போப் பிரான்சிஸ் வட கொரியா வரவேண்டும்: கிம் ஜாங் உன் அழைப்பு

பட மூலாதாரம், Getty Images
வடகொரியாவுக்கு வருகை தரும்படி கத்தோலிக்க மதத் தலைவரான போப் பிரான்சிசுக்கு அந்நாட்டுத் தலைவர் கிம் ஜாங்-உன் அழைப்பு விடுத்துள்ளதாக தென் கொரிய அதிபர் அலுவலகம் கூறியுள்ளது.
அடுத்த வாரம் ஐரோப்பிய பயணம் மேற்கொள்ளவுள்ள தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் அதன் ஒரு பகுதியாக வத்திகான் சென்று வட கொரியத் தலைவரின் அழைப்பை முறையாக ஒப்படைப்பார்.
மறைந்த போப் ஜான் பால் ஒருமுறை வட கொரியாவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். ஆனால் இதுவரை எந்த போப்பும் வடகொரியா சென்றதில்லை. அதைப் போல வத்திகானுக்கும் வடகொரியாவுக்கும் தூதரக உறவு இல்லை.
"வடகொரியத் தலைநகர் பியாங்யாங்குக்கு போப் பிரான்சிஸ் வருகை தந்தால், அவரை ஆர்வத்துடன் வரவேற்கத் தயாராக இருப்பதாக" வட கொரியத் தலைவர் கிம் ஜாங்-உன் அளித்துள்ள செய்தியை போப்பை சந்திக்கும்போது மூன் கையளிப்பார் என்று தென்கொரியத் தலைவரின் செய்தித் தொடர்பாளர் கிம் யூ கியூம் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
வரிசையாக வட கொரியாவில் இருந்து வெளியாகும் இணக்கமான சமிக்ஞைகளின் தொடர்ச்சியாக தற்போது போப்புக்கான இந்த அழைப்பு வந்துள்ளது.

பட மூலாதாரம், Reuters
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் இந்த ஆண்டு ஒரு வரலாறு காணாத சந்திப்பை நிகழ்த்தினார் கிம் ஜாங்-உன். இது தவிர இரண்டு கொரிய நாடுகளுக்கும் இடையில் மூன்று உச்சி மாநாடுகள் நடந்துள்ளன.
கிம் ஜாங்-உன்னின் தந்தை கிம் ஜாங்-இல் நாட்டுக்குத் தலைமை வகித்தபோது போப் ஜான் பாலுக்கு அழைப்பு விடுத்தார். தாம் அங்கு செல்ல முடிந்தால் அது பெரிய அதிசயம் என்று ஜான் பால் கூறியதாக செய்திகள் வெளியாயின.
வட கொரியாவில் மத சுதந்திரம் உண்டா?
வடகொரியாவின் அரசமைப்புச் சட்டம் மத நம்பிக்கைகளுக்கான உரிமையை வழங்குகிறது. அரசுக் கட்டுப்பாட்டில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களும் அங்கு உண்டு.
ஆனால், இதெல்லாம் பெரும்பாலும் வெறும் கண்துடைப்பே என்றும் உண்மையில் அங்கு மத சுதந்திரம் இல்லை என்றும் அர்னால்டு ஃபேங் என்ற அம்னெஸ்டி இன்டர்நேஷனலை சேர்ந்த ஓர் ஆய்வாளர் கூறியுள்ளார்.
அங்கு கிறிஸ்தவர்கள் அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் தேவாலயங்களுக்கு வெளியே மத நடவடிக்கையில் ஈடுபட்டால் கடும் தண்டனைகளுக்கும், கொடுமைகளுக்கும் ஆளாவதாக கூறுகிறது 2014ல் வெளியான ஓர் ஐ.நா. அறிக்கை.
பிற செய்திகள்:
- பாலியல் புகார் சுமத்தப்பட்ட நீதிபதியிடம் மன்னிப்பு கோரினார் டிரம்ப்
- ஸ்பெயினில் குழந்தைகளைத் திருடிய 85 வயது மருத்துவர் விடுதலை
- புரதச்சத்து அதிகம் கொண்ட 'கரப்பான் பூச்சி' ரொட்டி
- பிரேசில் அதிபர் தேர்தல்: சர்ச்சையை கிளப்பிய வலதுசாரி வேட்பாளர் முன்னிலை
- "இதுவே இறுதி" - பருவநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












