தோனிக்கு பிரதமர் மோதி எழுதிய கடிதம் - "இந்திய இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளீர்கள்"

இந்திய இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளீர்கள் தோனி - பிரதமர் மோதி புகழாரம்

பட மூலாதாரம், Jan Kruger-ICC

புதிய இந்தியாவின் அடையாளங்களில் முக்கியமானவராக திகழ்கிறீர்கள் என்று கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரரும் இந்திய அணியும் முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

தோனிக்கு புகழாரம்: பிரதமர் மோதி எழுதிய 2 பக்க உணர்ச்சிப்பூர்வ கடிதம்

பட மூலாதாரம், MS DHONI / TWITTER

தோனிக்கு புகழாரம்: பிரதமர் மோதி எழுதிய 2 பக்க உணர்ச்சிப்பூர்வ கடிதம்

பட மூலாதாரம், MS DHONI / TWITTER

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோதி, தோனியை வாழ்த்தி எழுதியுள்ள கடிதத்தில், "நீங்கள் சிறிய காணொளியில் உங்கள் ஸ்டைலில் ஓய்வை அறிவித்தீர்கள். ஆனால் நாட்டின் மிகப்பெரிய விவாதத்திற்கு அது வித்திட்டது. இதனால் இந்தியர்களுக்கு வருத்தம் ஏற்பட்டாலும், அவர்கள் மனதில் இருந்து உங்களுக்கு நன்றி தெரிவித்தனர்" எனத் தொடங்கியுள்ளார்.

மேலும், இந்தியாவின் சிறந்த கேப்டன்களில் தோனியும் ஒருவர் எனக் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோதி, "இந்தியாவை உலக அரங்கில் திரும்பிப் பார்க்க வைத்தீர்கள்" என தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் துறை கண்டிராத சிறந்த பேட்ஸ்மேன், சிறந்த கேப்டன் மற்றும் சிறந்த விக்கெட் கீப்பராக தோனியின் பெயர் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும் என பிரதமர் மோதி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

"சிறிய நகரத்தில் இருந்து வந்து இன்று நாடே போற்றும் நபராக மாறியிருக்கிறீர்கள். இந்தியாவை பெருமைப்பட வைத்திருக்கிறீர்கள். நாம் எங்கிருந்து வருகிறோம் என்பது முக்கியமல்ல எதை அடைகிறோம் என்பதே முக்கியம் என்பதை இந்தகாலத்து இளைஞர்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறீர்கள்"

"வாழ்க்கையில் அச்சமில்லாமல் முன்னேறுவது, கடினமான சூழல்களில் முடிவுகளை எடுப்பது, வெற்றியோ தோல்வியோ அதை அமைதியாக எடுத்துக்கொள்வது போன்ற சில முக்கிய பாடங்களை உங்களிடம் இருந்து இந்நாட்டு இளைஞர்கள் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்" என தோனிக்கு பிரதமர் மோதி எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

2011ஆம் ஆண்டில் நடைடெப்ற உலக கோப்பை இறுதிப்போட்டியில் சிக்சர் அடித்து இந்தியாவுக்கு கோப்பையை வென்று கொடுத்ததை மறக்கவே முடியாது என்று நினைவுகூர்ந்த பிரதமர் மோதி, வெறும் கிரிக்கெட் வீரராக மட்டுமே உங்களை சுருக்கி விட முடியாது, பல கோடி இளைஞர்களுக்கு உத்வேகம் தருபவராக விளங்கி வருகிறீர்கள் என்று கூறியுள்ளார்.

இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்து, அவர்களுக்கு வாய்ப்பு வழங்கி கிரிக்கெட்டில் புதிய சகாப்தம் படைத்தவர் தோனி என்றும் மோதி தமது கடிதத்தில் கூறியுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

மோதி எழுதிய கடிதத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள தோனி, "ஒரு கலைஞர், ராணுவ வீரர் மற்றும் விளையாட்டு வீரர் எதிர்ப்பார்ப்பது எல்லாம் பாராட்டுதான். தங்களுடைய கடின உழைப்பும் தியாகமும் தெரிய வேண்டும், பாராட்டப்பட வேண்டும் என்றே அவர்கள் நினைப்பார்கள். பிரதமர் மோதி அவர்களின் பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி" என எழுதியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: