வைரம் கீறல்கூட போட முடியாத அளவு உறுதியானது, அதற்கு உள்ளேயே எழுத வழி செய்கிறது லேசர்

வைரத்தில் எழுத உதவும் லேசர்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பென் மோரிஸ்
    • பதவி, வணிக தொழில்நுட்ப ஆசிரியர்

நகைக்கடைக்காரரின் கண்ணாடி வழியாக சிறிய வைரத்தில் பொறிக்கப்பட்ட 'பிபிசி இலச்சினையை' (logo) நான் தேடினேன். ஆக்ஸ்போர்டைச் சேர்ந்த ஒப்சிடியா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட தனித்துவமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அந்த இலச்சினை பொறிக்கப்பட்டிருந்தது.

வைரத்தின் மேற்பரப்பில் ஊடுருவி அதன் அணுக்களைக் கையாள இந்தக் கருவி மட்டுமே சந்தையில் உள்ளது.

நான் தேடிய அந்த இலச்சினை அரை மில்லிமீட்டருக்கும் குறைவான அகலம் கொண்டது. ஒப்சிடியாவின் தயாரிப்பு துறை தலைவரான லூயிஸ் ஃபிஷின் வழிகாட்டல் இருந்தபோதிலும், அந்த லச்சினையை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.

"இது மிகவும் கடினம். இதைச் செய்பவர்கள் தேர்ந்த பயிற்சி பெற்றவர்கள்," என்கிறார் லூயிஸ் ஃபிஷ்.

வைரத்தின் உட்புறத்தில் எழுத ஏன் விரும்புகிறார்கள்?

"கண்டுபிடிப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை இந்தத் துறையில் இருக்கும் பெரிய விஷயம்," என்கிறார் ஒப்சிடியாவின் தலைமை நிர்வாகி ஆண்ட்ரூ ரிம்மர்.

பிபிசி இலச்சினை பொறிக்கப்பட்ட வைரம்

பட மூலாதாரம், OPYSDIA

படக்குறிப்பு, பிபிசி இலச்சினை பொறிக்கப்பட்ட வைரம்

தற்போது பயன்பாட்டில் இருக்கும் வைரங்களை அடையாளம் காணும் வழிகளை ஒப்சிடியாவின் தொழில்நுட்பத்தால் மேம்படுத்த முடியும் என்று அவர் நம்புகிறார்.

ஒரு வைரம் சுரங்கத்திலிருந்து எப்போது தோண்டி எடுக்கப்பட்டது, வெட்டுதல், மெருகூட்டுதல் என அடுத்தகட்ட செயல்முறை மற்றும் சில்லறை விற்பனையாளர் கைகளுக்கு செல்லும்வரை அதைக் கண்காணிப்பதற்கான முறைகள் ஏற்கனவே உள்ளன.

ஆனால், அந்தச் செயல்முறை துல்லியமாக இல்லை. தங்கள் வைரம் எந்தச் சுரங்கத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டது என்று பல நகை தொழிலாளர்களால் அடையாளம் காண முடியவில்லை என கடந்த ஆண்டு மனித உரிமைகள் கண்காணிப்பகம் விமர்சித்திருந்தது.

அரை மில்லிமீட்டருக்கும் குறைவான அகலம்
படக்குறிப்பு, இது கணினி திரைக்காட்சி. வைரத்தில் பொறிக்கப்பட்டிருந்தஇந்த இலச்சினை அரை மில்லிமீட்டருக்கும் குறைவான அகலம் கொண்டது.

மனித உரிமைகள் கண்காணிப்பக கருத்துப்படி, இது முக்கியமானது. ஏனெனில் தொழிலாளர் உரிமை மீறல்கள், வன்முறை மற்றும் பிற முறைகேடுகள் - தங்க மற்றும் வைரச் சுரங்கத்தில் பெரும் பிரச்னையாக உள்ளது.

சுரங்கங்களிலிருந்து எடுக்கப்பட்ட இயற்கையான வைரங்கள் மற்றும் இயந்திரங்களால் உருவாக்கப்பட்ட வைரங்களை வேறுபடுத்திப் பார்ப்பது முக்கியமான ஒன்றாக வைர விற்பனையாளர்களுக்கு மாறியுள்ளது.

ஆய்வகத்தில் வைரங்களை உருவாக்குவதற்கான தொழில்நுட்பம் மேம்பட்டுவரும் நிலையில், அவை சந்தையில் வேகமாக வளர்ந்துவரும் பிரிவாக உள்ளது.

ஆய்வகத்தில் உருவாக்கப்படும் வைரங்களைவிட இயற்கை வைரங்கள் மிகவும் விலை உயர்ந்தவை. எனவே அதை எடுத்துச் சொல்வதற்கு நம்பகமான வழி இருக்க வேண்டும்.

வைரத்தினுள் தரவை பதிப்பதன் மூலம், அதற்கு பாதுகாப்பை வழங்க முடியும் என்று ரிம்மர் கூறுகிறார். இந்தத் தரவுகளை நீக்குவது சாத்தியமற்றது. அதே நேரத்தில் இது எந்த வகையிலும் வைரத்தின் மதிப்பைக் குறைக்காது.

ஒப்சிடியாவின் தலைமை நிர்வாகி ஆண்ட்ரூ ரிம்மர்

பட மூலாதாரம், OPSYDIA

படக்குறிப்பு, ஒப்சிடியாவின் தலைமை நிர்வாகி ஆண்ட்ரூ ரிம்மர்

"வைர நகைகளை தயாரிக்கும் நபர்கள் இது இயற்கையானது, சரியான மூலத்திலிருந்து பெறப்பட்டது என நுகர்வோர்களிடம் காட்ட விரும்புகிறார்கள்," என்கிறார் ரிம்மர்.

ஒப்சிடியாவின் வைர கல்வெட்டு இயந்திரம், மிகப்பெரும் புகைப்பட நகல் இயந்திரத்தின் அளவை ஒத்தது. அதனுள் இருக்கும் அதிக ஆற்றல் கொண்ட லேசர், சிறிய அளவில் லேசர் வெடிப்புகளை வெளியிடும்.

இது மாதிரியான அதிக ஆற்றல் கொண்ட வெடிப்புகள் மூலம் வைரங்கள் மற்றும் பிற சிறிய கற்களை துல்லியமாகக் கையாள முடியும். எனினும், லேசரை வைரத்தின் மீது காட்டினால் மட்டும் போதாது. வைரத்தின் அமைப்பு லேசர் கற்றைகளை சிதறச் செய்ய வேண்டும்.

"லேசர் மூலம் செயலாக்குவதில் ஒளி ஊடுறுவக் கூடிய பொருட்களிலேயே வைரம்தான் மிகவும் கடினமான ஒன்று," என்கிறார் ரிம்மர்.

ஒப்சிடியா இயந்திரத்தில் லேசர் கற்றையின் அளவில் மாற்றம் செய்ய முடியும் என்பதால் இதைப் பயன்படுத்தி வைரத்தின் மேற்பரப்பில் ஒரு மில்லி மீட்டரின் கால் பகுதி வரை ஊடுருவ முடியும்.

தோராயமாக வைரத்தின் ஏதாவது ஒரு பகுதியில் பொறிப்பதற்குப் பதிலாக வாடிக்கையாளர் தேவைக்கேற்ப லேசர் கொண்டு துல்லியமாக உட்பொதிக்க முடியும்.

அதிநவீன நுண்ணோக்கி இன்றி எவராலும் பார்க்க முடியாத அடையாள எண்ணை வைரத்தில் பொதிக்க வேண்டும் என்றால் இந்தக் கருவி மூலம் வைரத்தின் மூலக்கூறு மட்டத்தில் மாற்றம் செய்யலாம்.

ஒரு நகை விற்பனையாளர் தங்கள் லச்சினை வெளிப்படையாக தெரியவேண்டும் என்று விரும்பினால், வைரத்தின் கார்பன் கட்டமைப்பில் பெரிய மாற்றங்களைச் செய்ய லேசரைப் பயன்படுத்தலாம்.

லேசர் தொழில்நுட்பத்தை மற்ற பயன்பாடுகளுக்கும் பயன்படுத்த முடியும் என்று ரிம்மர் நம்பிக்கை கொண்டுள்ளார்.

வைரத்திற்குள் மின்சுற்றுகளை உருவாக்குவதற்கான அணு அளவிலான மாற்றங்களைச் செய்ய லேசரைப் பயன்படுத்தலாம். கதிர்வீச்சைக் கண்டறிவதற்கான கருவிகளை உருவாக்குவதற்கு இது பயனுள்ளதாக இருக்கும். வைரத்தின் நீடித்த தன்மை இதில் முக்கிய பங்கு வகிக்கும்.

இத்தகைய மின்சுற்றுகளை குவாண்டம் கணினிகளிலும் பயன்படுத்தப்படலாம்.

குவான்டம் கணினிகள் தனித்தனி சிறிய பகுதிகளின் வித்தியாசமான குவான்டம் பண்புகள் மூலம் செயல்படுகின்றன. அவை உருவாக்க கடினமாகவும், இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளன. ஆனால் வைரங்கள் நைட்ரஜன் அணுக்களின் குவான்டம் பண்புகளை தனிமைப்படுத்தவும், பயன்படுத்தவும் நம்பிக்கைக்குரிய வழியை வழங்குகின்றன.

ஒப்சிடியாவின் செயல்முறை வைரத்திற்குள் சுற்றுகளை உருவாக்கவும் பயன்படுகிறது

பட மூலாதாரம், OPSYDIA

படக்குறிப்பு, ஒப்சிடியாவின் செயல்முறை வைரத்திற்குள் சுற்றுகளை உருவாக்கவும் பயன்படுகிறது

ஆனால், தற்போது வைர சரிபார்ப்பு பணிகளில் மட்டுமே ஒப்சிடியா கவனம் செலுத்தி வருகிறது.

"பாரபட்சமற்ற வகையில் வைரங்களை கண்காணிப்பதற்கான நடைமுறை தற்போது உருவாகிக்கொண்டு உள்ளது. ஆனால், தற்சமயத்தில் எந்த அமைப்பும் துல்லியமாக இல்லை. சுரங்கத்திலிருந்து கடைக்குச் செல்வதுவரை கண்காணிப்பதற்கான எந்த நடைமுறையும் அமல்படுத்தப்படவில்லை" என்கிறார் இஸ்ரேலைச் சேர்ந்த வைரத் தொழிலுக்கான ஆலோசகர் எடான் கோலன்.

டிஜிட்டல் பதிவேடு தொழில்நுட்பம் நகைத் துறையில் பரவலான ஒன்றாக மாறும் என்கிறார் கோலன்.

சுரங்கத் தொழிலாளர்கள் தங்கள் வைரங்களை தொழிற்சாலை வைரங்களில் இருந்து வேறுபடுத்திப் பார்ப்பதில் ஆர்வமாக இருப்பதால் சரிபார்ப்பு முறைகள் மேம்படப்போகிறது என்றும், தங்கள் நகைகள் சரியான வகையில் பெறப்பட்டதா என்பதை அறிய நுகர்வோர்கள் விரும்புவதாகவும் அவர் கூறுகிறார்.

காணொளிக் குறிப்பு, ஆமைகள் பேசுமா? இந்த ஆராய்ச்சி சொல்வது என்ன?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: