விவாதங்களில் வெல்வதற்கான மிகச்சிறந்த வழி எது தெரியுமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், டாம் ஸ்டேஃபோர்டு
- பதவி, பிபிசி
நீங்கள் தவறு செய்து விட்டீர்கள்... இதை அச்சத்தோடு சொல்கிறேன்... நீங்கள் எடுத்திருக்கும் நிலைப்பாடு தர்க்கரீதியாக சரியானது அல்ல... நான் சொல்வதை நீங்கள் கேட்கும் பட்சத்தில், நான் சொல்வது சரி.. .நீங்கள் சொல்வது தவறு என்பதை மகிழ்ச்சியுடன் விளக்குவேன்... நான் சொல்வதற்கு உடன்படத்தொடங்கிவிட்டது போல் உணர்கிறீர்களா?
பருவநிலை மாற்றம், மத்திய கிழக்கு நாடுகள் பிரச்சனை, எதிர்வரும் விடுமுறை கால திட்டங்கள் என எந்த பொருளில் பேசினாலும் எதிரில் இருப்பவர்களை நம் கருத்துடன் உடன்பட வைக்க மேற்கூறியது போன்ற யுக்தியைத்தான் நம்மில் பலர் கையாள்கிறோம்.
ஆனால் பல சமயங்களில் இது எதிர்மறையான பலனைதான் தருகிறது. எதிராளி தனது நிலைப்பாட்டை முன்னை விட வலுப்படுத்திக்கொள்ளவே இது போன்ற வாதங்கள் வழிவகுக்கின்றன.
ஆனால் இது போன்ற நிலை ஏற்படாமல் இருக்க சிறந்த வழிகள் இருப்பதாக கூறுகின்றன சில ஆய்வுகள். எதிரில் உள்ளவரின் பேச்சை கூர்ந்து கவனிப்பது மூலம் எளிதில் பணிய வைத்துவிடலாம் என்பது அதில் ஒன்று.
பத்தாண்டுகளுக்கு முன் யேல் பல்கலைக்கழகத்தின் லியோனிட் ரோசன்பெல்ட், ஃப்ராங்க் கீல் ஆகியோர் ஒரு கருத்தாக்கத்தை முன் வைத்தார்கள்.
ஒரு குறிப்பிட்ட விஷயத்தை பற்றி சிறப்பாக விவரிக்கும் ஆற்றல் இருப்பதாக நம்மில் பலர் நம்புகின்றனர். ஆனால் அதை விவரிக்கச் சொன்ன பின் அவர்கள் நினைத்த அளவு விவரிப்பு ஆற்றல் இல்லை என்பது அவர்களுக்கே புலப்படும் என்கின்றனர் லியோனிட்டும் ஃப்ராக்கும். தத்தமது விவரிப்புத்திறன் குறித்து தவறான தோற்றம் கொண்டிருத்தல் என்ற இந்த தன்மையை "The illusion of explanatory depth" என அவர்கள் கூறினர்.

பட மூலாதாரம், Getty Images
இதை ஆய்வுப்பூர்வமாக நிரூபிக்க ஆய்வு ஒன்றை நடத்தினார்கள். அதில் பங்கேற்றவர்களிடம் கழிவறை நீர் வெளியேறுதல், கார் ஸ்பீடோமீட்டர், தையல் இயந்திரம் வேலை செய்யும் விதத்தை பற்றி கேட்டால் அவை தொடர்பாக உங்கள் விவரிப்பு ஆற்றல் எப்படிப்பட்டதாக இருக்கும் என கேட்கப்பட்டு தம்மைத்தாமே மதிப்பிடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார்கள்.
பின்னர் அவற்றின் செயல்பாடுகள் குறித்து விளக்கிக் கூறச் சொல்லி அதிலிருந்து கேள்விகளும் கேட்டனர். ஆனால் பலர் தங்களை மதிப்பிட்டுக்கொண்ட அளவுக்கு அவர்களின் விவரிப்புத்திறன் இல்லை என்பது இதில் உறுதியானது.
இரண்டு நிலைகளுக்கும் இடையில் என்ன நடந்தது என ஆராய்ச்சியாளர்கள் விவாதித்தனர். இது போன்ற விஷயங்களில் நமக்கு இருக்கும் பரிச்சயத்தை வைத்து அது குறித்து நமக்கு நல்ல புரிதல் இருப்பதாக தவறான தோற்றத்தை உருவாக்கிக் கொள்கிறோம் என நிபுணர்கள் முடிவுக்கு வந்தனர். ஒரு விஷயம் குறித்து முடிவெடுக்கும்போது மனம் இது போன்ற குறுக்குப்பாதை முடிவுகளை நாட முற்படுகிறது என்ற முடிவுக்கு அவர்கள் வந்தார்கள்.

பட மூலாதாரம், Getty Images
ஒரு விஷயத்தை புரிந்துகொள்ள தேவையான முயற்சியை மேற்கொள்ளாமலேயே விரும்பியது நடக்க வேண்டும் என நாம் நினைப்பது ஏன்?
நமது புரிதலில் உள்ள குறைபாட்டை மறைக்க நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் முயற்சியே இது.
ஒன்றை பற்றி விவரிக்கும்போதுதான் அது பற்றி முழுமையும் தெரியவருகிறது. ஒரு மாணவர் குறுக்கு கேள்வி ஒன்று கேட்கும் போதுதான் நாம் கற்பிப்பதில் நமக்கே தெளிவு இல்லை என்பது தெரியவரும். நான் சொல்லிக்கொடுக்கும்வரை அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று ஆசிரியர்கள் சந்திக்கும் போது வழக்கமாக பேசிக்கொள்வார்கள். இது உலகெங்கும் உள்ள ஒன்று.
உங்களுக்கு நீங்களே விளக்கிக்கொள்ளுங்கள்...
விவரிப்பு ஆற்றல் குறித்த தவறான புரிதல் என்ற மனிதப் பண்பை பயன்படுத்தி தங்கள் வாதம் தவறு என்று பிறரை ஒப்புக்கொள்ளவைக்கும் யுக்தி வெகுவாக பயன்படும் என்கின்றன ஆய்வுகள்.
இந்த மனப்பாங்கு கழிவறை செயல்படும் விதத்தில் இருந்து அரசியல் விவகாரங்கள் வரை பயன்படும் என கூறுகிறார் கொலராடோ பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிப் பிரிவு பேராசிரியர் ஃபிலிப் ஃபெர்ன்பேக்.
இணையதளத்திலசில அமெரிக்கர்களை தேர்வு செய்து அவர்களிடம் அந்நாட்டின் சரச்சைக்குரிய கொள்கைகள் குறித்து கேட்கப்பட்டது.
இரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடை, மருத்துவ சேவைகள், கார்பன் உமிழ்வு என பல தலைப்புகளில் கேட்கப்பட்டது. இவ்விஷயங்கள் குறித்து கருத்து தெரிவிக்குமாறு கேட்கப்பட்டதுடன் அக்கருத்து தெரிவிக்க என்ன காரணம் என்றும் ஒரு பிரிவிடம் கேட்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
இத்தரப்பினர் தங்கள் கருத்தை தெரிவிக்கும் வாய்ப்பை தருவதுடன் அது எப்படி சரியானது என வாதிடும் வாய்ப்பும் தரப்பட்டது. மற்றொரு பிரிவினரிடம் தங்கள் கருத்துக்கான காரணங்களை கேட்பதற்கு பதில் அது எப்படி சாத்தியப்படும் என விரிவாக தெளிவாக விளக்கும்படி கேட்கப்பட்டது. இந்த ஆய்வில் தெரிய வந்த முடிவுகள் தெளிவாக இருந்தன.
கருத்திற்கான காரணங்களை தெரிவிக்குமாறு கேட்கப்பட்டவர்கள் தங்கள் நிலைப்பாட்டில் சோதனைக்கு பின்பும் உறுதியாக இருந்தனர். ஆனால் உங்கள் நிலைப்பாடு நடைமுறையில் எப்படி சாத்தியப்படும் என கேட்கப்பட்டவர்கள் சோதனைக்குப்பின் தங்கள் நிலைப்பாட்டை தளர்த்திக்கொண்டனர்.
கார்பன் உமிழ்வு வர்த்தக பிரச்சனையில் அதற்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ இருந்தவர்கள் தங்கள் நிலைப்பாட்டில்வெகுவாக இறங்கிவந்துவிட்டனர்.

இதன் மூலம் நமக்கு முக்கியமான ஒரு பாடம் தெரியவருகிறது. அடுத்தவரை நமது கருத்துக்கு உடன்பட வைக்க முற்சிக்கும்போது, அது எதுவாக இருந்தாலும் சரி.. நாம் இன்னும் நிறைய அணுமின் நிலையங்களை கட்ட வேண்டும்... முதாலாளித்துவத்தின் வீழ்ச்சி தவிர்க்க முடியாதது.. 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்களுடன் டைனோசர்களும் வாழ்ந்தன என எந்த கருத்தாக இருந்தாலும் சரி...ஒன்றில் நாம் உறுதியாக இருக்கவேண்டும்.
நாம் ஒன்றை ஏன் சரியானது என நினைக்கிறோம் என்பதை கன கச்சிதமாக தெளிவாக கூற வேண்டும். இல்லாவிட்டால் கடைசியில் உங்கள் மனத்தைத்தான் மாற்றிக்கொள்ள நேரிடும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












