விராட் கோலி ‘ரன் மெஷின்’ ஆனது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
தனது 30வது பிறந்தநாளை இன்று (திங்கள்கிழமை) கொண்டாடும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலிக்கு சமூகவலைத்தளங்களில் வாழ்த்து செய்திகள் குவிந்த வண்ணமுள்ளது.
அடுத்த 5 அல்லது 7 ஆண்டுகள் தொடர்ந்து இவ்வாறு கோலி விளையாடினால் எவ்வளவு சாதனைகளை முறியடிப்பார் என்று பல கணிப்புகள் மற்றும் விவாதங்கள் நடந்து கொண்டு இருக்க , அவர் ஒரு தனித்துவமான பேட்ஸ்மேனாக சிறந்து விளங்க காரணம் என்ன? அவரிடம் உள்ள சிறப்பு அம்சம் என்ன?
உடல்தகுதி
உடல்தகுதி என்ற அம்சத்தில் மிகவும் அக்கறை உள்ளவர் விராட் கோலி.. தொடர்ந்து உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி எடுக்கும் அவர், எந்தளவு தன்னுடைய உடலை தயார் செய்துள்ளார் என்பது அவரது பீல்டிங் மற்றும் பேட்டிங்கில் நன்றாகவே எதிரொலிக்கும்.

பட மூலாதாரம், ISHARA S. KODIKARA
தனது அசாத்திய உடல் தகுதியால் நீண்ட நேரம் பேட்டிங் செய்வது மற்றும் களைப்பின்றி, தொய்வின்றி பீல்டிங் செய்வது என்று கோலியால் ஜொலிக்க முடிந்தது.
கிரிக்கெட்டா ? குடும்பமா? கோலியின் தேர்வு எது?
ஒருமுறை டெல்லி அணிக்காக ரஞ்சி கோப்பை போட்டியொன்றில் விராட் கோலி விளையாடிக் கொண்டிருந்தபோது அவரது தந்தை திடீரென இறந்துபோனார். தனது பயிற்சியாளரை மொபைலில் தொடர்பு கொண்ட கோலி, ``என் தந்தை இறந்து விட்டார் . நான் 40 ரன்களுடன் நாட்அவுட்டாக இருக்கிறேன். நாளை என்ன செய்ய வேண்டும் ?'' எனக் கேட்டார்.
``உனக்கு விருப்பமானதைச் செய்'' என்று பயிற்சியாளர் கூற, ``நான் நாளை விளையாட போகிறேன்'' என்றார் 18 வயது கோலி. கோலியை பரிசோதிக்கும் ஆட்டமாக அமைந்த அந்த போட்டியில் பொறுமையாக விளையாடி 90 ரன்களை விராட் சேர்த்ததால் டெல்லி அணி தோல்வியில் இருந்து தப்பியது.
விளையாடியே தீருவேன் என்று அவர் எடுத்த முடிவும்,, நேர்த்தியான ஆட்டமும் கோலியின் மனதிடத்தை எடுத்துக் கூறுவதாக அமைந்தது.

பட மூலாதாரம், JEWEL SAMAD
சச்சினுக்கு பதிலாக களமிறங்கிய கோலி
அண்மையில் சமூகவலைத்தளங்களில் உலவும் ஒரு முக்கியமான விவாதம் விராட் கோலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகிய இருவரில் யார் சிறந்த வீரர் என்பது..
'நான் சச்சின் உயரத்தில் இல்லை' என்று இதற்கு கோலி தெளிவாக கூறிவிட்டாலும், விவாதம் தொடர்ந்த வண்ணமுள்ளது. இது ஒருபுறமிருக்க முதல்முறையாக இந்திய அணியில் விராட் கோலி இடம்பிடித்ததே சச்சினுக்கு பதிலாக தான்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
2008-ஆம் ஆண்டில் நடந்த இலங்கை சுற்றுப்பயணத்தில் சச்சின் காயமடைந்த பிறகு 12வது ஆட்டக்காரராக இருந்த கோலி அணியில் முதல்முறையாக இந்திய அணியில் இடம்பிடித்தார். அந்த போட்டியில் அவர் 12 ரன்கள் தான் எடுத்தார்.

பட மூலாதாரம், Ryan Pierse
ஆனால், அதன்பின் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோலி ஒரு தலைசிறந்த பேட்ஸ்மேனாக உருவெடுத்தது தனிக்கதை.
நடனத்தில் அசத்திய கோலி
மைதானத்தில் ஆக்ரோஷமான மற்றும் இலக்கே குறியான வீரராக கோலி இருந்தபோதிலும், நகைச்சுவை மற்றும் வேடிக்கைகளில் ஆர்வம் உள்ளவர். நண்பர்கள் மற்றும் மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் எடுக்கும் விதவிதமான செல்ஃபிகளை வெளியிடுவது, , பீல்டிங் செய்யும்போது சில பாலிவுட் பாடல்களுக்கு ஏற்ப நடன அசைவுகள் செய்வது என்று கோலி அமர்களப்படுத்துவார்.
2013இல் சாம்பியடன்ஸ் ட்ராஃபியை இந்தியா வென்றபோது, கங்க்ணம் பாணியில் நடனமாடி கோலி கொண்டாடினார். இந்தியா வென்றால் கோலி கங்க்ணம் பாணி நடனம் ஆட வேண்டும் என்று மேற்கிந்திய அணி வீரர் கிறிஸ் கெயில் விடுத்த சவாலுக்கு பதில்கூறும் வகையில் கோலியின் நடனம் அமைந்தது.

பட மூலாதாரம், Stu Forster
டெஸ்ட்,, ஒருநாள் மற்றும் , டி 20 மேட்ச் எனஎதுவாக இருந்தாலும் சரி, விராட் கோலி இந்த தலைமுறையின் விரல்விட்டு எண்ணக்கூடிய சிறந்த வீரர்களில் ஒருவர்.
சேஸிங் கிங் கோலி
பொதுவாக முதலில் பேட்டிங் செய்யும்போது இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடுவார்கள். ஆனால் இரண்டாவது பேட் செய்யும்போது சிறப்பாக சோபிப்பதில்லை என்ற கருத்தை தகர்த்தவர் கோலிதான். குறிப்பாக 2012இல் ஆஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்பு போட்டி தொடரில் இலங்கைக்கு எதிராக இந்தியா 40 ஓவரில் 320 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை. விராட் கோலி அன்று ஆடிய ஆட்டம் ருத்ர தாண்டவம் என்றே கூறவேண்டும்.
86 பந்தில் 133 ரன்களை அவர் குவிக்க, இந்தியா போட்டியில் வென்றது இது ஆரம்பம் மட்டுமே. அண்மையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடந்த ஒருநாள் தொடர் வரை சேஸிங்கில் தனது பங்களிப்பு மூலம் பல போட்டிகளில் இந்தியாவை வெற்றி பெறவைத்தவர் கோலி. அதனால் அவர் 'சேஸிங் கிங்' என்றழைக்கப்படுகிறார்.
நினைத்ததை முடிப்பவர் கோலி
தனித்துவமான சாதனையாளர் என்று கருதப்படும் ஒரு விளையாட்டு வீரரின் சிறப்பு தங்களால் முடியாது என்று கூறும் கருத்தை முறியடித்து காட்டுவதே. தொடர்ந்து அவ்வாறு சாதித்து காட்டியவர் கோலி .
அண்மையில் இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடருக்கு முன்பு , அந்நாட்டில் கோலியின் டெஸ்ட் சராசரி மிகவும் குறைவாக இருந்தது.
அவரால் இங்கிலாந்தில் உள்ள வேகப்பந்துக்கு சாதகமான பிட்ச்களில் சிறப்பாக ஆடமுடியாது. குறிப்பாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சை சமாளிக்க முடியாது என்று சில விமர்சகர்கள் தெரிவித்தனர்.

பட மூலாதாரம், Gareth Copley
ஆனால் அந்த தொடரில் மொத்தமுள்ள . 5 டெஸ்ட்களில் 590 ரன்களுக்கு மேல் எடுத்த கோலி தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவில் நடந்த தொடர்களிலும் அப்படித்தான், மிட்சல் ஜான்சன், மிட்சல் ஸ்டார்க் போன்ற பந்துவீச்சாளர்களை மிக சிறப்பாக கோலி எதிர்கொண்டார்.
தன் மீதான விமர்சனங்களுக்கு கோலி பதில்கூறுவது இப்படித்தான்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












