India Vs England : இந்தியா தோல்வி - பேர்ஸ்டோவின் சதம் முதல் தோனியின் சிக்ஸர் வரை

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், விவேக் ஆனந்த்
- பதவி, பிபிசி தமிழ்
உலகக் கோப்பை 2019 தொடரில் இந்தியா முதல் தோல்வியைச் சந்தித்திருக்கிறது.
உலகக் கோப்பையில் சாதனை சேஸிங்கை நோக்கி விளையாடிய இந்தியா தோல்வியைத் தழுவியுள்ளது.
உலகக் கோப்பைத் தொடரில் சேஸிங்கில் இந்தியா 300 ரன்களை கடப்பது இது தான் முதல் முறை. ஆனால் வெற்றி பெற இந்த ரன்கள் போதுமானதாக இருக்கவில்லை.
2003 உலகக்கோப்பை இறுதிப்போட்டி, 2015 உலகக்கோப்பை அரை இறுதிப் போட்டி, 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி போல இப்போட்டியிலும் சேஸிங்கில் சொதப்பியது இந்திய அணி. எனினும் முந்தைய மூன்று போட்டிகளை விட நேற்றைய போட்டியில் கூடுதல் ரன்களை எடுத்தது இந்திய அணி.
உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் மட்டுமே இந்தியாவுக்கு சேசிங் வாய்ப்பு வந்தது, குறைவான இலக்கு என்றாலும் கூட தென்னாப்பிரிக்காவின் தரமான பந்துவீச்சை சமாளித்து கடைசி கட்டத்தில் வெற்றி கண்டது.
அதன்பின்னர் தொடர்ச்சியாக முதலில் பேட்டிங் செய்து வென்றுவந்த நிலையில் நேற்று சேஸிங்கில் சறுக்கியிருக்கிறது.

பட மூலாதாரம், Clive Mason
''ஓவ்வொரு அணியும் ஓரிரு போட்டிகள் தோற்கத்தான் செய்யும். உங்களை விட எதிரணி சிறப்பாக விளையாடியது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடுகிறோம். நாங்கள் பேட்டிங்கில் மிகச்சிறப்பாக செயல்படவில்லை என்பதே உண்மை. இன்னும் கொஞ்சம் ரன் குவிப்பை அதிகரித்து இலக்குக்கு நெருக்கமாகச் சென்றிருக்கலாம். ஆனால் அவர்கள் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டார்கள்'' எனப் போட்டி முடிந்த பிறகு கூறினார் கோலி.
''இன்று சிறப்பாக கிரிக்கெட் விளையாடிய இங்கிலாந்துக்கு வாழ்த்துகள்'' என ட்வீட் செய்திருக்கிறார் வீரேந்திர சேவாக்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
2007 உலகக்கோப்பையின் இந்தியா லீக் சுற்றில் வெளியேறிய பிறகு ஐசிசி உலகக்கோப்பை ஒருநாள் தொடர்களில் இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் மூன்றாவது தோல்வி இது.
தோனியும் கேதர் ஜாதவும் ரன் ரேட் எகிறிய வேளையில் ஆறாவது விக்கெட்டுக்கு 31 பந்துகளில் 39 ரன்கள் குவித்தனர். இது குறித்து இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
''இந்தியாவின் வெற்றி ஓட்டத்தை தடுக்கக்கூடிய திறன் படைத்த ஒரே அணியாக இங்கிலாந்து இருக்கிறது. கடைசி கட்ட ஓவர்களை தோனி அணுகிய விதம் புரிந்துகொள்ள முடியாத வகையில் குழப்பாக இருக்கிறது'' என வர்ணனையாளர் சஞ்சய் மஞ்சரேக்கர் ட்விட்டரில் விமர்சித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
இங்கிலாந்து இந்தியாவை வென்றது எப்படி?
இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்கை எடுத்தது.
இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் முகமது ஷமி மற்றும் பும்ராவின் முதல் கட்ட பந்துவீச்சை திறம்பட சமாளித்த இங்கிலாந்து அணி முதல் பத்து ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 47 ரன்கள் குவித்தது. இந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிராக விளையாடிய அணிகளில் இதுவரை அதிக ரன்கள் குவித்தது ஆஸ்திரேலியா மட்டுமே (48/0).
முதல் பத்து ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி ரன்கள் சேர்த்த இங்கிலாந்து அணி அடுத்த பத்து ஓவர்களில் அதிரடியாக ஆடியது.

பட மூலாதாரம், Gareth Copley-IDI
இங்கிலாந்தின் ரன் குவிப்பை கட்டுப்படுத்த முதல் 15 ஓவர்களுக்குள்ளேயே தமது ஐந்து பந்துவீச்சாளர்களையும் பயன்படுத்திப் பார்த்தார் கோலி. ஆனால் பேர்ஸ்டோ - ராய் இணை சிறப்பாக விளையாடியது.
சுழற்பந்து வீச்சாளர்களை சிறப்பாக கையாண்ட இந்த இணை அதிரடி ஆட்டம் காட்டியதில் இங்கிலாந்தின் ஸ்கோர் 20 ஓவர்களில் 145 ரன்களாக உயர்ந்தது.
ஆட்டத்தின் 23-வது ஓவரில் ஜடேஜாவின் அபாரமான ஒரு கேட்ச் காரணமாக ஜேசன் ராய் பெவிலியன் திரும்பினார். இருப்பினும் மறு முனையில் பேர்ஸ்டோ நிதானமாக விளையாடி சதம் கடந்தார்.
ஒரு கட்டத்தில் ஏழுக்கும் அதிகமான ரன் ரேட்டில் இங்கிலாந்து விளையாடி வந்தது.
ஆனால் ஆட்டத்தின் 28-வது ஓவரில் இருந்து இந்திய வீரர்கள் ஆட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பட மூலாதாரம், DIBYANGSHU SARKAR
28 - 38 ஓவர்களில் 60 பந்துகளை சந்தித்த இங்கிலாந்து ஒரே ஒரு பௌண்டரி மட்டுமே அடித்தது. மேலும் நன்றாக விளையாடிக்கொண்டிருந்த பேர்ஸ்டோ மற்றும் இயான் மோர்கன் விக்கெட்களை இழந்தது.
39 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால் கடைசி 11 ஓவர்களில் 107 ரன்கள் குவித்தது. குறிப்பாக ஸ்டோக்ஸ் அபாரமாக விளையாடினார். 54 பந்துகளில் ஆறு பௌண்டரிகள் மூன்று சிக்ஸர்கள் உதவியுடன் 79 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
ஷமி வீசிய 45-வது ஓவரில் 12 ரன்கள் குவித்த இங்கிலாந்து அவரது 47-வது ஓவரில் 17 ரன்கள் மற்றும் 49-வது ஓவரில் 15 ரன்களும் குவித்தது.
பும்ரா வீசிய கடைசி ஓவரில் மூன்று ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
ஒரு கட்டத்தில் இங்கிலாந்தின் ஸ்கோர் 350ஐ தாண்டக்கூடிய சூழலில் இருந்தது. பின்னர் இங்கிலாந்தை 320 ரன்களுக்குள் இந்திய அணி கட்டுப்படுத்தக்கூடும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இறுதியில் இங்கிலாந்து 337 ரன்கள் குவித்தது.
உலகக் கோப்பை வரலாற்றில் இதற்கு முன்னர் எந்தவொரு அணியும் 330 ரன்களுக்கு மேற்பட்ட இலக்கை துரத்தி வென்றதில்லை. கடைசியாக 2011-ம் ஆண்டு இங்கிலாந்து நிர்ணயித்த 329 ரன்கள் எனும் இலக்கை அயர்லாந்து வெற்றிகரமாக கடந்ததே சாதனையாக இருந்தது. எனினும் சேஸிங்கில் இந்திய அணி இதுவரை 325 ரன்களுக்கு மேல் 9 முறை குவித்திருக்கிறது என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்தது.
338 ரன்கள் எனும் பெரிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. கே.எல்.ராகுல் 9 பந்துகளைச் சந்தித்து ரன்கள் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார்.

பட மூலாதாரம், DIBYANGSHU SARKAR
கிறிஸ் வோக்ஸ் வீசிய முதல் ஸ்பெல்லில் இந்திய பேட்ஸ்மேன்கள் ரன்கள் எதுவும் எடுக்கமுடியாமல் திணறினர். வோக்ஸ் ஹாட்ரிக் மெய்டன் வீசினார் மேலும் ராகுல் விக்கெட்டையும் கைப்பற்றினார். ஐந்து ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒன்பது ரன்கள் மட்டும் எடுத்திருந்தது.
15 ஓவர்கள் முடிவில் இந்தியா 53 ரன்கள் எடுத்திருந்தது. 338 ரன்கள் எனும் பெரிய இலக்கை துரத்தும் வேளையில் ஆரம்பகட்ட ஓவர்களில் பெரிய அளவில் ரன்கள் வராததால் வெற்றிக்கு 35 ஓவர்களில் 280 ரன்கள் தேவைப்பட்டது.
கோலி - ரோகித் இணை ஆரம்பத்தில் நிதானம் காட்டினாலும் பின்னர் ரன் குவிக்கும் வேகத்தை அதிகப்படுத்தியது. 28 ஓவர்களில் இந்தியா 144 ரன்கள் எடுத்திருந்தது. ரன் ரேட் மெல்ல மெல்ல உயர்ந்து ஐந்தை தாண்டிய வேளையில் கோலி அவுட் ஆனார்.
சத நாயகன் என அறியப்படும் கோலி இந்த உலகக் கோப்பை தொடரில் ஐந்தாவது முறையாக அரை சதத்தை சதமாக மாற்ற முடியாமல் அவுட் ஆனார். மறு முனையில் ரோகித் பொறுமையாக சதம் கண்டார்.
அவர் 109 பந்துகளில் 102 ரன்கள் எடுத்தார்.
ரோகித் அவுட் ஆனதும் தோனிக்கு பதிலாக பாண்ட்யா உள்ளே வந்தார். அணியின் வெற்றிக்கு 14 ஓவர்களில் 140 ரன்கள் தேவைப்பட்டது.

பட மூலாதாரம், DIBYANGSHU SARKAR
வோக்ஸ் வீசிய 39-வது ஓவரில் இந்தியா 16 ரன்கள் எடுத்தது. ஆனால் 40-வது ஓவரில் பந்த் அவுட் ஆனதும் நிலைமை தலை கீழானது. மிக விரைவில் இங்கிலாந்தின் கட்டுப்பாட்டுக்குள் ஆட்டம் சென்றது.
கடைசி 10 ஓவர்களில் எந்தவொரு இடத்திலும் இந்தியா மிகப்பெரிய அளவில் ரன்கள் குவித்து இங்கிலாந்துக்கு நெருக்கடி ஏற்படுத்தவில்லை.
பாண்ட்யா 33 பந்தில் 45 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தோனி 31 பந்தில் 42 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார் .
இங்கிலாந்து அணி தனது பேட்டிங்கின் போது முதல் பத்து ஓவர்களில் நிதானம் காட்டி இரண்டாவது பத்து ஓவர்களில் அதிரடியாக ஆடி, பின்னர் நடுவரிசை ஓவர்களில் மிகவும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கடைசி ஓவர்களில் வேகமான ரன் குவிப்பில் ஈடுபட்டு 337 ரன்கள் சேர்த்தது.

இதற்கு தலைகீழாக இந்திய அணி முதல் 15 ஓவர்களில் மிக மிக நிதானமாக விளையாடி நடுவரிசை ஓவர்களில் ஓரளவு ரன் குவிப்பில் ஈடுபட்டு கடைசி கட்ட ஓவர்களில் அதிகளவு ரன்களை குவிக்க முடியாமல் தோல்வியைத் தழுவியது.
'' தோனி கடைசி பௌண்டரி விளாச கடுமையாக முயற்சித்தார் என நினைக்கிறேன். ஆனால் அவை கிடைக்கவில்லை. எதிரணியினர் நல்ல லெந்தில் தரையில் நல்ல இடத்தில் பந்துபட்டு எழும்புமாறு வீசினர். ஆகையால் இறுதி ஓவர்களில் பேட்டிங் சிரமமாக இருந்தது'' என்றார் விராட் கோலி.

பட மூலாதாரம், Michael Steele
இங்கிலாந்து முதலில் பேட்டிங் பிடித்தபோது 13 சிக்ஸர்களை விளாசியது.
300 பந்துகளில் 338 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கை துரத்திய இந்தியா ஒட்டுமொத்த இன்னிங்ஸில் ஒரே ஒரு சிக்ஸர் விளாசியது. அது 50-வது ஓவரில் தோனி மூலமாக வந்தது.
இந்திய அணி இன்னும் அரை இறுதிக்குத் முழுமையாக தகுதி பெறவில்லை. நாளை வங்கதேச அணியை எதிர்கொள்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












