கொரோனா வைரஸ்: காற்று வழியாக பரவுவது என்றால் என்ன? கட்டுப்படுத்துவது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
அண்மை காலம் வரை கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கு, அந்த வைரஸ் இருக்கும் பரப்புகளுடனான தொடர்புகளே தொற்று பரவ ஒரே அறிவியல் ரீதியிலான காரணமாக உலக சுகாதார நிறுவனம் கருதி வந்தது.
ஒருவர் இருமும் போதும், தும்மும் போதும் வெளியேறும் நீர் குமிழிகள் மூலம் இந்த வைரஸ் பரவுவதாக இதுவரை உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்த காரணத்தால் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நன்றாக கைகழுவுவதை உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
இந்நிலையில், காற்றில் உள்ள மிகச் சிறிய பொருட்கள் மூலம் கொரோனா வைரஸ் தொற்று பரவக்கூடும் என்பது தொடர்பாக சில அறிவியல் ஆதாரங்கள் வெளிவந்துள்ளதை உலக சுகாதார நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது.
கூட்டம் அதிகமுள்ள, முற்றிலும் மூடப்பட்ட மற்றும் மோசமான காற்றோட்ட வசதி உள்ள அமைப்புகளில் காற்று வழியாக இந்த வைரஸ் பரவலாம் என்பதை மறுக்க இயலாது என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.
மேற்கூறிய ஆதாரம் உறுதி செய்யப்பட்டால் உள்ளரங்குகளில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளில் மாற்றம் செய்யவேண்டிவரும்.
காற்று வழியாக பரவல் என்றால் என்ன?
காற்றில் சில மணி நேரங்களாக உலாவும் மிகச்சிறிய பொருட்களில் உள்ள வைரஸ் மற்றும் பாக்டீரியாவை நாம் சுவாசிக்கும்போது காற்று வழியாக வைரஸ் பரவுவது சாத்தியமாகிறது.
பெரும் பரப்பில் இந்த மிக சிறு துளிகள் பரவக்கூடும்.
காற்று வழியாக பரவும் தொற்றுநோய்களுக்கு காசநோய் மற்றும் நிமோனியா ஆகியவை உதாரணங்கள்.
கூட்டம் அதிகமுள்ள மற்றும் முற்றிலும் மூடப்பட்டதாக உள்ள அமைப்புகளில் காற்று வழியாக இந்த வைரஸ் பரவலாம் என்று வெளியிடப்பட்ட அறிவியல் ஆதாரத்தை உலக சுகாதார நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது.

பட மூலாதாரம், EPA
காற்றில் எவ்வளவு நேரம் வைரஸ் நீடிக்கும்?
செயற்கை முறையில் காற்றில் தூவப்பட்ட கொரோனா வைரஸால் குறைந்தது 3 மணி நேரம் காற்றில் உயிர்ப்புடன் நீடித்திருக்க முடிகிறது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
அதேவேளையில், பரிசோதனை கூடங்களில் நடக்கும் ஆய்வின் முடிவுகளுக்கு இயல்பான நடப்பு சூழல்களில் நடப்பவைக்கும் மாற்றங்கள் இருக்கும் என விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதி விரைவில் பரவும் வைரஸாக அறியப்படும் கொரோனா வைரஸ் காற்றில் பரவ வாய்ப்புள்ளது என்ற சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் வாஷிங்டன் அருகேயுள்ள ஒரு நகரில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகர் ஒருவரால், அவர் கலந்து கொண்ட நிகழ்வில் அவருடன் பாடிய குறைந்தது 45 பேருக்கு இந்த தொற்று பரவியதாக சந்தேகிக்கப்படுகிறது.
இவ்வாறு தொற்று பரவியவர்களில் பலர் சமூக இடைவெளி கட்டுப்பாடுகளை சரியாக கடைபிடித்துள்ளனர்.
இதேபோன்று ஒரு சம்பவம் கடந்த ஜனவரி மாதத்தில் சீனாவிலும் நடந்துள்ளது.
அங்குள்ள உணவுவிடுதியில் உணவருந்திய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் மூலமாக அவர் உணவருந்திய சமயத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த 9 பேருக்கு இந்த தொற்று பரவியுள்ளது.
அவ்வாறு பாதிக்கப்பட்ட ஒருவர் 6 மீட்டர் இடைவெளியில் இருந்தார் என்பதை விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.


கொரோனா வைரஸை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்?
எந்த ஒரு தொற்றும், அது பரவும் விதத்தை வைத்துதான் அந்த தொற்றை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கமுடியும்.
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த, வெதுவெதுப்பான நீர் மற்றும் சோப் மூலம் 20 வினாடிகளுக்கு கைகழுவதையும், சமூக இடைவெளியையும் உலக சுகாதார நிறுவனத்தின் தற்போதைய வழிகாட்டுதல் பரிந்துரைத்துள்ளது.
ஆனால் காற்று வழியாக கொரோனா வைரஸ் பரவுவது உறுதி செய்யப்பட்டால் இந்த வழிமுறைகளை கொண்டு மட்டும் கட்டுப்படுத்த இயலாது.
காற்று வழியாக கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளதாக கூறப்படும் புதிய ஆதாரத்தை அடிப்படையாக கொண்டு தற்போதைய வழிகாட்டுதல்களில், உலக சுகாதார நிறுவனம் எந்த மாற்றமும் செய்யவில்லை.

பட மூலாதாரம், Getty Images
இது உறுதி செய்யப்பட்டால், முகக்கவசம் பயன்படுத்துதல் இன்னமும் பரந்த அளவில் செயல்படுத்தப்படலாம். அதேபோன்று பார்கள், உணவு விடுதிகள் மற்றும் பொது போக்குவரத்து ஆகிய இடங்களில் சமூக இடைவெளி தொடர்பான கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்படலாம்.
ஆனால், இது உறுதி செய்யப்பட்டால் குளிர்சாதன வசதி பொருத்திய இடங்களிலும் மிக கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.
வழிகாட்டுதல்களில் மாற்றம் செய்ய உலக சுகாதார நிறுவனம் முடிவெடுத்தது ஏன்?
அண்மையில் 32 நாடுகளை சேர்ந்த 239 விஞ்ஞானிகள் கையெழுத்திட்டு உலக சுகாதார நிறுவனத்துக்கு ஒரு கடிதம் அனுப்பினர்.
அதில், காற்று வழியாக வைரஸ் பரவும் வாய்ப்புள்ளதால், கொரோனா வைரஸ் வழிகாட்டுதல்களை ஐ.நா. முகமை மேம்படுத்த வேண்டுமென அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
'இந்த புதிய ஆதாரத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்'' என உலக சுகாதார நிறுவனத்துக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் கையெழுத்திட்டவரும், கொலராடோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த வேதியல் ஆராய்ச்சியாளருமான ஜோஸ் ஜிம்னேஷ் தெரிவித்துள்ளார்.
''இது நிச்சயம் உலக சுகாதார நிறுவனத்தை தாக்கி நாங்கள் அனுப்பிய கடிதம் அல்ல. இது ஓர் அறிவியல் விவாதம்; ஆனால் நாங்கள் பலமுறை இது குறித்து விளக்கியும் அவர்கள் இது குறித்து கேட்க மறுப்பதால் , இதனை பொது மக்களுக்கு எடுத்துரைக்க உள்ளோம்'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த கடிதத்துக்கு பதில் அளிக்கும் விதமாக உலக சுகாதார நிறுவனத்தை சேர்ந்த நோய்த்தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாடு பிரிவின் தலைவரான பெனிடேட்டா அலிகிரான்சி கூறுகையில், கூட்டம் அதிகமுள்ள, முற்றிலும் மூடப்பட்ட மற்றும் மோசமான காற்றோட்ட வசதி உள்ள அமைப்புகளில் காற்று வழியாக இந்த வைரஸ் பரவலாம் என்பதை மறுக்க இயலாது என்று தெரிவித்தார்.
அதேவேளையில், இந்த புதிய ஆதாரங்கள் ஆரம்ப நிலையில் உள்ளதாகவும், இது குறித்து மேலும் விரிவான மதிப்பீடு தேவை என்று உலக சுகாதார நிறுவன அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
உலக சுகாதார நிறுவனத்தை சேர்ந்த டேவிட் ஹேமேன் என்ற மற்றொரு ஆலோசகர், மேலும் விரிவான ஆராய்ச்சிகள் மூலம் மேலும் தகவல்களை தங்களின் முகமை எதிர்பார்ப்பதாகவும், அவற்றை கொண்டு இந்த வைரஸை கட்டுப்படுத்த புதிய வழிமுறைகள் குறித்து முடிவெடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












