ஆஸ்திரேலியாவில் நிறம் மாறிய ஆரஞ்சு: அச்சமும், அறிவியல் விளக்கமும்

பட மூலாதாரம், NETI MOFFITT
ஆஸ்திரேலியாவில் பெண் ஒருவரின் வீட்டில் ஆரஞ்சுப் பழம் நீல நிறத்தில் மாறியது ஏன் என்பதற்கான காரணம் பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகு தெரியவந்துள்ளது.
பிரிஸ்பேனைச் சேர்ந்த நெட்டி மாஃபீட் எனும் பெண் தனது இரண்டு வயது மகன் ஒரு பகுதி மட்டுமே உண்ட ஆரஞ்சுப் பழம் அறுத்த சற்று நேரத்திலேயே நீல நிறமாக மாறியதால், ஆபத்தான உடல் நலக் கோளாறு ஏதும் உண்டாகலாம் என்று எண்ணி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகு நிறம் மாறியதன் காரணங்கள் தெரிய வந்ததாக குயின்ஸ்லாந்து மாகாணத்தின் தலைமை வேதியியலாளர் ஸ்டீவர்ட் கார்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.
ஆரஞ்சுப் பழங்களில் இயற்கையாகவே இருக்கும் ஆன்தோசியானின் (anthocyanins) ஆக்சிஜன் எதிர்ப்பொருள் புதிதாகக் கூர் தீட்டப்பட்ட கத்தியின் இரும்புடன் சேர்ந்து உண்டாகிய வேதியியல் மாற்றத்தால்தான் ஆரஞ்சுப் பழத்தின் நிறம் மாறியது ஆய்வுகள் மூலம் தெரியவந்தது.

பட மூலாதாரம், NETI MOFFITT
இதனால் பழத்தில் நச்சுத்தன்மை எதுவும் உண்டாகவில்லை என்றும் உடல் நலப் பாதிப்புகள் உண்டாகாது என்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மர்மம் விலகியுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக நெட்டி மாஃபீட் பிபிசியிடம் தெரிவித்தார்.
ஆரஞ்சின் மீது பேனா மையை ஊற்றியதுபோல அது காட்சியளித்தது என்று ஆஸ்திரேலியன் பிராட்கேஸ்டிங் கார்ப்பரேஷன் செய்தி நிறுவனத்திடம் அவர் முன்னர் கூறியிருந்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












