கொரோனா வைரஸ் தடுப்பூசி விநியோகம் உலகளவில் எந்த நிலையில் உள்ளது?

பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்து விநியோகம் என்று வரும் போது, பெரும்பாலான மக்கள் "எனக்கு எப்போது கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்" என ஒரு கேள்வியை முன் வைக்கிறார்கள். சில நாடுகள் மட்டுமே பிரத்யேகமாக சில இலக்குகளை வைத்திருக்கிறார்கள். மற்ற நாடுகளில் கொரோனா தடுப்பூசி வழங்குவது தொடர்பாக ஒரு தெளிவு இல்லை. சரி இப்போது நமக்கு என்ன தெரியும்?
உலகம் முழுக்க கொரோனா தடுப்பூசி செலுத்துவது என்பது வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான விஷயம்.
இதில் சிக்கலான அறிவியல் செயல்பாடுகள், பன்னாட்டு நிறுவனங்கள், முரண்படும் அரசாங்கங்களின் வாக்குறுதிகள், அதிக அளவில் அரசு அதிகாரிகளின் தலையீடு, வரையறைகள் என பல விஷயங்கள் இருக்கின்றன. அதாவது, உலக மக்களுக்கு, எப்போது, எப்படி கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும் என்பதைத் திட்டமிடுவது அத்தனைத் தெளிவாக இல்லை.
இது தொடர்பாக, எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட்டில் (இ.ஐ.யூ), உலகளாவிய முன்கணிப்பு மதிப்பீட்டு இயக்குநராக இருக்கும் அகதே டிமரய்ஸ் சில விரிவான ஆராய்ச்சிகளைச் செய்துள்ளார்.
உலக அளவில் கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தித் திறன், தடுப்பூசியை மக்களுக்குச் செலுத்தும் சுகாதார உள்கட்டமைப்பு, நாடுகளின் மக்கள் தொகை, நாடுகளால் கொரோனா தடுப்பூசிக்கு எவ்வளவு செலவழிக்க முடியும் என பல விவரங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டது இ.ஐ.யூ.
இந்த ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட பல விஷயங்களும், ஏழை மற்றும் பணக்காரர்கள் என்கிற வரிசையில் பொருந்திப் போவதாகத் தெரிகிறது. தற்போது பிரிட்டன் மற்றும் அமெரிக்காவுக்கு தாராளமாக கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கின்றன. அதற்குக் காரணம் அந்நாடுகள் கொரோனா தடுப்பூசி மேம்பாட்டுக்கு என அதிகம் முதலீடு செய்தது தான். எனவே கொரோனா தடுப்பு மருந்துகளைப் பெரும் நாடுகள் பட்டியலில் இந்நாடுகள் முதல் வரிசையில் நிற்கின்றன.
கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், பிரிட்டன் மற்றும் அமெரிக்காவுக்கு கொஞ்சம் பின் தங்கி இருக்கிறார்கள்.
பெரும்பாலான குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் இதுவரை கொரோனா தடுப்பு மருந்தை வழங்கத் தொடங்கவில்லை. இதில் சில ஆச்சர்யமான விஷயங்களும் இருக்கின்றன. உலக அளவில் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்படுவது எப்படி நடந்து வருகிறது என்பதைப் பாருங்கள்.
கடந்த ஆண்டின் இறுதியில், கனடா நாடு தனக்குத் தேவையான கொரோனா தடுப்பு மருந்தை விட ஐந்து மடங்கு அதிகமாக கொரோனா தடுப்பூசிகளை வாங்கியதற்கு, கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. ஆனால் அந்நாட்டுக்கு தடுப்பு மருந்து விநியோகத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
கனடா, ஐரோப்பிய நாடுகளில் செயல்பட்டு வரும் கொரோனா தடுப்பு மருந்து ஆலைகளில் முதலீடு செய்தது. அது தவறான முதலீடாகிவிட்டது.
ஐரோப்பிய மருந்து ஆலைகள் சப்ளை செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றன. அதோடு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து கொரோனா தடுப்பு மருந்துகளை ஏற்றுமதி செய்யத் தடை விதிப்போம் என அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது ஐரோப்பிய ஒன்றியம்.
ஐரோப்பிய ஒன்றியத்துக்குப் போதுமான கொரோனா தடுப்பு மருந்துகள் கிடைக்கும் வரை, கனடா நாட்டுக்குப் பெரிய அளவில் கொரோனா தடுப்பு மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படும் என்பது சாத்தியமில்லை என நான் நினைக்கிறேன்," என்கிறார் அகதே டிமரய்ஸ்.
ஆனால் சில நாடுகள் எதிர்பார்த்ததை விட சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.
இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் போது, உலக அளவில் தன் மக்களுக்கு கொரோனா தடுப்பு மருந்தைச் செலுத்தும் உலக நாடுகள் பட்டியலில் செர்பியா எட்டாவது இடத்தில் இருக்கிறது. இது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை விடவும் அதிகம். செர்பியாவின் இந்த வெற்றிக்கு, அந்நாடு கொரோனா தடுப்பு மருந்தைச் செலுத்தும் விதமும் ஒரு முக்கியக் காரணம். அதே நேரத்தில், செர்பியா வேசின் டிப்ளொமெசி என்றழைக்கப்படும், தடுப்பு மருந்தை வைத்து ராஜ தந்திர நடவடிக்கைகளாலும் பயனடைந்து வருகிறது. மத்திய ஐரோப்பாவில் ஆதிக்கம் செலுத்த ரஷ்யாவும் சீனாவும் தொடர்ந்து போரிட்டு வருகிறார்கள். அது வேசின் டிப்ளொமெசியாக எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. உலகில் செர்பியா உட்பட, வெகு சில இடங்களில் தான் ரஷ்யாவின் ஸ்புட்நிக் V மற்றும் சீனாவின் சினோஃபார்ம் மருந்துகள் கிடைக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
காகிதங்களில், செர்பிய மக்களுக்கு எந்த கொரோனா தடுப்பு மருந்து வேண்டும், பைசர், ஸ்புட்நிக், சினோஃபார்ம்... எனக் கேட்கப்படுகிறது. ஆனால் எதார்த்தத்தில் சினோஃபார்ம் தடுப்பு மருந்தே கொடுக்கப்படுகிறது. செர்பியாவில் சீனா செலுத்தும் ஆதிக்கம் நீண்ட காலத்துக்கு இருக்கலாம். தற்போது சீனவின் சினோஃபார்ம் தடுப்பு மருந்தை பயன்படுத்தும் நாடுகள், எதிர்காலத்திலும் தடுப்பு மருந்துகள் தேவைப்பட்டால், சீனாவை எதிர்பார்க்கலாம்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கூட சினோஃபார்மைத் தான் பெரிதும் நம்பி இருக்கிறது. இதுவரை அந்நாட்டில் செலுத்தப்பட்டிருக்கும் தடுப்பு மருந்துகளில் 80% சினோஃபார்ம் தான் செலுத்தப்பட்டிருக்கிறது. இது போக யூ.ஏ.இ-யில் சினோஃபார்ம் மருந்து உற்பத்தி ஆலையை கூட நிறுவிக் கொண்டிருக்கிறது.
"சீனா தன் தடுப்பு மருந்து உற்பத்தி ஆலைகளோடும், தேர்ந்த பணியாளர்களோடும் வருகிறது. எனவே இது, சீனாவுக்கு நீண்ட காலத்துக்கு ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பைக் கொடுக்கிறது. இந்த வசதிகளைப் பெறும் நாடுகள், எதிர்காலத்தில் சீனாவுக்கு எதிலும் மறுப்பு தெரிவிக்க முடியாத அளவுக்கு சிக்கலாகிவிடும்" என்கிறார் அகதே டிமரய்ஸ்.
உலகத்துக்கே கொரோனா தடுப்பு மருந்தை வழங்கும் வல்லமை கொண்ட நாடாக இருப்பதால், அந்நாட்டு மக்களுக்கு முதலில் கொரோனா தடுப்பு மருந்து கிடைத்துவிடும் என்று அர்த்தமல்ல.

பட மூலாதாரம், Getty Images
உலக அளவில் கொரோனா தடுப்பு மருந்தை அதிக அளவில் உற்பத்தி செய்யும் இந்தியா மற்றும் சீனாவில், 2022-ம் ஆண்டு இறுதி வரை போதுமான மக்களுக்கு தடுப்பு மருந்தைச் செலுத்தி இருக்க முடியாது என, இ.ஐ.யூ-வின் ஆராய்ச்சி கணித்திருக்கிறது. அதற்கு இரு நாடுகளிலும் இருக்கும் அதிக மக்கள் தொகை மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் பற்றாக்குறையைக் காரணமாகக் கூறுகிறது இ.ஐ.யூ.
இந்தியாவில், சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா என்கிற ஒரே ஒரு நிறுவனம் தான் பெரிய அளவில் கொரோனா தடுப்பு மருந்துகளைத் தயாரிக்கிறது. இந்த நிறுவனம் தான் உலகிலேயே மிகப் பெரிய கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தியாளர்.
கடந்த ஆண்டின் மத்தியில், இந்நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி ஆதார் பூனாவாலாவுக்கு `என்ன ஆயிற்று?` என அவரது குடும்பத்தினரே நினைக்கத் தொடங்கினார்கள். கொரோனா தடுப்பு மருந்து வேலை செய்யுமா என்று கூடத் தெரியாமல், பல நூறு மில்லியன் டாலர் சொந்தப் பணத்தை, கொரோனா தடுப்பு மருந்துகளில் முதலீடு செய்தார்.
கடந்த ஜனவரி மாதம், ஆக்ஸ்ஃபோர்டு மற்றும் ஆஸ்ட்ராசெனீகா இணைந்து தயாரித்த தடுப்பு மருந்து இந்திய அரசிடம் கொடுக்கப்பட்டது. இப்போது நாள் ஒன்றுக்கு 24 லட்சம் டோஸ் தடுப்பூசிகளைத் தயாரிக்கிறார் பூனாவாலா.
சீரம் இன்ஸ்டிட்யூட் தான் இந்தியாவுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கும் மிகப் பெரிய சப்ளையர்களில் ஒன்று. அதோடு இந்நிறுவனம், பிரேசில், மொராக்கோ, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கும் தடுப்பூசிகளை விநியோகித்து வருகிறது.
"ஒரு தடுப்பூசியைத் தயாரித்துவிட்டதால் அழுத்தம் குறைந்துவிடும் என்று நினைத்தென். ஆனால் இப்போது எல்லோரையும் திருப்திப்படுத்துவது தான், என் முன்னிருக்கும் மிகப் பெரிய சவால்" என்கிறார் பூனாவாலா.
"பல தடுப்பு மருந்து உற்பத்தியாளர்கள் இருப்பார்கள், விநியோகம் அதிகரிக்கும் என்று நினைத்தேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக 2021-ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டு வரை கூட, தடுப்பூசி விநியோகம் அதிகரிக்காது போலத் தெரிகிறது" என்கிறார் பூனாவாலா.
உற்பத்தியை ஓர் இரவில் அதிகரித்துவிட முடியாது என்கிறார் ஆதார் பூனாவாலா.
"உற்பத்தியை அதிகரிக்க கால அவகாசம் தேவை. சீரம் இன்ஸ்டிட்யூட்டிடம் ஏதோ ரகசியம் இருக்கிறது என்கிறார்கள் மக்கள். ஆம் நாங்கள் செய்யும் வேலையை சிறப்பாகச் செய்கிறோம். ஆனால் அவை எல்லாம் ஏதோ ஒரு நொடியில் மந்திரக் கோலால் வந்துவிடவில்லை" என்கிறார்.
இப்போது சீரம் இன்ஸ்டிட்யூட் முன்னிலை வகிப்பதற்குக் காரணம், தன் உற்பத்தி ஆலையை கடந்த மார்ச் முதல் மேம்படுத்தி வந்தார் பூனாவாலா. அதோடு, தடுப்பூசிக்குத் தேவையான ரசாயனங்கள், கண்ணாடிக் குப்பிகள் போன்றவற்றை கடந்த ஆகஸ்ட் முதல் வாங்கி வைத்தார்.
தடுப்பூசி உற்பத்தியின் பல கட்டங்களில், எப்போது வேண்டுமானாலும், தவறு நடக்கலாம்.
"இதில் எந்த அளவுக்கு கலை இருக்கிறதோ அதே அளவுக்கு அறிவியலும் இருக்கிறது" என்கிறார் அகதே டிமரய்ஸ்
இப்போது உற்பத்தியைத் தொடங்கும் உற்பத்தியாளர்களால், பல மாதங்களுக்குப் பிறகு தான் தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்ய முடியும். அதே நிலை தான் கொரோனா வைரஸின் புதிய திரிபுகளை எதிர்கொள்ளப் பயன்படுத்தப்படும் பூஸ்டர்களுக்கும் பொருந்தும்.
இந்தியாவுக்கு முதலில் கொரோனா தடுப்பு மருந்தைக் கொடுக்க உறுதியளித்திருப்பதாகவும், அதன் பிறகு ஆப்பிரிக்க நாடுகளுக்கு கோவேக்ஸ் திட்டம் மூலம் தடுப்பூசிகளைக் கொடுக்க உறுதியளித்திருப்பதாகவும் கூறுகிறார் பூனாவாலா.
கோவேக்ஸ் என்கிற திட்டம், உலக சுகாதார அமைப்பு, கவி என்கிற தடுப்பூசிக் கூட்டமைப்பு, சென்டர் ஃபார் எபிடமிக் ப்ரிபேரட்னெஸ் போன்ற அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டது. உலகில் உள்ள எல்லா நாடுகளுக்கும் மலிவு விலையில் கொரோனா தடுப்பூசியைக் கிடைக்கச் செய்வது தான் இதன் நோக்கம்.
எந்த நாடுகளால் கொரோனா தடுப்பூசிகளைப் பெற முடியவில்லையோ, அந்நாடுகளுக்கு சிறப்பு நிதி மூலம் இலவசமாக வழங்கப்படும். மற்ற நாடுகள் பணம் செலுத்தி தடுப்பூசிகளை வாங்குவார்கள். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், தனியாக நாடுகள் பேரம் பேசி மருந்தை வாங்குவதை விட, ஒரு கூட்டாக சேர்ந்து மருந்து நிறுவனங்களோடு பேரம் பேசுவதால், நல்ல விலைக்கு தடுப்பூசியை வாங்கலாம்.
கோவேக்ஸ் திட்டமும் இந்த பிப்ரவரி இறுதிக்குள்ளிருந்து தடுப்பூசி விநியோகிகத்தைத் தொடங்க திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது.
அதே நேரத்தில், கோவேக்ஸ் திட்டத்தின் கீழ் இணைந்து இருக்கும் நாடுகள், தனியாக மருந்து நிறுவனங்களோடு பேரம் பேசுவதால், கோவேக்ஸ் திட்டத்தின் நோக்கம் கேள்விக்குள்ளாகிறது.
கிட்டத்தட்ட எல்லா ஆப்பிரிக்க நாட்டுத் தலைவர்களும், தனிப்பட்ட முறையில் கொரோனா தடுப்பூசியைப் பெற, தன்னோடு பேசியதாகக் கூறுகிறார் சீரம் இன்ஸ்டிட்யூட்டின் சி.இ.ஓ பூனாவாலா. சீரம் இன்ஸ்டிட்யூட்டிடம் இருந்து ஒரு டோஸ் தடுப்பூசியை 7 அமெரிக்க டாலர் என 18 மில்லியன் டோஸ் மருந்தைப் பெற்று இருப்பதாக உகாண்டா கடந்த வாரம் அறிவித்தது. கோவேக்ஸ் திட்டமோ ஒரு டோஸ் மருந்துக்கு 4 அமெரிக்க டாலரைச் செலுத்துகிறது.
உகாண்டா நாட்டோடு பேச்சு வார்த்தை நடத்துவது உண்மை தான், ஆனால் எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை என மறுத்திருக்கிறது சீரம் இன்ஸ்டிட்யூட்.

பட மூலாதாரம், Getty Images
ஆஸ்ட்ராசெனீகா மருந்துக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி கொடுத்த உடன், 200 மில்லியன் டோஸ் மருந்தை சப்ளை செய்வார் பூனாவாலா. மேலும் 900 மில்லியன் டோஸ் மருந்தைக் கொடுக்க உறுதியளித்திருக்கிறார். ஆனால் எப்போது கொடுக்கப்படும் எனக் கூறவில்லை.
கோவேக்ஸ் திட்டத்துக்கு மருந்துகளைக் கொடுக்க உறுதியளித்தாலும், அதில் சிக்கல்கள் எழுவதையும் ஆமோதித்திருக்கிறார் பூனாவாலா. கோவேக்ஸ் திட்டம் பல்வேறு தடுப்பூசி தயாரிப்பாளர்களோடு பேசி வருகிறது. ஒவ்வொரு தடுப்பு மருந்து உற்பத்தியாளரும் ஒரு விலையையும், விநியோகிப்பதற்கான கால அட்டவனையையும் கூறுகிறார்கள்.
எல்லாம் திட்டமிட்டப் படி நடந்தால் கூட, கோவேக்ஸ் திட்டம் ஒரு நாட்டின் 20 - 27 சதவீத மக்களைத் தான் சென்றடைய இலக்கு வைத்திருக்கிறது. "இது ஒரு சிறிய மாற்றத்தைத் தான் கொண்டு வரும், பெரிய தலைகீழ் மாற்றத்தைக் கொண்டு வராது" என்கிறார் அகதே.
சில நாடுகள் 2023-ம் ஆண்டில் கூட (அல்லது எந்த காலத்திலும்) முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படாமல் இருக்கலாம். என அகதே டிமரய்ஸ், இ.ஐ.யூ-வின் கணிப்பில் கூறியுள்ளார். "எல்லா நாடுகளிலும் கொரோனா தடுப்பூசி ஒரு முன்னுரிமைத் திட்டமாக இருக்காது. குறிப்பாக அதிக அளவில் இளைஞர்களைக் கொண்ட, அதிக அளவில் கொரோனா பரவாத நாடுகளுக்கு தடுப்பூசி வழங்குவது முக்கிய திட்டமாக இருக்காது".
இப்படிப்பட்ட சூழலில் என்ன பிரச்சனை என்றால், கொரோனா வைரஸ் எங்காவது ஓரிடத்தில் வளர முடியும் என்றால் கூட, தடுப்பு மருந்தை எதிர்கொள்ளும் தன்மையோடு தன் மரபணுக்களை மாற்றிக் கொண்டு, மீண்டும் கொரோனா வைரஸ் பரவும் என்பது தான்.
தடுப்பு மருந்துகள் உற்பத்தி வரலாறு காணாத வேகத்தில் நடந்து வருகிறது. ஆனால் 770 கோடி பேருக்கும் தடுப்பூசி வழங்க வேண்டும் என்கிற இலக்கு மிகப் பெரியது, இதுவரை இப்படிப்பட்ட ஒரு பெருமுயற்சி எடுக்கப்படவில்லை.
தங்களால் என்ன செய்ய முடியும் என, அரசாங்கங்கள் தங்கள் நாட்டு மக்களோடு உண்மையாக இருக்க வேண்டும் என நம்புகிறார் அகதே டிமரய்ஸ். "அடுத்த பல ஆண்டுகளுக்கு நம் நாட்டில் உள்ள எல்லா மக்களுக்கும் தடுப்பூசியை வழங்க முடியாது என ஒரு அரசு கூறுவது மிகவும் கடினம். எந்த ஒரு அரசும் முன் வந்து அப்படிக் கூற விரும்பமாட்டார்கள்" என்கிறார் அகதே டிமரய்ஸ்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












