சாக்லெட் சாப்பிட்டால் பாலுணர்வு தூண்டப்படுமா? - சாக்லெட் கற்பிதங்கள்

சாக்லெட்
படக்குறிப்பு, சாக்லெட்

சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடுகின்ற சாக்லெட் சம்பந்தமாக மேற்குலகில் சில பொய்யான கற்பிதங்கள் உள்ளன.

நம்மில் பலர் தப்பென்று தெரிந்தும் தேடும் சுகம் சாக்லெட். சொல்லும்போதே வாயில் நீர் சுரக்கிறது இல்லையா? சாக்லெட் எல்லாம் சாப்பிடக்கூடாது வேண்டும் என்று டாக்டர் அறிவுறுத்தியிருந்தாலும், அது கண்ணில் பட்டால் பலருக்கு தங்களைக் கட்டுப்படுத்திக்கொள்வது கஷ்டம். அதன் சுவைக்காகவும் இனிப்புக்காகவும் நமது நாக்கு எப்போதும் அதை நாடும். ருசிகண்ட ஆட்களை ஏங்க வைக்கும் குணம் அதற்கு உள்ளது.

சாக்லெட்டில் அனந்தமைட் என்ற ஒரு ரசியானம் இருக்கிறது. கஞ்சா புகைக்கும்போது உடலுக்குள் சேருகின்ற ரசாயனங்களைப் போன்றதாம் இது.

கொஞ்சமான அளவில் நாம் சாக்லெட் சாப்பிடும்போது, நம்மை ஆசுவாசப்படுத்துகின்ற ஒரு உணர்வை அது தருவதாக புதிய ஆய்வு ஒன்று காட்டுகிறது.

சாக்லெட் சம்பந்தமாக பல பொய்யான கற்பிதங்கள் நூற்றாண்டு காலமாகவே இருந்துவருகின்றன.

சாக்லெட் சாப்பிட்டால் பாலுணர்வு தூண்டப்படும் என்றெல்லாம்கூட மேற்குலகில் சிலர் கருதுகின்றனர்.

பால் கலக்காத சாக்லெட்டை விட பால் கலந்த சாக்லெட்டில் கலோரி அதிகம் என பலருக்கு உள்ள புரிதல். இது உண்மையல்ல. பால் கலந்தது என்றாலும் சரி, பால் கலக்காதது என்றாலும் சரி, அவற்றில் கிட்டத்தட்ட ஒரே அளவான கேலரிகள்தான் உள்ளன. நூறு கிராம் சாக்லெட்டில் சுமார் 550 கேலரிகள் இருக்கின்றன.

தவிர சாக்லெட் சாப்பிட்டால் பருக்கள் வரும் என்றும் சிலர் சொல்வார்கள். ஆனால் அறிவியல் ரீதியில் அப்படி எதுவுமே நிரூபிக்கப்பட்டதில்லை.

சாக்லெட் சாப்பிட்டால் மைகிரெய்ன் தலைவலி வரும் என்று பலர் கருதுகின்றனர். சாக்லெட்டில் டைரமைன், ஃபீனைல்எதிலமைன் போன்ற அமினோ ஆசிட்கள் இருக்கின்றன. இவற்றால் மைக்ரெய்ன் தலைவலி தூண்டப்பட வாய்ப்பு உள்ளது. ஆனால் சாக்லெட்டால் உட்கொள்வதால் மட்டும் ஒருவருக்கு மைக்ரெய்ன் வரும் என்று சொல்வதற்கு இல்லை.

சாக்லெட் சாப்பிடுவதால் சதைபோடும் என்றும் பலரும் நம்புகின்றனர். சாப்பாட்டை வெளுத்துக் கட்டி விட்டு அதற்கும் மேல் சாக்லெட்டும் உட்கொண்டால் நிச்சயம் உடல் பெருக்கத்தான் செய்யும். ஆனால் ஆரோக்கியமான, அளவான சாப்பாட்டின் அங்கமாக கொஞ்சம் சாக்லெட் சாப்பிடுகிறோம், தவிர ஒரு நாளைக்கு முப்பது நிமிடம் என வாரத்தில் ஐந்து தடவை உடற்பயிற்சி செய்கிறோம் என்றால் சாக்லெட் சாப்பிடுவதால் உடல் பருமன் ஆக மாட்டோம்.

சாக்லெட்டை அளவாக எடுத்துக்கொள்ளும்போது அதனால் உடல் நலத்துக்கு சில நன்மைகள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

அன்டிஆக்ஸிடண்ட்ஸ் என்று சொல்லப்படுகின்ற இருதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் இரசாயனம் சாக்லெட்டில் உள்ளது.

சாக்லெட் சாப்பிட்டால் மனோநிலை ஆரோக்கியமாகும் - மூடு மேம்படும் - என்பதற்கான ஆதாரவும் எதுவும் இதுவரை நரம்பியல் விஞ்ஞானிகள் கண்ணில் பட்டிருக்கவில்லை.

ஆனால் ஏராளமான பெண்கள் சொல்கிறார்கள் என்றால் அது பொய்யாக இருக்குமா?