பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 2018இல் யாருக்கு?

William Nordhaus

பட மூலாதாரம், YALE

படக்குறிப்பு, வில்லியம் நார்தாஸ்

பருவநிலை மாற்றம் உண்டாக்கும் பொருளாதார தாக்கங்கள் குறித்த ஆய்வுக்காக அமெரிக்கப் பொருளாதார வல்லுநர்கள் வில்லியம் நார்தாஸ் மற்றும் பால் ரோமர் ஆகியோருக்கு 2018ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

புவி வெப்பமயமாதல் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்கு இடையே உள்ள தொடர்பு குறித்து ஆய்வு செய்ததற்காக அவர்களுக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

"இயற்கையை பாதிப்புக்கு உட்படுத்தாமல் பொருளாதார வளர்ச்சியை அடைவது எப்படி எனும் நாம் வாழும் காலத்தின் மிகவும் முக்கியமான மற்றும் அழுத்தமான கேள்விக்கு அவர்கள் பதில் அளித்துள்ளனர்," என்று இப்பரிசை அறிவித்துள்ள ராயல் சுவீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் கூறியுள்ளது.

அவர்கள் இருவருக்கும் ஒன்பது மில்லியன் சுவீடிஷ் குரோனா பரிசுத்தொகையாக வழங்கப்படும்.

ஏல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக உள்ள நோர்தாஸ் பொருளாதாரம் மற்றும் பருவநிலை ஆகியன எவ்வாறு பிணைந்துள்ளன என்பதை விளக்கும் மாதிரியை முதல் முறையாக உருவாக்கியவர் என்று ராயல் சுவீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் தெரிவித்துள்ளது.

பால் ரோமர்

பட மூலாதாரம், AFP/GETTY

படக்குறிப்பு, பால் ரோமர்

நியூயார்க் பல்கலைக்கழக பேராசிரியர் ரோமர் புதிய திட்டங்களையும் கண்டுபிடிப்புகளையும் உருவாக்குவதற்கான விருப்பத்தை பொருளாதார சக்திகள் எப்படி நிர்வகிக்கின்றன என்று நிரூபித்துள்ளார் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

சந்தைப் பொருளாதாரம் எப்படி இயற்கை மற்றும் அறிவு ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டுள்ளது என்பதை அறிவதற்கான மாதிரிகளை அவர்களின் ஆய்வு முடிவுகள் உருவாக்கியுள்ளன என்று அந்த அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக 1901 முதலே நோபல் பரிசு வழங்கப்பட்டாலும் ஸ்வெய்ர்யெஸ் ரிக்ஸ்பேங்க் பரிசு என்று அழைக்கப்படும் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 1969 முதல் வழங்கப்பட்டு வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :