைத்தொடங்கினார்.
தனது விளையாட்டை தொடர்ந்து மேம்படுத்திக்கொள்ள சந்தியா கடுமையாக உழைக்கிறார். விளையாட்டு வீராங்கனைகளுக்கு பொருளாதார பாதுகாப்பு என்பது முக்கியமான ஒரு விஷயமாகிறது என்கிறார் சந்தியா. வாழ்வாதாரம் என்ற ஒரு விஷயம்தான் பல வீராங்கனைகள் விளையாட்டுத்துறையை முழுநேரமாக எடுத்து விளையாட தடைக்கல்லாக உள்ளது என்கிறார் அவர்.
ஆகவே, பெண்கள் அதிக எண்ணிக்கையில் விளையாட்டுத்துறையை தேர்வு செய்து வெற்றிகொள்ள, வருங்காலத்தில் அவர்களுக்கு பொது அல்லது தனியார் துறையில் வேலைவாய்ப்பு உள்ளது என்ற உறுதியான நிலை உருவாகவேண்டும் என்கிறார் சந்தியா.
(சந்தியா ரங்கநாதனுக்கு மின்னஞ்சல் மூலம் பிபிசி அனுப்பிய கேள்விகளுக்கு கிடைத்த பதில்களின் அடிப்படையில் இந்த கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.)
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்