ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
எல்லை தாண்டிவந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 27 மீனவர்களை விடுவிக்கவும் இலங்கை வசம் உள்ள 72 படகுகளை விடுவிக்கவும்கோரி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை துவங்குவதாக ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

பட மூலாதாரம், EPA
இது தொடர்பாக பிபிசி தமிழோசையிடம் பேசிய தமிழ்நாடு கடலோர விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜேசுராஜா, இலங்கையால் பிடிக்கப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டாலும் மீட்கப்படாமல் நாசமான 18 படகுகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடும் தர வேண்டும் என்று கூறினார்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் 29ஆம் தேதியன்று சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிடப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.
தாங்கள் இலங்கைக்கு அருகில் மீன்பிடிப்பதை வட மாகாண மீனவர்கள் எதிர்க்கக்கூடாது என்றும் ஜேசுராஜா கூறினார்.








