இந்தியாவில் கொரோனா உயிரிழப்புகள் சரியாக கணக்கிடப்படுவது இல்லையா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், செளதிக் பிஸ்வாஸ்
- பதவி, பிபிசி செய்தியாளர்
கோவிட்-19 தொற்றால் இதுவரை இந்தியாவில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக பதிவாகியுள்ளது.
கொரோனாவால் உயிரிழந்தவர்களில் உலளகவில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.
ஆனால், 10 லட்சம் பேரில், 34 பேர் இறப்பு என்ற எண்ணிக்கையை பார்க்கும்போது ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் ஏற்பட்ட உயிரிழப்புகளை விட இந்தியாவில் குறைவான உயிரிழப்புகளே பதிவாகியுள்ளது.
அதே போல இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் இறப்பு விகிதம் சுமார் 2 சதவீதம் மட்டுமே இருக்கிறது. மோசமாக பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரா போன்ற மாநிலத்தில் கூட, உயிரிழப்புகள் இரட்டிப்பாகும் காலமானது 40 நாட்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.

"கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமானாலும், இறப்பு விகிதம் குறைவாகவே வைக்கப்பட்டது" என்கிறார் இந்திய பொது சுகாதார நிறுவன சிந்தனைக்குழுவின் தலைவரான கே. ஸ்ரீநாத் ரெட்டி.
இதற்கு காரணம் இந்தியா, அதிக இளைஞர்களை கொண்ட நாடு என்கிறார்கள் தொற்று நோயியல் நிபுணர்கள். கொரோனாவால் பெரும்பாலும் அதிகம் பாதிக்கப்படும் நிலையில் இருப்பது வயதானவர்கள்தான். இந்த குறைவான உயிரிழப்புகளுக்கு வேறு ஏதேனும் காரணிகள் இருக்கிறதா என்பது தெளிவாக தெரியவில்லை.

மேலும், பெரும்பாலும் இளைஞர்களை அதிகமாகக் கொண்ட தெற்காசிய நாடுகளில் இதே போன்ற நிலை இருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வங்க தேசத்தில் 10 லட்சத்தில் 22 பேரும், பாகிஸ்தானில் 28 பேரும் உயிரிழந்துள்ளனர்.
மக்கள்தொகையை வைத்துப் பார்க்கும்போது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவைவிட இந்தியா சிறப்பான நிலையில் உள்ளது எனலாம். ஆனால், "இதனை ஆறுதலாக எடுத்துக்கொள்வது பொறுப்பற்றது" என்கிறார் உலக வங்கியின் முன்னாள் தலைமை பொருளாதார நிபுணர் கெளஷிக் பாசு.
புவியியல் ரீதியாக ஒப்பிடுவதற்கு, ஒரு சில எல்லைகள் இருப்பதாக கூறுகிறார் பேராசியர் பாசு.
"இதனை நீங்கள் உணரும் பட்சத்தில், இந்தியா எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வீர்கள். சீனாவில் கொரோனாவால் பத்து லட்சம் பேரில் 3 பேர் உயிரிழந்தனர். இந்தியாவில் இது 34 ஆக உள்ளது. தெற்காசியாவில் இந்தியாவை விட மோசமாக செயல்படும் நாடாக ஆப்கானிஸ்தான் இருக்கிறது. இன்னும் சிறிது நாட்களில் உயிரிழப்புகளின் எண்ணிக்கையில் இந்தியா ஆப்கானிஸ்தானை விஞ்சிவிடும்"
"கொரோனா வைரஸ் அதிகமாவதை சமன்படுத்த முடியாமல் இருக்கும் ஒருசில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. மார்ச் மாத இறுதியில் இருந்து தற்போதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது" என பேராசியர் பாசு கூறுகிறார்.
இந்தியாவில் குறைவான இறப்பு விகிதம் இருக்கிறது என்ற நிலை மட்டும் அங்கு நடக்கும் முழு தகவல்களையும் கூறாது என்று கூறும் நிபுணர்கள், ஒருசில மாநிலங்களில் குறைந்த எண்ணிக்கையே காட்டப்படுவதாக நம்புகின்றனர்.
உதாரணமாக, கொரோனாவால் உயிரிழந்திருப்பார்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களை கொரோனா உயிரிழப்புகளில் சேர்க்க வேண்டும் என உலக சுகாதார விதிகளில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் அதனை செய்வதில்லை.
இரண்டாவது, ஏற்கனவே உடல்நலம் சரியில்லாத நபர்கள்தான் கொரோனாவால் அதிகம் உயிரிழப்பதாக சில மாநில அரசாங்க தரவுகள் குறிப்பிடுகின்றன. குஜராத் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் கொரோனா உயிரிழப்புகளை பெரிதும் குறைத்து காட்டியதாக சுகாதார செய்தியாளர் பிரியங்கா புல்லா நடத்திய புலனாய்வில் தெரிய வந்துள்ளது.
குஜராத் மாநிலம் வதோத்ராவில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு மாதங்களில் 49 சதவீதம் உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 329 சதவீதம் உயர்ந்தது.
அடுத்து, அதிகாரப்பூர்வமாக அரசாங்கம் வெளியிடும் உயிரிழப்புகள் குறித்த தரவுகளுக்கும், தகனம் செய்யும் இடங்கள் மற்றும் சுடுகாடுகளில் உள்ள தரவுகளுக்கும் பெரிய வேறுபாடு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
சரி. இந்தியாவில் கொரோனா உயிரிழப்புகள் சரியாக கணக்கிடப்படுவதில்லையா?
"வலுவற்ற மருத்துவ கண்காணிப்பு அமைப்புகள் இருப்பதால் இந்தியாவில் கொரோனா உயிரிழப்புகள் நிச்சயமாக குறைத்து கணக்கிடப்படுகிறது. ஆனால், எந்த அளவிற்கு குறைத்து கணக்கிடப்படுகிறது என்பதுதான் இங்கு கேள்வி" என்கிறார் டெல்லியின் கண்காணிப்பு ஆய்வு அமைப்பு என்ற சிந்தனையாளர் குழுவின் ஊமன் சி குரியன்.

பட மூலாதாரம், Reuters
"இந்த காலகட்டத்தில் சரியான தரவுகள் இல்லாமல் மற்றும் அதிகப்படியான இறப்புகளைக் கணக்கிடாமல் எவ்வளவு குறைவான இறப்புகள் பதிவு செய்யப்படுகிறது என்பதைக் கணிப்பது கடினம்" என்கிறார் மிஷிகன் பல்கலைக்கழகத்தில் பயோ-ஸ்டாட்டிஸ்டிக்ஸ் மற்றும் தொற்று நோய் பேராசிரியரான பர்மர் முகர்ஜி.
"அதிகப்படியான உயிரிழப்புகள்" என்பது சாதாரண நிலைக்கு அதிகமாக நிகழும் உயிரிழப்புகளாகும். இதில் சில உயிரிழப்புகள் கொரோனாவால் ஏற்பட்டிருக்கலாம்.
"அதிகப்படியான உயிரிழப்புகளை" கணக்கிட கடந்த 3 ஆண்டுகளாக இந்தியாவில் நிகழ்ந்த உயிரிழப்புகளின் தகவல்களை வெளியிட வேண்டும் என மருத்துவர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் என 230 பேர் அதிகாரிகளை வலியுறுத்தி மனு அளித்துள்ளனர்.
சாலை விபத்துகளால் நிகழ்ந்த உயிரிழப்புகளை தனியாக அடையாளப்படுத்த வேண்டும் என அவர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். இதனை தனியாக அடையாளப்படுத்துவதால் புதிய நோய்களால் எத்தனைப் பேர் உயிரிழந்தார்கள் என்ற தெளிவான தகவல் கிடைக்கும்.
இந்தத்தரவுகளை குறைத்து காண்பித்தது என்பது இந்தியாவில் மட்டும் நடக்கவில்லை.
உலகின் 28 நாடுகள் வெளியிட்ட அதிகாரப்பூர்வ கொரோனா உயிரிழப்புகளை விட குறைந்தது 1,61,000 பேர் அதிகம் உயிரிழந்திருப்பது ஜூலை மாதம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தக்கணக்கெடுப்பு செய்யப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெறவில்லை.
."கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகளை இந்தியா சரியாக கணக்கிடவில்லை என்றால், எப்படி வளைவை சமன்படுத்த முடியும்" என்கிறார் டொரொன்டோ பல்கலைக்கழக பேராசாரியர் பிரபத் ஜா.
இந்த பெருந்தொற்று முடிவடையும்போது, ஒருநாட்டில் கொரோனாவால் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பதை வைத்தே, அதைக்கட்டுப்படுத்துவதில் அந்த நாடு எப்படி செயல்பட்டது என்பதை கணக்கிட முடியும்.
பிற செய்திகள்:
- கொரோனா வைரஸ்: சென்னைக்கு வருவோரை தனிமைப்படுத்த நடவடிக்கை
- எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை கவலைக்கிடம்: தற்போதைய நிலை என்ன?
- ட்ரீம் 11: ஐபிஎல் புதிய டைட்டில் ஸ்பான்சரும் அதன் சீன தொடர்பும்
- தமிழ்நாட்டில் பரவியதா D614G திரிபு? மலேசிய நபரின் சிவகங்கை குடும்பத்தினருக்கு பரிசோதனை
- கோவை மாநகராட்சி பள்ளிகளில் ஹிந்தி திணிப்பா? முரண்படும் தகவல்களால் தொடரும் சர்ச்சை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












