கொரோனாவால் அதிகரிக்கும் நீரிழிவு பிரச்சனை: 7.7 கோடி இந்தியர்களை பாதிக்கிறது

கொரோனா நோயாளி மாதிரிப் படம்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, கொரோனா நோயாளி மாதிரிப் படம்
    • எழுதியவர், செளதிக் பிஸ்வாஸ்
    • பதவி, பிபிசி இந்தியா செய்தியாளர்

கடந்த செப்டம்பர் மாதம், விபுல் ஷா கொரோனாவால் பாதிக்கப்பட்டு மும்பையில் ஒரு மருத்துவமனையில் 11 நாட்கள் தீவிர சிகிச்சையில் கழித்தார்.

நீரிழிவு நோய் இல்லாத விபுலுக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஸ்டீராய்டுகளை வழங்கினர்.

ஸ்டீராய்டுகள் கொரோனாவால் நுரையீரலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்கிறது. அதோடு வைரஸை எதிர்த்துப் போராடும் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் அதிகப்படியான இயக்கத்திற்குச் செல்லும்போது ஏற்படக்கூடிய சில சேதங்களையும் தடுக்க உதவுவதாகத் தெரிகிறது.

அதே நேரத்தில் ஸ்டீராய்டுகள் நீரிழிவு மற்றும் நீரிழிவு இல்லாத கொரோனா நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்து ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை உயர்த்துகின்றன.

47 வயதான விபுல் ஷா குணமடைந்து ஏறக்குறைய ஓராண்டு காலத்துக்குப் பிறகும், தனது ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த இன்னும் மருந்து எடுத்துக் கொண்டிருக்கிறார்.

"கொரோனாவில் இருந்து குணமடைந்த பிறகும் நீரிழிவு நோய்க்கு மருந்து எடுத்துக்கொள்ளும் என்னைப் போன்ற பலரை நான் அறிவேன்" என பங்கு வர்த்தகரான விபுல் ஷா கூறினார்.

நீரிழிவு நோய் வரைபடம்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, நீரிழிவு நோய் வரைபடம்

உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் ஆறில் ஒருவர் இந்தியர். உலக அளவில் நீரிழிவு நோயாளிகள் அதிகம் வாழும் நாடுகள் பட்டியலில் இந்தியா சுமார் 7.7 கோடி நீரிழிவு நோயாளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. 11.6 கோடி நோயாளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது சீனா.

கணைய சுரப்பி போதுமான இன்சுலினை உற்பத்தி செய்யாதபோது அல்லது உடல் உற்பத்தி செய்யும் இன்சுலினை திறம்பட பயன்படுத்த முடியாத போது ஏற்படும் இந்த நோயை, இன்னும் பலருக்கு பரிசோதனை செய்து கண்டுபிடிக்கப்படவில்லை என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இது ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகரிக்க வழிவகுக்கிறது. இது சிறுநீரகங்கள், கண்கள், இதயம் போன்ற உடல் உறுப்புகளை பாதித்து, கடுமையான உடல்நலக் குறைவை ஏற்படுத்துகிறது.

உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், இதயம், நுரையீரல் நோய் உள்ளவர்களை கொரோனா தீவிரமாக பாதிக்கலாம். இப்பட்டியலில் நீரிழிவு நோயும் அடக்கம்.

இப்போது கொரோனாவிலிருந்து குணமடைந்த ஏராளமான நோயாளிகள் புதிதாக கண்டறியப்பட்ட, முழு நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில் இருப்பதாக மருத்துவர்கள் அஞ்சுகின்றனர்.

ஏறக்குறைய 3.2 கோடி நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ள நிலையில், உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களை அதிகம் கொண்டுள்ள இரண்டாவது நாடாக இருக்கிறது இந்தியா.

ரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, ரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை

"கொரோனா பெரும்தொற்றுநோய் ஒரு முடிவுக்கு வந்த பிறகு இந்தியாவில் ஒரு பெரிய நீரிழிவு சுனாமியைத் தூண்டலாம் என்பது கவலைக்குரியது" என மும்பையைச் சேர்ந்த நீரிழிவு நிபுணர் மருத்துவர் ராகுல் பக்ஷ்சி என்னிடம் கூறினார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 8 - 10 சதவீத நோயாளிகள் உடலில் குணமடைந்து சில மாதங்களுக்குப் பிறகும் கூட, சர்க்கரை அளவு தொடர்ந்து அதிகமாக இருப்பதாகவும், அவர்கள் நிரிழிவு மருந்துகளை எடுத்து வருவதாகவும் கூறுகிறார்.

"சிலருக்கு நீரிழிவு நோய் வரும் நிலையில் உள்ளது. மற்றவர்கள் குணமடைந்து ஒரு வருடம் கழித்து கூட நீரிழிவு நோய்க்கு மருந்துகளை எடுத்து வருகிறார்கள்," என்று அவர் கூறினார்.

நீரிழிவு நோய் வரலாறு இல்லாத நோயாளிகளுக்கு கொரோனா நோய் தொற்று, நீரிழிவு நோயை ஏற்படுத்துகிறதா என உலகெங்கிலும் உள்ள மருத்துவர்கள் விவாதிக்கின்றனர்.

இது,கொரோனா சிகிச்சையில் ஸ்டீராய்டுகளைப் பயன்படுத்துவதால் இருக்கலாம் என அவர்கள் கூறுகிறார்கள். கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் அதிகப்படியான உந்துதலுக்குச் செல்லும் போது சைட்டோகைன் தாக்குதல் ஏற்படுகிறது. வைரஸ், இன்சுலினை உருவாக்கும் கணையத்தில் உள்ள உயிரணுக்களுக்கு தீங்கு விளைவிக்கிறது.

சர்க்கரை நோயாளிக்கு இன்சுலின் செலுத்தும் மாதிரிப் படம்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, சர்க்கரை நோயாளிக்கு இன்சுலின். சித்திரிப்புப் படம்.

பொதுவாக கொரோனாவிலிருந்து குணமடைந்த 12 - 18 நாட்களுக்குப் பிறகு கருப்புப் பூஞ்சை நோயாளிகளைத் தாக்குகிறது. மூக்கு, கண், சில நேரங்களில் மூளையை பாதிக்கும் இந்த பூஞ்சை தொற்றால் இந்தியாவில் 45,000 க்கும் அதிகமானோர் இந்தியாவில் பாதிக்கப்பட்டனர்.

127 நோயாளிகளில் 13 பேருக்கு "புதிதாக நீரிழிவு நோய்" இருப்பதை ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. அவர்களின் சராசரி வயது சுமார் 36. அவர்களில் ஏழு பேருக்கு கொரோனாவா பாதிக்கப்பட்ட போது கூட ஸ்டீராய்டுகள் அல்லது ஆக்ஸிஜன் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

"இந்த நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துள்ளது. இது வரவிருக்கும் ஆண்டுகளில் நீரிழிவு நோயைக் குறித்து கவலைப்பட வைக்கிறது" என கண் அறுவை சிகிச்சை நிபுணரும் ஆராய்ச்சியாளர்களில் ஒருவருமான மருத்துவர் அக்ஷய் நாயர் கூறினார்.

டெல்லி மற்றும் சென்னை ஆகிய இரு நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து 555 நோயாளிகளுக்கு நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில், கொரோனா தொற்றுக்கு பிறகு நீரிழிவு நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு, நீரிழிவு நோய் வரலாறு கொண்டவர்களை விட அவர்களது ரத்தத்தில் அதிக சர்க்கரை உள்ளது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நீரிழிவு நிபுணரும் இந்த ஆய்வின் இணை ஆசிரியருமான மருத்துவர் அனூப் மிஸ்ரா, கொரோனா மற்றும் நீரிழிவு நோய்க்கான தொடர்பு பற்றிய வளர்ந்து வரும் சான்றுகள் "சிக்கலான" காட்சியைக் கொடுக்கின்றன என்கிறார்.

ஹீமோகுளோபின் ஏ 1 சி என்றழைக்கப்படும் பரிசோதனையைப் பயன்படுத்தி, மூன்று மாத சராசரி ரத்த சர்க்கரை அளவைக் காணலாம். மருத்துவமனையில் கொரோனாவுக்கான சிகிச்சையில் அப்பரிசோதனையை மேற்கொண்ட போது, அந்த நோயாளிகள் புதிதாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நோயாளிகள் முன்பு நீரிழிவு பரிசோதனைகளை மேற்கொள்ளாமல், நோயாளிகளாகவே இருந்திருக்கலாம் அல்லது சிகிச்சையின் போது ஸ்டீராய்டுகள் வழங்கப்பட்ட பிறகு அவர்கள் நீரிழிவு நோயாளியாக மாறியிருக்கலாம்.

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கொரோனா வைரஸ்

மருத்துவமனையில் இருந்து வெளியேறிய பிறகு, சில நோயாளிகள் தங்களின் ரத்த சர்க்கரை அளவு இயல்பு நிலைக்கு திரும்புவதைக் கண்டனர். விபுல் ஷா போன்றவர்களுக்கு தொடர்ந்து ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதையே காட்டுகிறது.

"உடல் பருமன் மற்றும் குடும்ப வரலாறு காரணமாக இத்தகைய நோயாளிகள் நீரிழிவு நோய்க்கு ஆளாக நேரிட்டு இருக்கலாம் என்பது எங்கள் மதிப்பீடு" என மருத்துவர் மிஸ்ரா கூறினார்.

மிக அரிதாக ஒரு நோயாளிகள் குழு மட்டும் கடுமையான நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டார்கள், ஏனெனில் கொரோனா வைரஸ் அவர்களின் கணையத்தை சேதப்படுத்தியது. அத்தகைய நோயாளிகளுக்கு வகை 1 (இன்சுலின் உற்பத்தி ஆகாத உடல்கள்) மற்றும் வகை 2 (மிகக் குறைந்த அளவில் இன்சுலின் உற்பத்தியாகும் உடல்கள்) என இரு வகை நீரிழிவு நோயும் ஏற்படலாம்.

இன்சுலின் சுரக்கும் கணையம் உட்பட, கொரோனா வைரஸுக்கு இலக்காக உள்ளது என லண்டன் இம்பீரியல் கல்லூரியின் பேராசிரியர் கை ரட்டர் கூறுகிறார்.

"உடலின் மற்ற பாகங்களை விட கணையத்தில் கொரோனா வைரஸ் பல்வேறு ரெசிப்டார்களை பயன்படுத்துவதாகத் தெரிகிறது." என பேராசிரியர் ரட்டர் என்னிடம் கூறினார்.

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கொரோனா வைரஸ்

கொரோனாவில் இருந்து மீண்ட நோயாளிகளுக்கு ஏற்பட்டிருக்கும் நீரிழிவு நிரந்தரமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

"இந்தியக் கண்ணோட்டத்தில் உள்ள பெரிய பிரச்சனை என்னவென்றால், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பலருக்கு, மோசமான விளைவுகள் மற்றும் கொரோனாவினால் இறப்பு ஏற்படுவது கொரோனா சுமை குறைவாக உள்ள நாடுகளை விட அதிகமாக உள்ளது" என பேராசிரியர் ரட்டர் கூறினார்.

கொரோனா பெருந்தொற்றுநோய் முடிந்த பிறகு இந்தியா நீரிழிவு நோயின் பெருங்சுமையை தவிர்க்க முடியாமல் எதிர்கொள்ளும் என மருத்துவர்கள் நம்புகிறார்கள்.

இந்தியாவின் ஊரடங்குகள் அதிக எண்ணிக்கையிலான மக்களை வீட்டுக்குள்ளேயே வைத்திருக்கின்றன, அவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள். எடுத்துச் செல்லும் உணவை ஆர்டர் செய்கிறார்கள். மிக குறைந்த அளவிலேயே உடற்பயிற்சி செய்கிறார்கள். பலர் கவலை மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

"இதுபோன்ற நபர்களுக்குத் தான் நிறைய நீரிழிவு நோய் ஏற்படுவதை நான் பார்க்கிறேன். இது மற்ற எல்லாவற்றையும் விட என்னை மிகவும் கவலையடையச் செய்கிறது" என்கிறார் மருத்துவர் மிஸ்ரா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :