தோனி, ஜாதவ் பேட்டிங்: தோல்விக்கு காரணம் என்ற விமர்சனம் சரியா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சிவக்குமார் உலகநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
ஞாயிற்றுக்கிழமையன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடைபெற்ற ஐசிசி உலகக்கோப்பை லீக் போட்டியில், இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
நடப்பு உலகக்கோப்பை தொடரில் ஒருபோட்டியில் கூட தோல்வியடையாமல் வெற்றி பாதையில் வலம்வந்த இந்தியா தனது முதல் தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில், இந்திய அணியின் தோல்விக்கு தோனியின் மெதுவான பேட்டிங் ஒரு முக்கிய காரணம் என சில விமர்சகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
முன்னாள் இந்தியன் கேப்டன் சவுரவ் கங்குலி, சஞ்சய் மஞ்ரேக்கர், முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நசீர் ஹுசைன் போன்றோர் இறுதி ஓவர்களில் தோனி மற்றும் கேதர் ஜாதவின் பேட்டிங் குறித்து தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர்.

பட மூலாதாரம், TWITTER
மேலும் சமூகவலைத்தளங்களிலும் தோனி மற்றும் கேதர் ஜாதவின் பேட்டிங் குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
338 என்ற இமாலய இலக்கை துரத்திய இந்தியா ஆரம்பத்தில் கே. எல். ராகுல் விக்கெட்டை இழந்தவுடன் நிதானமாக விளையாடியது.
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவரும் 138 ரன்களுக்கு ஜோடி சேர்ந்தவுடன் இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கை வந்தது.

பட மூலாதாரம், HENRY BROWNE/GETTY IMAGES
கோலி ஆட்டமிழந்தாலும் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி சதமடித்தார். பந்த் மற்றும் பாண்ட்யா ஆகியோர் தங்கள் பங்குக்கு ரன்கள் சேர்த்தனர்.
பாண்ட்யா ஆட்டமிழந்தவுடன் தோனியுடன் கேதர் ஜாதவ் இணை சேர்ந்தார். 5.1 ஓவர்களில் 70 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இமாலய இலக்கை நோக்கி தோனி மற்றும் ஜாதவ் அதிரடி ஆட்டத்தில் ஈடுபடுவர் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால், தோனி மற்றும் கேதர் ஜாதவ் ஆறாவது விக்கெட்டுக்கு 31 பந்துகளில் 39 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

பட மூலாதாரம், Clive Mason/Getty Images
சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகள் விளாசப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்க, இருவரும் பெரும்பாலான பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுத்தனர். சில பந்துகளில் எந்த ரன்னும் எடுக்கப்படவில்லை.
இதனால் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி ஆனார்கள். தோனி ஏன் இப்படி ஆடுகிறார். ஏன் இப்போதும் கூட பொறுமையாக ஆடுகிறார் என்று பலர் அதிர்ச்சி அடைந்தனர். கடைசியில் 14 பந்துக்கு 50 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை வந்தபின் இந்திய ரசிகர்கள் பலர் மைதானத்தை விட்டு வெளியேறினர்.
ரசிகர்களின் ஆதங்கம் சமூகவலைத்தளங்களிலும் வெளிப்பட்டது.

பட மூலாதாரம், TWITTER
ஆனால், அதேவேளையில் இங்கிலாந்து அணி சிறப்பாக பந்துவீசியது இந்திய அணி இலக்கை எட்ட முடியாததற்கு ஒரு முக்கிய காரணம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
இந்தியாவிற்கு எதிராக மொத்தம் 50 ஓவரில் இங்கிலாந்து அணி 337 ரன்களை குவித்தது, இந்த இமாலய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 50-வது ஓவர் வரை ஒரு சிக்ஸர்கூட அடிக்கவில்லை. .
50-வது ஓவரில் தோனி அடித்ததுதான் ஒரே சிக்ஸர்.
இந்நிலையில் தோனி மற்றும் ஜாதவ்-வின் மெதுவான பேட்டிங் குறித்து வைக்கப்படும் விமர்சனம் குறித்து கிரிக்கெட் வீரரும், பயிற்சியாளருமான ரகுராமன் பேசுகையில், ''தோனி மற்றும் ஜாதவ் ஏன் இலக்கை நோக்கி செல்லவில்லை என்று புரியவில்லை. விக்கெட்டுகளை காத்து ரன்ரேட்டை தக்கவைக்க வேண்டும் என்ற லாஜிக் ஒத்துவரவில்லை'' என்று கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
''ஆப்கானிஸ்தானுடனான போட்டியிலும் தோனியின் பேட்டிங் மீது விமர்சனம் வைக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் தோனி மீது விமர்சனங்கள் தோன்றியுள்ளன'' என்றார்.
''நிச்சயமாக தோற்றுவிடுவோம் என்ற மனநிலையில் இருவரும் ஆடியதுபோல் இருந்தது. இது அணியினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அவநம்பிக்கை ஏற்படுத்தக்கூடும்'' என்று அவர் தெரிவித்தார்.
''அதேவேளையில் எண்ணற்ற போட்டிகளில் தோனி கடைசி ஓவர்களில் அணிக்கு வெற்றி பெற்றுத் தந்தவர் என்று மறக்கமுடியாது. ஓரிரு போட்டிகளை வைத்து மிக அனுபவம் வாய்ந்த தோனி மீது கடுமையான விமர்சனம் வைக்கப்படுவது சரியல்ல. அடுத்த போட்டியிலேயே அவர் மிக அற்புதமாக விளையாடக்கூடும் ' என்று ரகுராமன் குறிப்பிட்டார்.
''இங்கிலாந்து அணியினரின் சிறப்பான மற்றும் துல்லியமான பந்துவீச்சும் இந்தியாவின் தோல்விக்கு காரணம்'' என்று அவர் கூறினார்.
கடைசி ஓவர்களில் அதிரடி சிக்ஸர்கள் மற்றும் திகைக்க வைக்கும் ஹெலிகாப்டர் ஷாட்கள் என 15 ஆண்டுகளாக தோனியை ரசித்துவந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு, இக்கட்டான சூழலில் அதிரடி ஆட்டத்தில் இறங்காமல் தோனி மெதுவாக விளையாடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால், எண்ணற்ற போட்டிகளில் இந்தியா வெற்றி பெற காரணமாக இருந்த தோனி மீண்டும் ஆக்ரோஷமாக எழுவார் என்பது அவரின் தீவிர ரசிகர்களின் கருத்தாக உள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












