பிரேசில் தேர்தல்: சர்ச்சையை கிளப்பிய வலதுசாரி வேட்பாளர் சயீர் பொல்சனாரூ முன்னிலை

Brazil election

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, சயீர் பொல்சனாரூ (இடது) மற்றும் ஃபெர்னாண்டோ ஹதாத்

பிரேசில் நாட்டு அதிபர் பதவிக்கு நடந்த தேர்தலின் முதல் சுற்று வாக்குபதிவில் வலதுசாரி வேட்பாளர் சயீர் பொல்சனாரூ வெற்றி பெற்றுள்ளார்.

முதல் சுற்றில் 50% வாக்குகளை பெறாததால் இடதுசாரி தொழிலாளர் கட்சி வேட்பாளர் ஃபெர்னாண்டோ ஹதாத் உடன் அவர் அக்டோபர் 28 அன்று நடைபெறவுள்ள இரண்டாம் சுற்று வாக்குபதிவில் மோதவுள்ளார்.

கிட்டத்தட்ட முதல் சுற்றில் பதிவான அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டுவிட்டன. அதில் சயீர் பொல்சனாரூ 46% வாக்குகளும், ஹதாத் 29% வாக்குகளும் பெற்றனர்.

பொல்சனாரூ-வின் தடாலடி பேச்சுகளையும் அதற்கான எதிர்ப்புகளையும் பற்றி அறிய: பிரேசில் ஜனாதிபதி வேட்பாளரின் அதிர்ச்சியூட்டும் 'வன்புணர்வு' கருத்து

இவர்கள் இருவரும் இரண்டாம் சுற்றில் சமநிலை அடைய வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

சயீர் பொல்சனாரூவின் சமூக தாராளவாத கட்சி அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவுடன் நடந்த மாகாண சபைகளுக்கான தேர்தலிலும் அதிக இடங்களைப் பெற்றுள்ளது, இடதுசாரிக் கட்சிகள் முன்னணியில் இருந்த பிரேசில் அரசியலில் நிகழ்ந்த மிகப்பெரும் மாற்றம் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Brazil election

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு நடைபெறுவது இடதுசாரி வேட்பாளர் ஃபெர்னாண்டோ ஹதாத்க்கு நம்பிக்கை அளித்துள்ளது

தென்னமெரிக்க கண்டத்தின் மிகப்பெரும் நாடான பிரேசிலில் அதிகரிக்கும் ஊழல் மற்றும் குற்றங்களுக்கு தற்போது ஆளும் தொழிலாளர் கட்சியே காரணம் என்று போல்சானாரோவின் சமூக தாராளவாத கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இடதுசாரிகளுக்கு வாக்களித்தால் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள வெனிசுவேலாவைப் போலவே நிலைமை மோசமாகும் என்று வலதுசாரிகள் தென்னமெரிக்க நாடுகளில் பிரசாரம் செய்து வருவது ஒரு தேர்தல் உத்தியாகியுள்ளது.

யார் இந்த போல்சானாரோ?

முன்னாள் ராணுவத் தளபதியான சயீர் பொல்சனாரூ தெரிவித்த கருத்துகள் பலவும் சர்ச்சையை கிளப்பியுள்ளன.

Brazil election

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சயீர் பொல்சனாரூ ராணுவத்தினர் மத்தியில் அதிக ஆதரவைப் பெற்றுள்ளார்

துப்பாக்கி உரிமம் பெறுவதை எளிமையாக்குவது, விசாரணைகளின்போது சித்திரவதை செய்வதை சட்டபூர்வமாக்குவது, மீண்டும் அந்நாட்டில் மரண தண்டனையை அமலாக்குவது உள்ளிட்டவை குறித்து அவர் பேசியுள்ளார்.

இனவெறிப் பேச்சு மற்றும் ஒருபாலுறவுக்கு எதிராக அவர் தெரிவித்த கருத்துகள் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்துள்ளன. கருக்கலைப்புக்கு எதிரான நிலைப்பாட்டையும் இவர் கொண்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் போலவே பாரிஸ் பருவநிலை மாற்றம் குறித்த ஒப்பந்தத்துக்கு எதிரான கருத்தை கொண்டுள்ள இவர், குறைவான வரி, அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்குதல், வெளிநாட்டவர்கள் பிரேசிலின் வளங்களை உரிமைகொள்வதை கட்டுப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து பேசியுள்ளார்.

ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவரான இவருக்கு பல மில்லியன் கிறிஸ்தவர்களின் ஆதரவு உள்ளது. பொல்சனாரூ பாரம்பரிய பண்பாட்டை பாதுகாப்பார் என்று அவர்கள் நம்புகின்றனர்.

முதல் சுற்று தேர்தல் வன்முறைகள் இன்றி அமைதியாக நடந்ததாக தேர்தல் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :