You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021: விவசாயக் கடன்கள் ரூ.12,110 கோடி தள்ளுபடி - முதல்வர் உத்தரவு கூட்டுறவு சங்கங்களுக்கு பாதகமா?
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி கடனை தள்ளுபடி செய்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை விதி எண் 110ன்கீழ் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் 16.43 லட்சம் விவசாயிகள் பயன்பெற உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று 110 விதியின்கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுப் பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அவர் பேசுகையில், ``விவசாயிகளுக்கு துயர் ஏற்படும் போதெல்லாம் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிக் காப்பதில் இந்த அரசு முன்னணியில் இருந்து வருகிறது. 2016ஆம் ஆண்டு இந்த அரசு பொறுப்பேற்றவுடன் 31.3.2016 வரையில் நிலுவையில் இருந்த 5,318.73 கோடி ரூபாயை முதல்வராக இருந்த அம்மா தள்ளுபடி செய்தார். இதனால் 12.02 லட்சம் விவசாயிகள் பயன்பெற்றனர். 2017ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடும் வறட்சியின் காரணமாக இழப்பைச் சந்தித்த விவசாயிகளுக்கு 2,247 கோடி ரூபாய் வறட்சி நிவாரணத் தொகையாக வழங்கப்பட்டது" என்றார்.
அவர் தொடர்ந்து பேசுகையில், ``தற்போதுள்ள சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, 31.1.2021 அன்றைய நிலவரப்படி, கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையான 12,110 கோடி ரூபாயையும் தள்ளுபடி செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில் முதல்வரின் இந்த அறிவிப்பு, விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் அறச்சலூர் செல்வத்திடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.
``முதல்வரின் உத்தரவை வரவேற்கிறோம். இது ஒரு நல்ல முடிவு. சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து எடுக்கப்பட்ட முடிவாக இருந்தாலும்கூட கடன் தள்ளுபடி மட்டுமே தீர்வு கிடையாது" என்கிறார்.
மேலும், அவர் பேசுகையில், ``வேளாண் பயிர்களுக்குக் கட்டுப்படியாகக்கூடிய விலைதான் பிரதான தீர்வாக இருக்க முடியும். வேளாண் பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை சட்டப்பூர்வமாக உறுதியாக்கிக் கொடுக்க வேண்டும். காய்கறிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை கேரள அரசு உறுதிப்படுத்தியுள்ளது. இவை போக, பேரிடர் காலங்கள், விளைச்சலின்மை, நோய்த் தாக்குதல் போன்ற நேரங்களில் பாதிப்பு ஏற்படக் கூடிய விவசாயிகளுக்குக் கடன் நிவாரணம் அளிக்கப்பட வேண்டும். அத்திபூத்தார்போல தேர்தல் காலங்களில் மட்டுமே கொடுக்கக் கூடிய நிவாரணமாக இல்லாமல் நிரந்தர தீர்வை அரசு அளிக்க வேண்டும். விவசாயிகளின் நன்மைக்காக கேரளா மற்றும் தெலங்கானா அரசுகள், `கடன் நிவாரண கமிஷன்' என்ற குழு ஒன்றை அமைத்துள்ளன. அதுபோன்ற கமிஷன் இங்கும் அமைக்கப்பட வேண்டும். இதனை அங்குள்ள வங்கிகளும் வரவேற்றுள்ளன" என்று தெரிவித்தார்.
மேலும், ``2016 ஆம் ஆண்டு வாங்கிய பயிர்க்கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுவதாக முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதேநேரம், 2016 ஆம்ஆண்டு முதல் தற்போது வரையில் விவசாயிகள் வங்கிகளுக்குத் திருப்பிச் செலுத்திய கடன்களையும் தள்ளுபடி என அறிவித்திருக்க வேண்டும். அவ்வாறு அறிவிக்காவிட்டால் இனி கூட்டுறவு வங்கிகளில் கடன்களை வாங்கிவிட்டு கட்டாமலேயே இருந்துவிடக் கூடிய நிலைமைகளும் ஏற்படலாம். அது கூட்டுறவு வங்கிகளை பலவீனப்படுத்தக் கூடிய ஒன்றாக மாறிவிடும்" என்கிறார்.
தமிழ்நாட்டில் 4,530 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களும் 180 தொடக்கநிலை ஊரக வளர்ச்சி வங்கிகளும் செயல்படுகின்றன.
``முதலமைச்சரின் உத்தரவுப்படி கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுவிடும். இந்தத் தொகைகள் எப்போது வங்கிகளுக்குச் சேரும்?" எனக் கேள்வியெழுப்புகிறார் தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனத்தின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி.
பிபிசி தமிழுக்காக தொடர்ந்து பேசிய அவர், ``கடன் தள்ளுபடி என்பது வரவேற்கத்தக்கது. அரசு அறிவிப்பின்படி மொத்தத் தொகையும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு எப்போது வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் முதல்வர் வெளியிட வேண்டும். காரணம், இதனை நம்பித்தான் கூட்டுறவு சங்கங்கள் பிழைத்துக் கொண்டிருக்கின்றன. இந்தத் தொகை வரவில்லையென்றால், கூட்டுறவு சங்கங்கள் மேலும் பாதிப்புக்குள்ளாகும். கடந்த காலங்களிலும் இதேபோல் நிதியை தள்ளுபடி செய்வார்கள். ஆனால், அந்தத் தொகையை ஐந்தாண்டுகளுக்குள் பிரித்துக் கொடுப்பார்கள். இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் அதிகம். எனவே, தொகையை உடனே வழங்குவது குறித்தும் முதல்வர் அறிவிப்பை வெளியிட வேண்டும்" என்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: