எண்ணூர் நிலமீட்பு திட்டம்: சுற்றுச்சூழல் கெடுவதாகப் புகார்
எண்ணூர் துறைமுகத்திற்கு அருகில் இருக்கும் சதுப்பு நிலப் பகுதியில் புதிய நிலப்பகுதியை உருவாக்குவதற்காக, துறைமுகத்திலிருந்து தோண்டப்படும் மணல் அங்கு கொட்டப்பட்டு வருவதால், சூழல் முக்கியத்துவம் வாய்ந்த அப்பகுதி முழுமையாக சேதப்படுத்தப்பட்டுவருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

எண்ணூர் துறைமுகத்திலிருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது கொசஸ்தலையாறு கடலில் கலக்கும் எண்ணூர் முகத்துவாரப் பகுதி.
இங்கு உள்ள சதுப்பு நிலப் பகுதி சுற்றுச்சூழல் ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதி என்கிறார்கள் சூழல் ஆர்வலர்கள்.
இது குறித்து பிபிசியிடம் பேசிய சுற்றுச்சூழல் ஆர்வலரான நித்யானந்த் ஜெயராமன், எண்ணூர்த் துறைமுகத்திற்கான சரக்கு பெட்டக மையத்தை அமைப்பதற்காக இங்கிருக்கும் நீர்நிலைகள், சுரபுன்னை (மாங்குரோவ்) காடுகள் ஆகியவற்றை அழித்து, இருவிதங்களில் இங்கு நிலம் உருவாக்கப்பட்டுவருவதாகக் கூறுகிறார்.
சூழல் ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பகுதியில், பத்து கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் வடசென்னை அனல் மின்நிலையம், வல்லூர் அனல் மின் நிலையம் என இரண்டு மிகப் பெரிய அனல் மின் நிறுவனங்கள் இயங்கிவருகின்றன.

இந்த அனல் மின் நிலையங்களிலிருந்து வெளியேறும் சாம்பல் கழிவுகள் இந்தப் பகுதியில் நேரடியாகக் கொட்டப்படாவிட்டாலும், அதனைக் கொண்டு செல்லும் குழாய்களில் இருக்கும் பழுதின் காரணமாக, அப்பகுதி முழுவதும் நூற்றுக்கணக்கான ஏக்கர் அளவுக்கு சாம்பல் படிந்து காணப்படுகிறது.
எண்ணூரை ஒட்டியுள்ள பகுதியில் மழை நீர் வேகமாக வடிவதற்கு இந்த வடிநிலப் பகுதி மிக முக்கியமான காரணமாக இருக்கும் நிலையில், இந்தப் பகுதியில் புதிய நிலப்பகுதியை உருவாக்குவது எதிர்காலத்தில் வட சென்னையில் வெள்ள சேதம் ஏற்படுவதற்கு வழிவகுக்கும் என்கிறார்கள் சூழல் ஆர்வலர்கள்.

கடந்த செப்டம்பர் மாதம் வரை வளமான மாங்குரோவ் காடுகள் இருந்த பகுதியில் எண்ணூர் துறைமுகம் இப்படி ஒரு கட்டுமானப் பகுதியை ஏற்படுத்துவதற்கு தற்போதுதான் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி கோரியிருப்பதாகவும் அனுமதி இதுவரை கிடைக்காத நிலையிலேயே இந்தப் பணிகளை துறைமுக நிர்வாகம் மேற்கொண்டுவருவதாகவும் சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இது தொடர்பாக துறைமுக நிர்வாகத்தின் பதிலைப் பெற மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இந்த விவகாரம் குறித்து மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, விரைவில் இது குறித்து விசாரித்துப் பதிலளிப்பதாகத் தெரிவித்தார்.












