பிரிட்டன் விலகல்: தாக்கத்தை சமாளிக்க இந்தியா தயார் - அருண் ஜேட்லி

பிரிட்டன் விலகல்- தாக்கத்தை இந்தியா சமாளிக்கும் என்கிறார் அருண் ஜேட்லி
படக்குறிப்பு, பிரிட்டன் விலகல்- தாக்கத்தை இந்தியா சமாளிக்கும் என்கிறார் அருண் ஜேட்லி

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதால் ஏற்படும் உடனடி மற்றும் இடைக்காலத் தாக்கத்தை சமாளிக்க இந்தியா தயாராக இருப்பதாக இந்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியிருக்கிறார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்வதா வேண்டாமா என்ற கருத்தறியும் வாக்கெடுப்பில் , விலகவேண்டும் என்று பெரும்பான்மையான பிரிட்டிஷ் மக்கள் வாக்களித்திருப்பது உலகப் பொருளாதாரத்தில் ஏற்கனவே நிலவும் கொந்தளிப்பையும் நிச்சயமற்ற தன்மையையும் மேலும் அதிகரிக்கும் என்று அருண் ஜேட்லி குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், THINKSTOCK

கருத்தறியும் வாக்கெடுப்பு முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜேட்லி, உலக நாடுகள் அனைத்துமே இந்த முடிவால் ஏற்படக்கூடிய கொந்தளிப்பை சமாளிக்கத் தயாராக இருக்கவேண்டும் என்றும் அதன் இடைக்கால தாக்கம் குறித்து கவனமாக இருக்கவேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

இந்தியா தனது ஒட்டுமொத்தப் பொருளாதாரக் கட்டமைப்பைப் பாதுகாக்க உறுதியுடன் இருக்கிறது என்றும், ஸ்திரத்தன்மையைக் கடைப்பிடிப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது என்றும் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தின் அடிப்படைகள் சரியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

பட மூலாதாரம், Reuters

நிதிச் செலவு கட்டுப்பாடு மற்றும் குறைந்து வரும் பணவீக்கம் ஆகியவகளால் இந்தியப் பொருளாதாரம் பிரச்சனைகள் இல்லாமல் இருப்பதாகவும் ஜேட்லி கூறினார்.

இந்திய அரசும், ரிசர்வ் வங்கியும் மற்றும் பிற கட்டுப்பாட்டாளர்களும் இந்த விஷயத்தால் ஏற்படக்கூடிய எந்த ஒரு குறுகிய கால கொந்தளிப்பையும் சமாளிக்க நன்கு தயாராக இருப்பதகவும், ஒருங்கிணைந்து செயல்படுவதாகவும் அவர் கூறினார்.

இந்திய அரசின் இலக்கு,இதனால் ஏற்படக்கூடிய ஏற்ற இறக்கங்களை மென்மையாக்கி, பொருளாதாரத்தின் மீது ஏற்படும் விளைவுகளை குறுகிய காலத்தில் குறைப்பதாகும் என்று அவர் கூறினார்..

பட மூலாதாரம், AP

ஆனால், இடைக்காலத்தில், இந்தியா, உறுதியுடன் அதன் லட்சிய சீர்திருத்த திட்டமான பொருட்கள் மற்றும் சேவை வரிக்கான சட்ட மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்றும்,இது இந்தியாவின் இடைக்கால வளரும் சாத்தியக்கூறை 8-9 சதவீதம் என்ற அளவுக்கு எட்ட உதவும் மற்றும் எல்லோருக்குமான வளர்ச்சியை எட்டும் இலக்கை அடைய உதவும் என்று கூறினார் ஜேட்லி.