மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திலிருந்து ஸ்மிரிதி இரானி மாற்றம்

இந்தியாவின் மனிதவள மேம்பாட்டு அமைச்சராக, எதிர்க்கட்சிகளின் பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு இலக்கான ஸ்மிரிதி இரானி, அந்த இலாகாவில் இருந்து ஜவுளித்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இது, ஆச்சரியமான மாற்றமாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.

பட மூலாதாரம், pib

அமைச்சரவை மாற்றத்தை ஒட்டி, பல்வேறு அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன.

புதிதாக 19 அமைச்சர்களை இணைத்து, பிரதமர் மோதி மத்திய அமைச்சரவையை மாற்றியமைத்துள்ளார். அமைச்சரவை இவ்வளவு பெரிய அளவில் மாற்றியமைக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.

மனிதவள மே்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி, அத்துறையிலிருந்து ஜவுளித்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். மனிதவள மேம்பாட்டு அமைச்சராக பிரகாஷ் ஜவடேகர் நியமிக்கப்பட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை நடந்த அமைச்சரவை விரிவாக்கத்தில் அவர் கேபினட் அமைச்சராகப் பதவி உயர்வு பெற்றார். அவர் இதுவரை சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையைக் கவனித்து வந்தார். ஸ்மிரிதி இரானி தனது கல்வித்தகுதி தொடர்பாக தனது வேட்பு மனுவில் தவறான தகவல்களைத் தெரிவித்தார் என்று எதிர்க்கட்சிகள் அவர் மீது குற்றம் சுமத்தின. அதுதொடர்பாக, நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டது. மேலும், ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலா தொடர்பாக ஸ்மிரிதி தெரிவித்த கருத்துக்களும் சர்ச்சையை ஏற்படுத்தின. இந்த சர்ச்சைகளில், ஸ்மிரிதியை பதவி நீக்கம் செய்யக் கோரி எதிர்க்கட்சிகள் பல நாட்கள் நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்கியது குறிப்பிடத்தக்கது.

பிரகாஷ் ஜவடேகர்

பட மூலாதாரம், MIB India

படக்குறிப்பு, பிரகாஷ் ஜவடேகர்

அப்போது எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்த பிரதமர் மோடி, அமைச்சரவை மாற்றத்தை ஒட்டி ஸ்மிரிதியின் இலாகாவை மாற்றியிருப்பது முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக இருந்த வெங்கைய நாயுடு, தகவல், ஒலிபரப்புத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அனந்தகுமார், நாடாளுமன்ற விவகாரங்களைக் கவனிப்பார்.

தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு சட்டம் மற்றும் நீதித்துறை வழங்கப்பட்டுள்ளது. இதுவரை சட்ட அமைச்சராக இருந்த சதானந்த கவுடா, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

புதிய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பருக்கு, வெளியுறவுத்துறை வழங்கப்பட்டுள்ளது.

நிதித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா, விமானப் போக்குவரத்துத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

புதிய ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சராக நரேந்திர தோமரும், நிதித்துறை இணை அமைச்சராக அர்ஜுன் மெக்வாலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் நாடாளுமன்ற விவகார இணை அமைச்சராக எஸ்.எஸ். அலுவாலியா நியமிக்கப்பட்டுள்ளார்.

அனுப்ரியா படேல், சுகாதாரத்துறை இணை அமைச்சராகவும், அஜய் தா்மதா ஜவுளித்துறை இணை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.