"பாக்டீரியக் கூட்டுமருந்து" ஆஸ்துமாவைத் தடுக்குமா?

பட மூலாதாரம், Science Photo Library
இளம்பிராயத்திலேயே நல்ல பாக்டீரியாக்களுக்கு நாம் பழகிக்கொண்டால் ஆஸ்த்மா நோயை ஆரம்ப கட்டத்திலேயே வளராமல் தடுத்துவிட முடியும் என்கின்றனர் கனடாவைச்சேர்ந்த விஞ்ஞானிகள்.
மனித உடலையே தம் வாழ்விடமாகக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான நுண்ணுயிரிகளை ஆராய்ச்சி செய்துள்ள இவர்கள் Science Translational Medicine என்ற மருத்துவ இதழில் இந்த விவரங்களை வெளியிட்டுள்ளனர்.
319 குழந்தைகளை சோதித்த இந்த விஞ்ஞானிகள், அவர்களின் உடல்களில் நான்கு வகையான பாக்டீரியாக்கள் இல்லாமல் இருந்தால், அத்தகைய குழந்தைகளுக்கு ஆஸ்த்மா வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கண்டறிந்துள்ளனர்.
சரியான நேரத்தில் சரியான பாக்டீரியாக்கள் நம் உடல்களில் இருத்தலே, ஒவ்வாமை மற்றும் ஆஸ்த்மா வராமல் தடுப்பதற்கான சிறந்த வழி என்கின்றனர் நிபுணர்கள்.
மனித உடலில், பாக்டீரியாக்கள், பூஞ்சை மற்றும் வைரஸ்கள், மனித செல்களைக்காட்டிலும் 10 மடங்கு அதிகமாக உள்ளன. இந்த அளவில் நுண்ணுயிரிகள் மனித உடலில் இருப்பதை "microbiome என்றழைக்கும் விஞ்ஞானிகள், இவை நம் உடல் நலனில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை என்றும் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், Thinkstock
இந்த ஆய்வை மேற்கொண்ட பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் வான் கூவர் குழந்தைகள் மருத்துவமனையை ச்சேர்ந்த ஆராய்ச்சிக் குழுவினர், மூன்று வயதில் ஆஸ்த்மா தாக்கும் அபாயத்தில் உள்ள குழந்தைகளின் உடலில், microbiome என்கிற பொதுச்சொல்லால் அழைக்கப்படும் ஒட்டுமொத்த நுண்ணுயிரிகளின் இருப்பின் எண்ணிக்கையை அந்தக் குழந்தைகள் மூன்று மாதம் நிறைவுற்ற போதும், ஒரு வயதையடைந்த நிலையிலும் ஒப்பிட்டுப்பார்த்தனர்.
இதில் எந்த குழந்தைகளின் உடம்பில் Faecalibacterium, Lachnospira, Veillonella மற்றும் Rothia (சுருக்கமாக Flvr) ஆகிய நான்கு வகையான பாக்டீரியாக்கள் மூன்று மாத வயதில் இல்லாமல் இருந்ததோ, அந்தக் குழந்தைகளுக்கு மூன்று வயதாகும் போது ஆஸ்த்மா நோய் தாக்குவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாக, அந்த குழந்தைகளுக்கு செய்யப்பட்ட மூச்சிழுப்பு மற்றும் தோல் ஒவ்வாமை குறித்த பரிசோதனைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
அதே சமயம் இந்த 4 வகையான பாக்டீரியாக்கள் ஒரு வயது நிரம்பப்பெற்ற பிள்ளைகளிடம் இல்லாமல் இருப்பதால் ஆஸ்த்மா நோய் வருவதற்கான ஆபத்துத் தெரியவில்லை என்று கூறும் ஆய்வாளர்கள், இந்த விஷயத்தில் குழந்தைகள் பிறந்த ஆரம்ப மாதங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று கூறுகின்றனர்.
இதன் அடுத்த கட்டமாக இந்த 4 பாக்டீரியாக்களின் கலவையை, இதுவரை எத்தகைய கிருமியும் தொற்றியிராத எலிக்குட்டிகளுக்கு செலுத்தியதில், அந்த எலிக்குட்டில்களின் சுவாசக்குழாயில் இருந்து வந்த வீக்கம் குறைந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், MICROPIA
குழந்தைகள் பிறந்து சில நாட்களே ஆகும் வேளையில் அவர்களின் உடலில் இந்த நன்மை பயக்கும் நான்குவகை பாக்டீரியக் கலவையை செலுத்துவதன் மூலம், அவர்களுக்கு ஆஸ்த்மா வருவதைத் தடுக்க முடியுமா என்பதே தங்களின் நீண்டகால இலக்காக இருக்கும் என்றும் தெரிவித்தார் இந்த ஆராய்ச்சிக் குழுவைச்சேர்ந்த பேராசிரியர் ஸ்டுவர்ட் டர்வி.
அதேசமயம் அந்த முயற்சிக்கு தாங்கள் இன்னமும் தயாராகவில்லை என்று கூறிய அவர், அந்த நான்கு பாக்டீரியாக்கள் குறித்து முழுமையாக ஆய்வுசெய்த பிறகே தாங்கள் அப்படியானதொரு முயற்சியில் இறங்கப்போவதாகவும், ஆஸ்த்மாவை ஒழிப்பதே தங்கள் இறுதி இலக்கு என்றும் தெரிவித்தார்.
எளிதாக எரிச்சல் மற்றும் வீங்கும் தன்மைகொண்ட சுவாசக்குழாய்களிலேயே ஆஸ்த்மா உருவாகிறது.
சமீப ஆண்டுகளில் ஆஸ்த்மாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பிரிட்டனில் பதினோறு குழந்தைகளுக்கு ஒன்று என்ற வீதத்தில் ஆஸ்த்மாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்த்மாவும் ஒவ்வாமையும் அதிகரித்து வருவதை விளக்கும் நோக்கில் "hygiene hypothesis", எனப்படும் நலவியல் கருதுகோள் ஒன்று முன் வைக்கப்படுகிறது.
இந்த கருதுகோளின்படி, முந்தைய தலைமுறையைப் போல குழந்தைகள் பிறக்கும் போதிலிருந்து தேவையான அளவில் நுண்ணுயிரிகளின் தாக்கத்திற்கு பழக்கப்படாமல், பொத்திப்பொத்தி வளர்க்கபடுவதால், அவர்களின் உடலின் நோய் எதிர்ப்பு கட்டமைப்பிற்கு, உடலுக்கு நல்லது செய்யும் பாக்டீரியாக்கள் எவை; தீங்கு உண்டாக்கும் பாக்டீரியாக்கள் எவை என்கிற வேறுபாட்டைக் கண்டறியக்கூடிய வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது என்கிற வாதம் முன் வைக்கப்படுகிறது.

பட மூலாதாரம், PA
சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகள் பிறப்பதாலும், குழந்தைகளுக்குத் தாய்ப்பால் புகட்டப்படாமல் இருப்பதாலும், அந்த குழந்தைகளின் உடலுக்குள் செல்லும் பாக்டீரியாக்களின் அளவு குறைந்துவிடுகிறது.
கர்ப்பிணிப் பெண்களுக்கும், பிறந்த குழந்தைகளுக்கும் நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள் அளிக்கப்படுவதாலும், குழந்தைகளின் உடலில் இருக்கும் நுண்ணியிரிகளின் எண்ணிக்கை பாதிக்கப்படுகிறது.
மனிதக்கழிவு நுண்ணுயிரிகளின் தாக்கத்தைக் கண்டு தான் பிரமித்து போய் உள்ளதாகக் கூறுகிறார் பிரெட் ஃபின்லே என்கிற மற்றொரு ஆராய்ச்சியாளர்.
மனித உடலின் நோய் எதிர்ப்பு கட்டமைப்பு என்பது மனிதரின் குதப்பகுதியில் முதலில் நிறுவப்படுவதாகவும், அதன் பிறகே உடலில் பிற பகுதிகளுக்கும் அதன் செயற்பாடுகள் விரிவுபடுத்தப்படுவதாகவும் ஆய்வின் தரவுகள் காட்டுவதாக தெரிவிக்கிறார் பிரெட் ஃபின்லே.
நம் உடல் நல்ல நுண்ணுயிரிகளின் தாக்கத்திற்கு எந்த அளவிற்கு உட்படுகிறதோ அதே அளவில் ஆஸ்த்மாவை எதிர்த்து நமக்கு பாதுகாப்பு கிடைக்கிறது என்பது பல ஆண்டுகளாக செய்யப்பட்ட ஆய்வுகள் மூல தெரியவந்திருப்பதகாக் கூறுகிறார் லாஸேன் பல்கலைகழகத்தைச்சேர்ந்த பேராசிரியர் பென்ஜமின் மார்ஸ்லான்ட்.

இதற்கு ஒரு சிறந்த உதாரணம், பண்ணையில் வளர்வதும், கறந்த பாலை அப்படியே குடிப்பதும் நுண்ணுயிரிகளை நமக்கு அதிக அளவில் சிறுவயதிலேயே அறிமுகப்படுத்தி ஆஸ்த்மாவை தடுக்க வல்லது என்கிறார்.
நார்ச்சத்து அதிகம் கொண்ட உணவு வகைகள் நுரையீரலில் வீக்கம் மற்றும் புண் ஏற்படுவதைக் குறைத்து, ஆஸ்த்மாவின் அறிகுறிகளை குறைக்க உதவுகிறது என்று அவரது ஆய்வும் அறிவுறுத்துகிறது.
முந்தைய ஆய்வுகள் எல்லாமே, ஒருவரின் உணவு, அவர் உடலில் இருக்கும் நுண்ணுயிரிகளின் அளவு மற்றும் குழந்தைகளின் முதல் ஆண்டு ஆகிய மூன்று காரணிகளுமே ஆஸ்த்மாவை கட்டுப்படுத்துவது அல்லது இல்லாமல் செய்வதில் முக்கிய காரணிகளாக இருக்கின்றன என்பதை உறுதி செய்வதாகவும் அவர் கூறினார்.
இந்த புதிய ஆய்வும் அதற்கு வலு சேர்ப்பதாக அமைந்திருப்பதாகவும், குழந்தைகள் பிறந்தவுடன் அந்த முதல் சில மாதங்கள் மிகவும் முக்கியமானவை என்பதை உறுதி செய்வதாகவும் கூறினார்.
இதுவரை செய்த ஆய்வுகள் அனைத்திலும், ஆஸ்த்மா மற்றும் ஒவ்வாமையை தடுப்பதற்கான பொதுக்காரணியாக இருப்பவை நுண்ணுயிரிகள் தான். எனவே, குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் சரியான நுண்ணுயிரிகள் செலுத்தப்படுவது மிக முக்கியம் என்றும் கூறுகிறார் அவர்.

பட மூலாதாரம், SPL
ஆஸ்த்மா ஒரு சிக்கலான நோய். நம் குதப்பகுதியில் உள்ள பாக்டீரியாக்களின் நுட்பமான சமநிலையே, நம் உடலின் நோய் எதிர்ப்பு கட்டமைப்பு எப்படி செயற்படும் என்பதைக் குறிப்பதாய் உள்ளது. மேலும் சிலருக்கு எவ்வாறு ஆஸ்த்மா நோய் உருவாகிறது என்பதைக் கண்டறிய உதவுகிறது என்கிறார் ஆஸ்த்மா யு கே என்கிற தொண்டு நிறுவனத்தைசேர்ந்த மருத்துவர் சமந்தா வாக்கர்.
அதே சமயம் ஆஸ்த்மா நோய்க்கான சிகிசைகள் மற்றும் நிரந்தரத்தீர்வு காணப்பட வேண்டுமென்றால், இந்த ஆய்வைத் தொடர்ந்து மேலும் பல ஆய்வுகள் தேவைப்படுவதாகக் கூறும் சமந்தா வாக்கர், அப்படி செய்தால் தான் குழந்தைபெறும் பெற்றோர்களுக்கு இதனைப்பற்றி அறிவுறுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.












