உங்களுக்கு அடிக்கடி தேஜாவு ஏற்படுகிறதா? இதுதான் காரணம்

உங்களுக்கு அடிக்கடி தேஜாவு ஏற்படுகிறதா? இதுதான் காரணம்

பட மூலாதாரம், Getty Images

நம் வாழ்கை செயல்களால் நிறைந்தது. நல்லதோ, கெட்டதோ பலருக்கு குறிப்பிட்ட விடயங்களை செய்யும்போது அதை ஏற்கனவே செய்ததை போன்றோ, பேசியதை போன்றோ தோன்றும். அதற்கு பெயர்தான் தேஜாவு.

ஆனால், தேஜாவு ஏன் ஏற்படுகிறது, அதற்கான காரணம் என்ன? என்று பார்ப்போம்.

1. பயணமும் தேஜாவுவும்

நீங்கள் பல்வேறு இடங்களுக்கு தொடர்ந்து பயணம் செய்துகொண்டே இருப்பவரா? நீங்கள் புதியதாக ஓரிடத்திற்கு செல்லும்போதும் ஏற்கனவே தெரிந்த இடத்தை போன்று தோன்றுவதற்கு நீங்கள் அதிகம் பயணம் செய்வதே காரணமாக இருக்கலாம் என்கிறார் தேஜாவு பற்றி ஆராய்ச்சி செய்துவரும் கிறிஸ் மௌலின்.

உங்களுக்கு அடிக்கடி தேஜாவு ஏற்படுகிறதா? இதுதான் காரணம்

பட மூலாதாரம், Getty Images

ஏனெனில், முன்னெப்போதும் செல்லாத இடத்தை பற்றி நீங்கள் நினைக்கும்போதோ அல்லது செல்லும்போதோ அதனுடன் ஏற்கனவே தொடர்புடைய எண்ணம் உங்களுக்கு உண்டாவதற்கு அதிகளவு வாய்ப்புள்ளது. ஆனால், உங்களது மூளையில் அதுகுறித்த செய்தி இருக்கும் என்று உறுதியாக கூறமுடியாது.

அதாவது, ஒருவர் எவ்வளவு பயணம் மேற்கொள்கிறாரோ, எவ்வளவு வேறுபட்ட புதிய அனுபவங்களை பெறுகிறாரோ, அவருக்கு அவ்வளவு அதிகமான அளவு தேஜாவு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

2. இளம் வயதினருக்கு அதிகளவில் ஏற்படுமாம்

உங்களுக்கு அடிக்கடி தேஜாவு ஏற்படுகிறதா? இதுதான் காரணம்

பட மூலாதாரம், Getty Images

நீங்கள் இளம் வயதுடையவராக இருந்தால் மற்றவர்களை விட உங்களுக்கு அதிகளவு தேஜாவு ஏற்படும். அதாவது, அதிகபட்சம் மாதத்திற்கு ஒருமுறை தேஜாவு ஏற்படலாம்.

உங்களது வயது தொடர்ந்து அதிகரிக்க அதிகரிக்க தேஜாவு ஏற்படும் கால இடைவேளையின் அளவு குறையும். அதாவது, நீங்கள் 40, 50 வயதுகளை கடக்கும்போது குறைந்து வரும் தேஜாவுவின் அளவு, 60 வயதை அடைந்தவுடன் வருடத்திற்கு ஒருமுறை என்ற நிலையை அடையும்.

3. சிலருக்கு நாள்முழுவதும் தேஜாவு ஏற்படும்

உங்களுக்கு அடிக்கடி தேஜாவு ஏற்படுகிறதா? இதுதான் காரணம்

பட மூலாதாரம், Getty Images

தேஜாவு என்பது பலருக்கு எப்போதாவது ஒருமுறை வரும் எண்ணமாக இருக்கலாம், ஆனாலும் சிலருக்கு அதுவே மிகப் பெரிய பிரச்சனையாக கூட மாறுவதற்கு வாய்ப்புண்டு.

பிரிட்டனை சேர்ந்த 22 வயதாகும் லிசா, தனக்கு சில முறை நாள்முழுவதுமே தேஜாவு ஏற்படுகிறதென்று கூறுகிறார்.

லிசாவுக்கு தொடர்ந்து அதிகரிக்க ஆரம்பித்த தேஜாவு, ஒரு குறிப்பிட்ட நிலையில் மோசமான கட்டத்தை அடைந்து அவரது உணர்ச்சிகளையே பாதித்துவிட்டது.

அதைத்தொடர்ந்து, தனக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலைக்கு ஒருவிதமான கால்-கை வலிப்பே காரணமென்று கண்டறிந்த லிசா அதற்கான சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டார்.

4. தேஜாவு-க்கும் மூளையின் செயல்பாட்டுக்கும் உள்ள தொடர்பு

உங்களுக்கு அடிக்கடி தேஜாவு ஏற்படுகிறதா? இதுதான் காரணம்

பட மூலாதாரம், Getty Images

அடிக்கடி தேஜாவுவினால் பாதிக்கப்பட்டவர்களின் உடலியக்கத்தை பரிசோதித்த விஞ்ஞானிகள் அதற்கான காரணத்தை கண்டறிந்துள்ளனர்.

அதாவது, நீங்கள் புதியதாக ஏதாவது ஒன்றை சந்திக்கும்போது, அது ஏற்கனவே நடந்த ஒன்றை போன்று உங்களுக்கு தோன்றுவதற்கு மூளையிலுள்ள 'டெம்போரல் லோப்' என்னும் பகுதியே காரணமென்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

தேவையற்ற நேரத்தில் மூளையின் அந்த பகுதி வேலை செய்வதற்கு தூண்டப்படும்போது, நீங்கள் சந்திக்கும் விடயம் ஏற்கனவே நடந்த ஒன்றை போன்ற போலியான நினைவலைகளை உண்டாக்குகிறது.

5. உண்மை-கண்டறியும் அமைப்பு

உங்களுக்கு அடிக்கடி தேஜாவு ஏற்படுகிறதா? இதுதான் காரணம்

பட மூலாதாரம், Getty Images

நமது மூளையில் செயல்கள் குறித்த நினைவுகளை பதிவுசெய்யும் 'டெம்போரல் லோப்' என்னும் பகுதியை மற்றுமொரு அமைப்பு மேற்பார்வை செய்வதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

உங்களது மூளை இயக்கத்தின் உண்மை-கண்டறியும் அமைப்பாக விளங்கும் அது தேஜாவுவினால் ஏற்பட்ட உணர்வு தவறு என்பதை சிறிது நேரத்திற்கு பின்னர் உணர்த்துவதற்கு உதவுவதாகவும் கருதப்படுகிறது.

6. எதிர்காலத்தை உணரமுடியுமென்று நினைக்கலாம்

உங்களுக்கு அடிக்கடி தேஜாவு ஏற்படுகிறதா? இதுதான் காரணம்

பட மூலாதாரம், Getty Images

உங்களுக்கு வலுவான தேஜாவு ஏற்படும்போது, எதிர்காலத்தை கூட உங்களால் கணிக்க முடியுமென்ற எண்ணம் ஏற்படும்.

நமது மூளையால் எதிர்காலத்தில் நிகழ்வது குறித்து யோசிப்பது சாத்தியம் என்பதால் இதுபோன்றதொரு எண்ணம் ஏற்படலாம் என்று கிறிஸ் மௌலின் கூறுகிறார்.

"செய்த தவறை மீண்டும், மீண்டும் செய்வதிலிருந்து உங்களை தடுப்பதற்கும், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை சிந்திப்பதற்கும்தான் நமது மூளையின் நினைவகம் உதவுகிறது" என்று அவர் மேலும் கூறுகிறார்.

ஒருவரது மூளையின் பல பகுதிகளில் அடுத்தடுத்து தேஜாவு ஏற்படும்போது, அது ஏற்கனவே மூளையில் பதிவாகியுள்ள நினைவலைகளை தூண்டி, எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது தெரிவதை போன்ற எண்ணத்தை உண்டாக்கும்.

7. தேஜாவு தெரியும், ஜமாய்வு தெரியுமா?

உங்களுக்கு அடிக்கடி தேஜாவு ஏற்படுகிறதா? இதுதான் காரணம்

பட மூலாதாரம், Getty Images

உங்களுக்கு தெரிந்த ஒன்றாக உள்ள ஒன்று உடனடியாக அந்நியமாக தோன்றினால் அதற்கு 'ஜமாய்வு' என்று பெயர்.

உதாரணமாக, நீங்கள் ஒருவரது முகத்தைப் பார்க்கும்போது தெரிந்தவரை போன்று தெரியும், ஆனால் சிறிதுநேரத்திலேயே யாரோ ஒருவரை போன்று நீங்கள் உணருவீர்கள்.

நீங்கள் குறிப்பிட்ட ஒன்றை எழுதும்போதும், எழுதிய பிறகும் ஏற்படும் மனமாற்றத்தையும் இதற்கு உதாரணமாக கூறலாம்.

8. தேஜாவு என்ற பெயர் எப்படி தோன்றியது?

உங்களுக்கு அடிக்கடி தேஜாவு ஏற்படுகிறதா? இதுதான் காரணம்

பட மூலாதாரம், Historic Images / Alamy Stock Photo

பிரெஞ்சு ஆன்மிக உளவியலாளரான எமெய்ல் போயிராக் என்பவர்தான் முதன்முதலாக தேஜாவு என்ற வார்த்தையை பயன்படுத்தினார்.

தவறான பரிச்சய உணர்வை குறித்து கடந்த 1876ஆம் ஆண்டு பிரெஞ்சு சஞ்சிகை ஒன்றிற்கு எழுதும்போது 'தேஜாவு' என்ற சொல்லாடலை எமெய்ல் போயிராக் பயன்படுத்தினார்.

நீண்டகாலத்திற்கு தேஜாவு என்பது அமானுஷ்ய அனுபவமாக கருதப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :