நீரிழிவு நோய் வராமல் தடுப்பது எப்படி? - அடிப்படைத் தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images
இன்று கடைபிடிக்கப்படும் உலக நீரிழிவு நோய் தினத்தை ஒட்டி இந்த கட்டுரை வெளியிடப்படுகிறது.
வீதிக்கு ஒருவர் என நிலை மாறி இப்போது, வீட்டுக்கொருவர் நீரிழவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
நீரிழிவு நோய் தொடர்பான சில அடிப்படை தகவல்களை இங்கே பகிர்கிறோம்
இரண்டு விதமான நீரிழிவு நோய்கள் உள்ளன.
முதல் வகை நீரிழிவு நோய் மற்றும் இரண்டாம் வகை நீரிழிவு நோய்.
முதல் வகை நீரிழிவு நோயை தடுக்க முடியாது மற்றும் அரிதாக வரக் கூடியது.
இரண்டாம் வகைதான் பெரும்பாலும் அனைவருக்கும் வருகிறது.
பிரிட்டன் கணக்குப்படி அந்நாட்டில் நீரிழிவு நோய் இருப்பவர்களில் ஏறத்தாழ 90 சதவிகிதம் பேருக்கு இந்த இரண்டாம் வகை நீரிழிவு நோய்தான் உள்ளது.
உடல் எடை அதிகரிப்பது, மாறி வரும் உணவுப் பழக்கம், நம் வாழ்க்கை முறைதான் இந்த வகை நீரிழிவு நோய்க்கு காரணம்.
இதில் ஒரு நல்ல விஷயமும் இருக்கிறது.
இதில் என்ன நல்ல விஷயம் என்கிறீர்களா? இந்த வகை நீரிழிவு நோயை 80 சதவிகிதம் தடுக்க முடியும்.
எப்படி தடுப்பது?
பிரதானம் உணவு பழக்கம்தான். ஆரோக்கியமான உணவை உட்கொண்டு உடல் எடையை கட்டுப்படுத்துவதன் மூலம் நீரிழிவு நோய் வருவதை தடுக்க முடியும்.
அரோக்கியமான உணவு என்றால்? அதிக நார்சத்து உடைய உணவு வகைகள்தான். நார்சத்துமிக்க காய்கறிகள் உடல் செரிமானத்தை அதிகரிக்கும், ரத்தத்தில் சர்க்கரை கலப்பதை தடுக்கும்.
பிரட், பாஸ்தா உணவு வகைகளில் அதிகளவில் மாவுசத்து உள்ளது. நீரிழிவு நோயை தடுப்பதற்கு இந்தவகை மாவுசத்து உணவு வகைகளை குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக பதப்படுத்தப்பட்ட கறி உணவினை அடிக்கடி உண்பதை தவிர்க்க வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
புரதசத்துக்கான மீன், முட்டை,பயறு வகை உணவினை எடுத்துக் கொள்ளலாம். அதேநேரம் மீன் வறுத்து உண்பதை தவிர்க்க வேண்டும்.
பழங்கள் எடுத்துக்கொள்வது நல்லதுதான். ஏனெனில் அவற்றில் அதிகளவிலான விட்டமின், மினரல் மற்றும் நார்சத்து உள்ளது.
கொழுப்பு சத்தும் நல்ல ஆரோக்கியமான உடல்நிலைக்கு நல்லது. ஆனால், அவற்றை அதிகளவில் எடுத்துக் கொள்ள கூடாது. ஆலிவ் எண்ணெய், மீன் கொழுப்பு உடலுக்கு நல்லது.
அதுபோல நீர்சத்து உடலில் எப்போதும் இருப்பதுபோல பார்த்துக் கொள்ள வேண்டும்.
தயிர் (யோகட்) வகைகளில் சர்க்கரை நிறைந்துள்ளது. இவற்றை உண்பவர்கள் தாங்கள் மிகவும் ஆரோக்கியமான உணவைதான் உண்டு வருவதாக பொது மக்கள் எண்ணிவிட வேண்டாம் என்கிறது ஆய்வொன்று.
உடற்பயிற்சி
மிகவும் அடிப்படையான தகவல்தான், உடற்பயிற்சி உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. இது உடல் எடையை கட்டுக்குள் வைப்பதுடன் ரத்தத்தில் சக்கரை அளவையும் கட்டுப்படுத்துகிறது.
இதற்கு நீங்கள் உடற்பயிற்சி கூடத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
தினசரி நம் நடவடிக்கைகளை நாம் மாற்றி கொள்வதன் மூலம் அதிக கலோரிகளை எரிக்கலாம்.
அதனை சிறு வரைப்படமாக இங்கே பகிர்கிறோம்.

அதேநேரம் அண்மைய ஆராய்ச்சி ஒன்று 5 தனித்தனி நோய்களே நீரிழிவு என்று கண்டறிந்துள்ளது.
நீரிழிவு என்பது 5 தனித்தனி நோய்களால் உருவாகுவது என்றும் ஒவ்வொரு வடிவத்திற்கும் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ரத்தத்தில் கட்டுப்படுத்த முடியாத சர்க்கரை அளவு இருப்பதைதான் நீரிழிவு என்று கூறுகின்றனர். இது பொதுவாக வகை 1, வகை 2 என இரு பிரிவாக பிரிக்கப்படுகிறது.
ஆனால், நீரிழிவுக்காக மருந்து எடுத்துக்கொள்வோரின் நிலை மிகவும் சிக்கலாக இருப்பதாக ஸ்வீடன் மற்றும் ஃபின்லாந்து ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
இது குறித்த செய்தியை விரிவாக படிக்க : 5 தனித்தனி நோய்களே நீரிழிவு என்பது தெரியுமா?
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :













