பங்கு மோசடி குற்றச்சாட்டு: டெஸ்லா நிறுவன தலைவர் பதவியிலிருந்து விலகுகிறார் எலான் மஸ்க்

எலான் மஸ்க்

பட மூலாதாரம், KEVORK DJANSEZIAN

படக்குறிப்பு, எலான் மஸ்க்

உலகின் முன்னணி மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவை தனியார் நிறுவனமாக்கும் முடிவு குறித்து வெளியிட்ட தொடர் ட்விட்டர் பதிவுகளால் ஏற்பட்ட பிரச்சனையின் விளைவாக அந்நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதுடன், அபராதம் செலுத்தும் நிலைக்கு எலான் மஸ்க் தள்ளப்பட்டுள்ளார்.

எலான் மஸ்க் மீது பங்கு மோசடி சார்ந்த குற்றச்சாட்டின் கீழ் வழக்கு விசாரணையை தொடங்கவுள்ளதாக அமெரிக்க பங்கு மற்றும் பரிவர்த்தனை அமைப்பு கடந்த வியாழக்கிழமை தெரிவித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவின்படி, டெஸ்லாவின் தலைமை செயலதிகாரியாக எலான் மஸ்க் நீடிக்கலாம், ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு அந்நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகியிருக்க வேண்டும்.

அதுமட்டுமல்லாமல், எலான் மஸ்க் மற்றும் டெஸ்லா நிறுவனம் ஆகிய இருதரப்பும் 20 மில்லியன் டாலர்கள் அபராதத்தை செலுத்த வேண்டும்.

பிரச்சனையின் பின்னணி என்ன?

கடந்த ஆகஸ்டு மாதம், டெஸ்லா நிறுவனத்தை பங்குச்சந்தையிலிருந்து நீக்கிவிட்டு தனியார் நிறுவனமாக்குவது குறித்து யோசித்து வருவதாக ட்விட்டரில் எலான் மஸ்க் பதிவிட்டிருந்தார்.

மேலும், இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்குரிய நிதி திரட்டப்பட்டுள்ளதாகவும், டெஸ்லா நிறுவனத்தின் ஒரு பங்குக்கு தலா 420 டாலர்கள் வழங்கப்படுமென்றும் மஸ்க் தெரிவித்திருந்தார். எலான் மஸ்கின் இந்த அறிவிப்பிற்கு பிறகு விலையுயர ஆரம்பித்த அந்நிறுவன பங்குகளின் மதிப்பு, சிறிது நேரத்தில் மீண்டும் சரிவடைய தொடங்கியது.

இந்நிலையில், எலான் மஸ்க்கின் மேற்கூறிய கூற்றுகள் "தவறானது" என்று அமெரிக்க பங்கு மற்றும் பரிவர்த்தனை கட்டுப்பாட்டு அமைப்பு குற்றஞ்சாட்டியது.

எலான் மஸ்க்

பட மூலாதாரம், Getty Images

"உண்மையில் பங்குக்கு விலை நிர்ணயம் செய்வது, ஒப்பந்தத்தின் முக்கிய கூறுகள் தொடர்பாக மஸ்க் எவரிடமும் பேசவே இல்லை" என்று அமெரிக்க கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

தொடக்கத்தில் இதுகுறித்து பதிலளித்திருந்த எலான் மஸ்க், இந்த நடவடிக்கை "நியாயமற்றது" என்றும், தான் "உண்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் முதலீட்டாளர் நலன்" ஆகியவற்றை கருத்திற்கொண்டு செயல்பட்டதாகவும் எதிர்வினையாற்றியிருந்தார்.

உடன்பாட்டின் கூறுகள் என்னென்ன?

அபாரதத்துடன், இனி டெஸ்லா நிறுவனத்தை பற்றி ட்விட்டரில் பதிவிடும்போது அந்நிறுவனத்தின் தகவல்தொடர்பு நடைமுறை விதிகளுக்கு உட்பட்டு மஸ்க் செயல்பட வேண்டும்.

டெஸ்லாவின் தலைவர் பதவிலிருந்து எலான் மஸ்க் வெளியேறுவதற்கு 45 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டை எழுப்பியபோது எலான் மஸ்க்கை அவர் பங்கு வகிக்கும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களின் இயக்குனர்கள் குழுவிலிருந்தும் நீக்குவதற்கு அமெரிக்க பங்கு மற்றும் பரிவர்த்தனை திட்டமிட்டிருந்தது. ஆனால், தற்போது எட்டப்பட்டுள்ள இந்த உடன்பாட்டின் மூலம் அவர் டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களின் தலைமை செயலதிகாரியாக தொடர முடியும்.

டெஸ்லா நிறுவனத்தின் புதிய "சுயாதீன தலைவர்" விரைவில் நியமிக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

யார் இந்த எலான் மஸ்க்?

தென்னாப்பிரிக்காவில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய எலான் மஸ்க் டெஸ்லா மற்றும் ராக்கெட் தயாரிப்பு நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸை தொடங்குவதற்கு முன்னர் உலகின் முன்னணி பணப்பரிமாற்ற இணையதள நிறுவனமான பேபாலிலிருந்து வெளியேறும் முன்பு அதிலிருந்து கணிசமான தொகையை பெற்றார்.

எலான் மஸ்க்

பட மூலாதாரம், Reuters

போர்ப்ஸ் நாளிதழின் உலக செல்வந்தர்கள் பட்டியலில் 19.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் எலான் மஸ்க் 25வது இடத்தை வகிக்கிறார்.

கடந்த சில மாதங்கள் மஸ்க்கிற்கு சோதனை காலமாக உள்ளதென்று கூறலாம்.

ஏனெனில், தாய்லாந்து குகையில் சிக்கிக்கொண்ட சிறுவர்களை மீட்ட குழுவில் இடம்பெற்றிருந்த முக்குளிப்பு வீரரொருவர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டதற்காக மஸ்க் மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த மாத தொடக்கத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற எலான் மஸ்க், நேரலையிலேயே கஞ்சாவை பயன்படுத்தியது சர்ச்சைக்குள்ளானது. அந்நிகழ்ச்சி பதிவுசெய்யப்பட்ட கலிஃபோர்னியாவில் கஞ்சா பயன்பாடு சட்ட்டப்பூர்வமானதாக இருந்தாலும், மஸ்க் மீது கண்டனங்கள் எழுந்ததுடன், டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு ஒன்பது சதவீதத்திற்கு மேல் குறைந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :