'மாதவிடாய் காலத்தில் பெண்களின் வழிபாட்டு உரிமையை பறிக்க முடியுமா?'

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரீத் கராலா
- பதவி, பிபிசி குஜராத்தி
"மாதவிடாய் காலத்தில் உள்ள பெண்ணின் கையால் உணவு உண்டாலோ நீர் அருந்தினாலோ நீங்கள் இறந்துவிடுவீர்களா? மாதவிடாய் உள்ள பெண்களின் வழிபாட்டு உரிமையை உங்களால் எப்படி பறிக்க முடியும்," என்று கேட்கிறார் அனிகேத் மித்ரா. இவர் பெண்களின் மாதவிடாய் காலத்தை மையமாக வைத்து உண்டாக்கிய கணினி வரைபடங்கள் சமூக வலைத்தளங்களில் பெரும்பாலும் பகிரப்பட்டன.
மாதவிடாய் காலங்களில் பெண்கள் பின்பற்றும் சடங்குகளை இவர் நேரடியாகவே கண்டுள்ளார்.
அவர் வரைந்த படம் ஒன்றில் நேப்கின் மீது ரத்த நிறத்தில் தாமரை மலர்ந்து உள்ளது. அதன் கீழே 'சக்தி ரூபென்' என்று வங்க மொழியில் எழுதப்பட்டுள்ளது. அதன் பொருள் 'பெண்களின் சக்தி'

பட மூலாதாரம், ANIKET MITRA
"என் மனைவி மற்றும் சகோதரிகளை போலவே பல பெண்கள் விழாக்களிலும் பிற நல்ல நிகழ்ச்சிகளிலும் மாதவிடாய் காலங்களில் கலந்துகொள்ள முடிவதில்லை,"என்று கூறும் அனிகேத், அவர்கள் அப்போது மூலையில் முடிங்கிக்கிடக்க வேண்டியுள்ளது என்கிறார்.
"பெண்கள் குடும்ப நிகழ்வுகளிலும் வழிபாட்டிலும் கலந்துகொள்ள விரும்புகிறார்கள். ஆனால் அவர்களின் உடல்நிலையை காரணம்காட்டி அது மறுக்கப்படுகிறது. ஏன் இந்தத் தடை, " என்று அவர் வினவுகிறார்.
பெண் கடவுளின் மாதவிடாய்
"பெண்கள் கோயிலுக்குள் நுழைய ஆதரவாக இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் வீடுகளில் இருப்பவர்கள் மாறத் தயாராக இல்லை. சமூகமும் இதை விலக்கியே வைக்கிறது. இதனால் சமூகத்தை பின்னோக்கியே இழுக்கிறார்கள்."

பட மூலாதாரம், PUNDALIK PAI
அஸ்ஸாமில் காமக்கியா தேவி கோயிலில் பெண் கடவுளுக்கு மாதவிடாய் உண்டாகும்போது மூன்று - நான்கு நாட்கள் கோயிலின் கதவுகள் மூடப்பட்டு திருவிழா கொண்டாடப்படுவதை சுட்டிக்காட்டும் அவர் கடவுளின் அவதாரமாகக் கருதப்படும் பெண்களை விலக்கி வைப்பது குறித்து யாரும் கவலைப்படுவதில்லை என்கிறார்.
சமூக வலைத்தளத்தில் கேலி
மாதவிடாய் குறித்த தனது சமூகவலைத்தளப் பதிவுகளைப் படிப்பவர்கள் தம்மைக் கேலி செய்வதாகவும், மதத்துக்கு எதிரானவன் என்றும் துரோகி என்று அழைப்பதாகவும் கூறும் அனிகேத் தம்மை கடவுள் மீது நம்பிக்கை உள்ள மதத்தை பின்பற்றுபவர் என்று கூறுகிறார்.
"எங்கள் வீட்டில் பூசை செய்கிறோம், நான் மத விழாக்களில் கலந்துகொள்கிறேன். நான் எப்படி இந்து மதத்துக்கு எதிரானவனாக இருக்க முடியும்? என் பதிவுகளை அழிக்கக்கோரி கடுமையான அழுத்தம் கொடுக்கப்படுகிறது."

பட மூலாதாரம், Getty Images
"என்னைக் கேலி செய்பவர்கள் மோசமானவர்கள் அல்ல. அவர்கள் அறியாமையில் இருப்பவர்கள்," என்று கூறும் அனிகேத் பலரும் தமக்கு ஆதரவாக செய்திகள் அனுப்பி ஊக்கிவித்ததாக கூறுகிறார்.
மனைவியின் ஆதரவு
"பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை வெகு சில ஆண்களே பேசுகின்றனர். பெண்கள் நான்கு நாட்கள் அனுபவிக்கும் இதை ஆண்கள் ஒரு நாளாவது அனுபவிக்க வேண்டும். அப்போதுதான் பெண்களை எப்படி நடத்த வேண்டும் என்று உணர்வார்கள்," என்கிறார் அனிகேத்தின் செயல்களை முழுமையாக ஆதரிக்கும் அவரது மனைவி பிரியம்.
"மாதவிடாய் நேரங்களில் வீட்டு வேலை அலுவலக வேலை என அனைத்தையும் செய்தாலும் யாரும் இதற்கு அங்கீகாரம் அளிப்பதில்லை," என்கிறார் பிரியம்.
படத்தில் என்ன தவறு?
பாலியல் மருத்துவத்துறை பேராசிரியர் பிரகாஷ் கோத்தாரி இது குறித்து பிபியிடம் பேசினார்.
"கோயில்கள் உள்ளிட்ட மதம் சார்ந்த இடங்களில் பாலுறவைக் குறிக்கும் சின்னங்கள் இருப்பதைப் பார்க்க முடியும். ஒரு வேளை இது பாலியல் கல்விக்காகக் கூட இருக்கலாம். அந்தக் காலத்தில் பாலியல் என்பது மிகவும் இயல்பானதாகப் பார்க்கப்பட்டது," என்கிறார் கோத்தாரி.

பட மூலாதாரம், Getty Images
"பழங்கால இலக்கியங்களையும் நூல்களையும் பார்க்கும்போது பாலுறவு மனித வாழ்வின் அடிப்படையாகப் பார்க்கப்பட்டதை உணர முடியும். இந்த படங்களில் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் எதுவும் இருப்பதாக நான் கருதவில்லை," என அனிகேத் வரைந்த படம் குறித்து கோத்தாரி கூறுகிறார்.
"முதல்முறை பார்த்தபோது எனக்கும் கொஞ்சம் சங்கடமாகவே இருந்தது. தாமரை நம் பண்பாட்டில் மிகவும் மதிக்கத்தக்க ஒன்றாக இருப்பதால் அப்படித் தோன்றியது. ஆனால்,இதன்மூலம் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை உண்டாகவே அவர் முயல்கிறார்," என்கிறார் பெண்கள் பற்றிய சமூக ஆய்வில் ஈடுபடும் பேராசிரியை விபூதி படேல்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












